மக்களின் விமோசனத்திற்கு ஊடகத்தை ஓர் ஆயுதமாக்கியவர் டி.ஆர். விஜேவர்தன | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் விமோசனத்திற்கு ஊடகத்தை ஓர் ஆயுதமாக்கியவர் டி.ஆர். விஜேவர்தன

மர்லின் மரிக்கார்

 

இலங்கையின் சுதந்திரத்திற்கும், மக்களின் விமோசனத்திற்கும் ஊடகத்தை ஒரு ஆயுதமாகக் கொண்டு அளப்பரிய பங்களிப்பு நல்கிய டி. ஆர். விஜேவர்தனவின் 132 வது ஜனன தினத்தின் நிமித்தம் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்த இலங்கையின் விடுதலைக்காகவும் அதன் சுதந்திரத்திற்காகவும், இந்நாட்டு மக்களின் விமோசனத்திற்காகவும் பலர் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். அவர்களில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் உழைத்தவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். அவர்கள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத் தடம்பதித்த உதாரண புருஷர்களாக விளங்குகின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர் தான் டி. ஆர். விஜேவர்தன ஆவார்.

இவர் கொழும்பு, சேதவத்தை பகுதியில் வசித்து வந்த அன்றைய முன்னணி பலகை வர்த்தகரான துடுபாலககே தொன் பிலிப் விஜேவர்தன மற்றும் ஹெலனா வீரசிங்க தம்பதியினருக்கு மூன்றாவது புதல்வராக 1886 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி பிறந்தார் ஏழு சகோதரர்களையும் இரண்டு சகோதரிகளையும் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை சென் தோமஸ் கல்லூரியில் பெற்றார்..அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைத்து சட்டத்துறையில் கற்றார்.

இக்காலப்பகுதியில் ஆசியா முழுவதும் சுதந்திர வேட்கையும், தேசிய மறுமலர்ச்சி ஆர்வமும் பரவிக் காணப்பட்டது. அதே நிலைமை இந்தியாவிலும், இலங்கையிலும் பரவி இருந்தது..

இவ்வாறான சூழலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த டி. ஆர். விஜேவர்தனவினுள் தாயகத்தின் சுதந்திர வேட்கையும் அரசியல் ஆர்வமும் வேர் விடத் தொடங்கியது. இதற்கு ஒரு முக்கிய நிகழ்வு அடித்தளமாக அமைந்தது. அதனை அவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கர்ஷன் பிரபு வங்காளத்தை பிரிக்கும் யோசனையை முன்வைத்ததால் இந்தியாவில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. இந்நிலைமை தொடர்பாக பிரித்தானியருக்கு தெளிவுபடுத்தவென ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் அன்றைய இந்திய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் நாடு கடத்தப்பட்டிருந்த தேசப்பற்றாளரும், புத்திஜீவியுமான லால் லெஜிபட் ராய், வங்காளத்தின் வெண்கல மணியாக விளங்கிய சுரேந்திர நாத் பனர்ஜி, பெபிங்க் சந்திரபோஸ், போன்றோர் கலந்து கொண்டனர். அத்தோடு இக்கூட்டத்தில் உரையாற்றவென அரச யாப்பு பிரதிநிதியும், நாட்டுக்காகப் பல்வேறு அர்ப்பணிப்புக்களைச் செய்தவருமான புத்திஜீவி கோபால கிருஷ்ண கோக்கிலேயும் இங்கிலாந்துக்கு வந்திருந்தார். இவர்களது உரைகளைக் கேட்கவென பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். நானும் அவர்களில் ஒருவனாக இருந்தேன்

இக்கூட்டத்தில் உரையாற்றிய புத்திஜீவி கோபால கிருஷ்ண கோக்கிலே, “தமது நாடு இந்தியாவானாலும், இலங்கையானாலும் பரவாயில்லை. படித்த அனைத்து இளைஞர்களும் தம் நாட்டுக்காக ஏதாவது சேவை செய்ய வேண்டும். தாயகத்தின் சுபீட்சகத்திற்காக அர்ப்பணிப்புக்ளை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்“ என்று கூறினார். அந்த வசனங்கள் எனது உள்ளத்தைத் தொட்டன. அது தொடக்கம் நான் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். அத்தோடு தாய் நாட்டின் சுதந்திரம் குறித்தும் அதிக கவனம் செலுத்தலானேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய லிபரல் கழகத்தில் அரசியல் பிரச்சினைகள் குறித்து கோக்லேயுடன் அடிக்கடி டி. ஆர் விஜேவர்தன. கருத்து பரிமாறக் கூடியவராக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்க செயற்பாட்டாளராகவும் விளங்கிய கோக்லே தென்னாபிரிக்காவுக்கு சென்று வரவென டி. ஆர் விஜேவர்தனவை அழைத்துள்ளார். ஆனால் டி. ஆர். விஜேவர்தன அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் தாம் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாததை ஒரு குறையாகவே டி. ஆர் விஜேவர்தன பிற்காலத்தில் உணர்ந்தார். அது தொடர்பாக அவர் கவலையும் வெளியிட்டுள்ளார்.

