தெற்கு அரசியல் கொதிநிலைக்கும் புதிய யாப்புக்கும் தொடர்பில்லை | தினகரன் வாரமஞ்சரி

தெற்கு அரசியல் கொதிநிலைக்கும் புதிய யாப்புக்கும் தொடர்பில்லை

வாசுகி சிவகுமார்

 

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து தெற்கில் ஏற்பட்டிருக்கும் கொதி நிலைக்கும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாதென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் உண்மையிலேயே இதயபூர்வமாக சிந்தித்துச் செயற்பட்டிருப்பார்களேயானால், இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை பிரதமருக்குப் பெற்றுக்கொள்வதில் காட்டிய அவசரத்தில் கொஞ்கம்கூட தமிழ்த்தேசிய இனத்தின் விடயத்தில் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியல் யாப்பின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களைமேற்கொள்ளுதல் மற்றும் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் என்னும் மூன்று விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்முதல் இரண்டு விடயங்களும் இருக்கின்ற அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டும் ஏறத்தாழ பெரும்பகுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது. மூன்றாவதாக உள்ள அரசியல் தீர்வு விடயத்தில் இன்னமும் அரசாங்கம் அக்கறையின்றி இருப்பதையே காட்டுகிறது என்றும் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி விற்பனை தொடர்பிலான முறைகேட்டிற்கு வழங்கிய முக்கியத்துவத்தை ஜனாதிபதி முந்தைய ஆட்சியாளர்களுக் எதிராக நடவடிக்கை எடுப்பதற்குக் கொடுக்கவில்லை. ஊழலும் மோசடிகளும் யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அதிலும் அனைத்திலும் பொதுமக்களின் வரிப்பணமும் சேமிப்பும் சூறையாடப்பட்டிருக்கையில் அதிக அக்கறை காட்டவேண்டியது மிகவும் அவசியமானதே. ஆனால் நடவடிக்கை எடுத்த நேரமும் முறையும்தான் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஒரு கட்சி கொண்டுவரும் தீர்வுத்திட்டத்தை மற்றொரு கட்சி புறக்கணித்து எதிராகச் செயற்படுவது வழக்கம். இம்முறை இரண்டு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கப் போவதாக கூறும் தீர்வுத்திட்டத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே குழப்பியடிப்பதற்காக மகிந்தவைப் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கான அனைத்து நீதிகளையும் தர்மங்களையும் நிலைநாட்டுவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அது இல்லாமல் உள்நாட்டிலேயே தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால் அது குதிரைக்கொம்பாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார். முழுமையான பேட்டி ஒன்பதாம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது. 

Comments