புதிய தலைமைத்துவத்தை உருவாக்கினால் | தினகரன் வாரமஞ்சரி

புதிய தலைமைத்துவத்தை உருவாக்கினால்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு ஆணை கேட்டே போட்டியிட்டார்கள். அந்த ஆணையைக் கேட்பதில் முன்னணியிலிருந்தவர்கள் அந்தக் கட்சியின் மிகப்பெரும் தலைவர்கள். இவ்வாறான தலைவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் வரை கூட்டமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் எங்களால் செயற்பட முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஏற்பட்ட கடும் அதிருப்தியே எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குகளின் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் செய்ய முடியாது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையில் கூட்டுச் சேர்ந்து தமிழ்த்தேசியப் பேரவை எனும் பெயரில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் அரசியலில் இரண்டாவது சக்தியாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருப்பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்மக்கள் கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வழங்கியுள்ள ஆணை, வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலை, இணைந்து செயற்பட வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்புத் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் என்பன தொடர்பில் கஜேந்திரகுமார்

பொன்னம்பலம் தினகரன்

வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி;

நேர்காணல் -: செல்வநாயகம் ரவிசாந்
 

கேள்வி:- இந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணை மூலம் தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு சக்தியாக நீங்கள் உருவெடுத்திருக்கிறீர்கள். இவ்வாறானதொரு அரசியல் மாற்றத்தைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரென்ற வகையில் நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்:- தேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அணுகுமுறையில் எங்களுடைய ஆயுதப் போராட்டம் தவறிழைத்ததா?, ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திரம் என்ற பேரில் அரசாங்கத்துடன் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு வரும் கூட்டமைப்பின் அணுகுமுறை சரியானதா? என எமது மக்கள் குழப்பமடைந்திருந்தார்கள். இவ்வாறான நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இனியும் தாம் நேரடியாகப் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் நாம் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்திருந்தோம்.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கொண்டிருந்த கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம். இந்நிலையில் கூட்டமைப்பு ஒரே நிலைப்பாடுதானிருக்கிறது. நாங்கள் தான் தேவையில்லாமல் கூட்டமைப்பைப் பிரித்தோம் எனவும், நாங்கள் ராஜபக் ஷவிற்கு விலைபோய்விட்டதாகவும் எங்கள் மீது பொய்ப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தகைய நிலையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் போராட்டம் காட்டிச் சென்ற சின்னமென்ற வகையில் தமது ஆதரவை வழங்கினர். ஆனால், நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்த கருத்துக்களை எமது மக்கள் தொடர்ந்தும் தங்கள் மனதில் வைத்திருந்தனர்.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்கள் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் தலைவர் 2016 ஆம் ஆண்டு தமிழ்மக்களுக்குப் பொருத்தமான தீர்வு வந்தே தீருமென தேர்தல் பிரசாரத்தின் இறுதித் தருணத்தில் முன்வைத்த கருத்து எமது மக்கள் மத்தியில் எடுபட்ட காரணத்தினாலேயே அந்தத் தேர்தலில் எமக்குக் கிடைக்க வேண்டிய ஆசனங்கள் இல்லாமல் போனது.

2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் தோல்வியடைந்ததைக் கூட்டமைப்பு கருத்தில் கொள்ளவில்லை. ஏனெனில், தமிழ்மக்கள் மாற்றுக் கட்சி தொடர்பில் சிந்திப்பதற்கேனும் அந்தக் காலப் பகுதியில் தயாராக இருந்திருக்கவில்லை. ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி மூலம் எக்காரணம் கொண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமிழ்மக்கள் கைவிட மாட்டார்கள் என்கின்ற பிழையானதொரு நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அத்தகைய நம்பிக்கையால் ஏற்பட்ட துணிவு காரணமாக அவர்கள் அனைத்து எல்லைகளையும் மீறிச் செயற்பட்டார்கள். குறிப்பாகத் தமிழ்மக்கள் முட்டாள்கள். அவர்களிடம் ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி நம்ப வைக்கவும் முயன்றனர். அதுமாத்திரமன்றி இன்னொரு புறம் உட்கட்சிப் பூசல்களும் தலைவிரித்தாட ஆரம்பித்தன.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிமைக்கானதொரு அமைப்பல்ல. வேறு தரப்புக்களின் நலன்களுக்காக விலைபோயுள்ளதொரு அமைப்பென எமது மக்கள் தெளிவாக இனம் காண ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்தும் தமிழ்மக்களை ஏமாற்றுகின்றது எனவும், தமிழ்மக்களின் நலன் சார்ந்த அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதெனவும் பரவலாக எமது மக்களால் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருந்தது. அதிலும், விசேடமாக படித்த மக்களுக்கு இது பற்றிய தெளிவு ஏற்படலாயிற்று.

நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்றுச் செயற்பாடுகள் அனைத்துமே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதொரு நிலையில் தான் மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை மிக முக்கியமானதும், பலமானதுமானதொரு அத்திவாரமாகவே நாங்கள் பார்க்க்கிறோம்.

எங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையைக் கருத்திற் கொண்டு தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நேர்மையான வழியில் செயற்படும். விசேட கட்டமைப்புக்களை உருவாக்கி, கிராம மட்டத்தில் எங்களுடைய செயற்பாடுகளைப் பலமாக்கி மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பினால் மக்கள் எங்கள் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறது.