இதேகாலப்பகுதியில் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இலங்கை இந்திய மாணவர்களின் நெருங்கிய நண்பராக எப். எச். எம். கோபர்ட் விளங்கினார். அவர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வாக்கு பெற்று விளங்கினார். அத்தோடு அவர் டி. ஆர். விஜேவர்தனவுடன் நெருங்கிப் பழகினார்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து இங்கிலாந்து வந்திருந்த ஈ. டப்ளியூ. பெரேராவை டி. ஆர். விஜேவர்தன இவரது அலுவலகத்தில் தான் முதன் முறையாகச் சந்தித்தார். இவர்கள் இருவரும் தான் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க மன்னன் பாவித்த சிங்க கொடி இங்கிலாந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இதனை இலங்கை மக்களுக்கும் எடுத்து கூறினர்.

இவ்வாறு பல்வேறு மட்டங்களிலும் தம் தாயகத்தின் விமோசனம் குறித்து கவனம் செலுத்தி வந்த டி.ஆர்.விஜேவர்தன, 1912 இல் தம் கல்வியை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பினார். அவர் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத் தொழிலில் ஈடுபட்டார். இக்காலப் பகுதியில் தான் உள்நாட்டு அரசியல் தலைவர்களுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். அச்சமயம் சட்டத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் அரசியல் தலைமைக்குத் தகுதி மிக்கவர்கள் பலர் இருப்பதையும் டி. ஆர் விஜேவர்தன நன்குணர்ந்திருந்தார். இருந்த போதிலும் அரசியலில் சிறந்து விளங்கிய சூழலில் இருந்து நாடு திரும்பி இருந்த டி. ஆர்.. விஜேவர்தன தேசியப் பிரச்சினை மிகச் சிறந்த முறையில் கையாளப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

ஆனால் இக்காலப்பகுதியில் இலங்கை தேசிய சங்கம் செயலிழந்து காணப்பட்டது. இவ்வாறான சூழலில் தான் டி. ஆர். விஜேவர்தன இச்சங்கத்தின் செயலாளராக 1913 ஆம் ஆண்டில் தெரிவானார். அவர் சங்கப் பணிகளை அர்ப்பணிப்போடு முன்னெடுத்தார். அதன் பயனாக அச்சங்கம் குருகிய காலத்தில் இந்நாட்டில் செல்வாக்கு மிக்க அமைப்பாக மாறியது.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு சமூக சேவை அமைப்பின் அவசியத்தை டி.ஆர். விஜேவர்தன உணர்ந்தார். இதன் நிமித்தம் அவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றோருடன் இணைந்து செயற்பட்டார். அதன் விளைவாக அவ்வமைப்பின் செயலாளர்களில் ஒருவரானார் டி. ஆர்.விஜேவர்தன.

இதேவேளை இவர் இங்கிலாந்தில் கற்றுக் கொண்டிருந்த போது இவரோடு நெருங்கிப் பழகிய கோபர்ட், “மக்கள் மத்தியில் புரிந்தணர்வையும் விழிப்பணர்வையும் ஏற்படுத்தவும், மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும் சுதந்திரமானதும் சுயாதீனதுமான ஊடகம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும் என்பது தொடர்பாக ஆலோசனையையும், அறிவுரையையும் டி. ஆர். விஜேவர்தனவுக்கு வழங்கி இருந்தார்.

