புதிய உள்ளூராட்சி சபைகள்; மார்ச் 15 முதல் அமர்வுகள் | தினகரன் வாரமஞ்சரி

புதிய உள்ளூராட்சி சபைகள்; மார்ச் 15 முதல் அமர்வுகள்

360 தொங்கு உறுப்பினர்களால் சபை உறுப்பான்மையில் சர்ச்சை

நமது நிருபர்
புதிய உள்ளூராட்சி சபைகள் மார்ச் மாதம் முதல் செயற்படவுள்ள நிலையில், அவற்றை உருவாக்குவதில் உள்ள சட்டச் சிக்கல்களை நீக்கும் வகையில், உள்ளூராட்சி சபைகளுடன் தொடர்புடைய ஏனைய சட்டங்களையும் தேர்தல் திணைக்களம் ஆராயவுள்ளது.

உள்ளூராட்சி சபை களை உருவாக்குவதில் உள்ள சட்டச் சிக்கல்களை நீக்கும் முகமாக மா நகர சபை கட்டளைச் சட்டம், நகர சபைக் கட்டளைச் சட்டம், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம்இலக்க பிரதேசபைச் சட்டம் என்பவற்றின் சரத்துக்களும், ஆராயப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹம்மட் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதில் உள்ள சட்டச் சிக்கல்களில் 25 சதவீத்துக்கும் குறைவான பெண் பிரதிநிதித்துவத்தினைக் ெகாண்ட சபைகளின் உருவாக்கம் குறித்தும் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீதமான பெண் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாகப் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. ஆனால் பெண்களின் இவ்வுரிமைக்காக போராடிவரும் சிவில் சமூக பிரதிநிதிகளும்,
பெண்களுக்கான அமைப்புகளும் அவ்வுரிமை விட்டுக் கொடுக்கப்படக்கூடாதென்பதில் தேர்தல் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் பெப்ரவரி 10 ஆம் திகதி நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேரதல்களின் பிரகாரம் புதிய உள்ளூராட்சி சபைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம்திகதி முதல் இயங்கவுள்ளன. முன்னதாக இச்சபைகள் மார்ச் மாதம் 6 ஆம்திகதி முதல் இயங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் விரைவில் வௌியிடப்படவுள்ளது.

இதேவேளை, பெப்ரவரி பத்தாந்திகதி நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தெரிவு செய்வதற்கு நியமிக்கப்பட்ட 8356 உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இன்னும் 360 தொங்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் இந்தத் தேர்தல் முறைமையின் கீழ் ஏற்பட்டுள்ளதென சுதந்திர தேர்தல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பப்பரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகன ஹெட்டியாராச்சியின் கருத்தின்படி கொழும்பில் ஆகக்கூடியதாக ஒன்பது தொங்கு உறுப்பினர்களும் ஏனையவர்கள் நாட்டின் ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கும் பரவலாக நியமிக்கப்படவுள்ளார்கள்.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்ைக 4486இல் இருந்து 8356ஆக இரு மடங்கு அதிகரித்த நிலையில், தொங்கு உறுப்பினர்களின் எண்ணிக்ைக 360 ஆக மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அவதானிகள் மத்தியில் முக்கிய பேசு பொருளாகவும் மாறிவிட்டுள்ளது.
 

Comments