இதேகாலப்பகுதியில் இலங்கையில் வெளிவந்த கொண்டிருந்த “சிலோன் இன்டிபென்டன்ட்“ என்ற பத்திரிகையை விற்கப் போவதாக அதன் உரிமையாளர் சேர் ஹென்றி வென்கியூலெம்பேர்க், கோர்பட்டுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில் இலங்கையின் சுதந்திர வேட்கையை மக்கள் மயப்படுத்தி மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்து வைத்தார் டி. ஆர். விஜேவர்தன. .அதாவது இவர் தம் சகோதரருடன் இணைந்து “தினமின“ என்ற சிங்கள மொழிப் பத்திரிகையை 1914 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்தார். இப்பத்திரிகை 1909 ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் இந்நாட்டில் வெளிவந்து கொண்டிருந்த போதிலும் அது நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்ததால் மூடப்படும் நிலைக்கு உள்ளானது. இந்த சந்தர்ப்பத்தில் தான் டி. ஆர். விஜேவர்தன இப்பத்திரிகையைக் கொள்வனவு செய்து வெளியிடத் தொடங்கினர். இவருக்கு சேர் பாரன் ஜயதிலக்க பெரிதும் உதவினார். ஆசிரிய தலையங்கங்களை மாத்திரமல்லாமல் கட்டுரைகளையும் கூட அவர் எழுதிக் கொடுத்தார்.

இதனூடாக தினமினவுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகரித்ததோடு சுதந்திர வேட்கையும் உத்வேகமடையத் தொடங்கியது. இவ்வாறான நிலையில் 1915 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி வெளியான தினமின பத்திரிகையின் நடுப்பக்கத்தில் வாளேந்திய சிங்கக் கொடியை முழுமையாகப் பிரசுரித்தனர். இதனூடாக ஒரு நூற்றாண்டு காலம் மறைக்கப்பட்டு இருந்த சிங்கக் கொடியை இலங்கை மக்கள் அறிந்த கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை மக்கள் ஆரம்ப காலம் முதல் சிங்கக் கொடியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் கண்டி இராச்சியத்தை கைப்பற்றி 1815 ஆம் ஆண்டில் கண்டி உடன்படிக்கை கைச்சாத்திட்ட பிரித்தானியர் மன்னர் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் பாவித்து வந்த சிங்கக் கொடியை இங்கிலாந்துக்கு எடுத்து சென்று செல்சி ரோயல் வைத்தியசாலையில் மறைத்து வைத்திருந்தனர். அக்கொடியை தினமினவில் பிரசுரித்து மக்கள் பார்க்க வாயப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 1918 ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி “சிலோன் டெய்லி நியூஸ்“ பத்திரிகையையும், 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி தினகரன் தினசரி பத்திரிகையையும் டி. ஆர். விஜேவர்தன வெளியிடத் தொடங்கினார்.

இருப்பினும் இவற்றின் மூலம் இலாபமீட்டுவதையோ சொத்து சேர்ப்பதையோ அவர் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக சுதந்திர வேட்கையைக் கட்டியெழுப்புவதே அவரது ஒரே இலக்காக இருந்தது. இதனை அவரது வார்த்தைகளிலேயே கூறுவதாயின், ”நான் சொத்துக்ளை அடைந்து கொள்வதற்காக பத்திரிகைத் துறையில் பிரவேசிக்கவில்லை.எனக்கு பணம் உழைப்பதே நோக்கம் என்றால் பத்திரிகைத் துறையை விடவும் வேறு பல வழிகள் உள்ளன. நான் இத்துறையில் பெரும் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றேன். பொது மக்கள் சேவையும் தேசிய மேம்பாடுமே எனது பத்திரிகைக் கலையின் நோக்கம் இந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக சிறு குழுவினரின் ஒத்துழைப்போடு ஆரம்பித்த இப்பணி இன்று ஸ்திர நிலையை அடைந்துள்ளது“ என்று 1943 இல் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தைத் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாக மக்களிடம் கொண்டு சென்று மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப ஊடகத்தை முறையாகப் பயன்படுத்தும் முறைமையை இந்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை டி. ஆர் விஜேவர்தனவையே சாரும். இதில் இருகருத்துக்கு இடமிருக்க முடியாது.

 

இலங்கையின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் விமோசனத்திற்காகவம் இவர் ஆற்றிய பங்களிப்புகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதன் காரணத்தினால் தான் இலங்கையின் தேசிய வீரராகவும் சுதந்திர செயற்பாட்டாளராகவும் மாத்திரமல்லாமல் இலங்கை அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியாகவும் இவர் மதிக்கப்படுகின்றார் என்றால் அது மிகையாகாது. 

Comments