ஆனால், அதேநேரம் பதவிச் சுகம் காரணமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று நாங்கள் செயற்பட ஆரம்பித்தால் எங்களுடைய உறுப்பினர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் எங்கள் மக்கள் நடந்து கொள்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மக்கள் மயப்படுத்தப்பட்ட பரவலான அரசியலை நாங்கள் முன்னெடுக்காத காரணத்தினால் தான் போருக்குப் பின்னர் கடந்த எட்டு வருட காலமாக எமது மக்களை ஏமாற்றிக் கூட்டமைப்பு அரசியல் செய்தது. இந்த நிலை தொடர்வதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நேர்மையானதொரு அரசியல் அத்திவாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பலமானதொரு ஆரம்பமாகவே நாங்கள் கருதுகிறோம்.

கேள்வி:- வடக்கில் இரண்டு உள்ளூராட்சி சபைகளைத் தவிர ஏனைய சபைகள் தொங்கு சபைகளாக அமையக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆசனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டியதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் உங்களின் நிலைப்பாடென்ன?

பதில்:- நாங்கள் கொள்கையளவில் செயற்படுகின்றதொரு கட்சி. கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்படாமல் நாங்கள் எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயாரில்லை.

உள்ளூராட்சி சபைகள் தேசிய கொள்கைகள் சார்ந்த விடயமல்ல. பொதுமக்களுக்கான அடிப்படை அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதே உள்ளுராட்சி சபைகளின் நோக்கமாகக் காணப்படுகிறது.

எங்களுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத சபைகளில் தனிப்பெரும் கட்சியாகக் காணப்படுகின்ற தரப்பினரின் வேலைத் திட்டங்களுக்கு நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். ஆனால், பொதுமக்களுடைய நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

யாழ். மாவட்டத்தில் ஐந்து சபைகளில் நிர்வாகம் நடத்துவதற்கு நாங்கள் அக்கறை செலுத்துகின்றோம். குறித்த சபைகளில் அதிகமான உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாகவிருப்பார்கள் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

கேள்வி:- யாழ். மாநகர சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பியும், ஐக்கியதேசியக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை தொடர்பில் நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்:- யாழ். மாநகர சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கூட இந்த விடயத்தில் எந்தவிதத் தயக்கமுமிருக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒன்றே.

உண்மையைச் சொல்லப் போனால் ஈ.பி.டி.பியின் வெளிப்படைக் கொள்கை தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறைமுகமான கொள்கையாகவுள்ளது. தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொய்யான கோஷங்களை எழுப்புவதை வழமையாகக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அரச தரப்பாகவுள்ளது. ஈ.பி.டி.பி கடந்த ஆட்சிக் காலத்தில் அரச தரப்பின் பங்காளியாகவே செயற்பட்டு வந்தது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கூடத் தமக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஈ.பி.டி.பி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கூட்டமைப்பு நேரடியான அமைச்சுப் பதவிகளைப் பெறாவிடினும் ஈ.பி.டி.பி போன்றே செயற்பட்டு வருகிறது.

தற்போது எங்களுடைய கட்சி வளர்ந்து வருகின்றதொரு சூழ்நிலையில் எங்களுடைய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டியிருக்கிறது. இதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனது உண்மையான முகத்தைத் தமிழ்மக்களுக்குக் காட்டப் போகிறது.

கேள்வி:- கடந்த காலத்தில் கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த போது உள்ளூராட்சி சபைகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகப் பரவலானதொரு குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. உங்களிடம் பெரியதொரு வழக்கறிஞர் அணியே உள்ள நிலையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கெதிராக நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்:- நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக எங்கள் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி மணிவண்ணன் எங்களுடைய கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் காணப்படுகிறார். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் எங்களுடைய அணியுடன் பல சட்டத்தரணிகள் இணைந்து போட்டியிட்டதுடன் மாத்திரமல்லாமல் எங்களை அடையாளப்படுத்தியவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

இவ்வாறானதொரு நிலையில் சட்டத்தரணி மணிவண்ணன் பல மேடைகளில் கடந்த காலத்தில் உள்ளூராட்சி சபைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதுடன் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார். யாழ். மாநகர சபை உள்ளிட்ட சபைகளில் எங்களால் நிர்வாகம் நடாத்த முடியாவிடினும் கூட கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான உண்மைத் தன்மைகளை நாங்கள் அறியக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏது நிலை உருவாகியுள்ளது.

சபைகளில் தவிசாளர் பதவி வகிக்காத காரணத்தினால் இவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எங்களுக்கு எவ்வித பின்னடைவுகளும் ஏற்படப் போவதில்லை. அவ்வாறான பட்சத்தில் சபை நிர்வாகம் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம். எனவே, சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு பொறுப்புக் கூற வைக்க முடியும் என்பதில் எங்களுக்குப் பூரண நம்பிக்கையிருக்கிறது.

ஊழல் மோசடிகளுக்கெதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது மக்களுக்கு அவ்வப்போது வெளிப்படுத்துவோம்.

கேள்வி:- உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது?

பதில்:- நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு ஆணை கேட்டே போட்டியிட்டார்கள். அந்த ஆணையைக் கேட்பதில் முன்னணியிலிருந்தவர்கள் அந்தக் கட்சியின் மிகப்பெரும் தலைவர்கள். இவ்வாறான தலைவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் வரை கூட்டமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் எங்களால் செயற்பட முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஏற்பட்ட கடும் அதிருப்தியே எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குகளின் மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் செய்ய முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், சொந்தக் காணிகள் பறிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கும் எமது மக்கள் ஆகியோர் ஒருவருடத்துக்கும் மேலாக நடுத்தெருவில் போராடி வருகிறார்கள். எங்களுடைய மக்கள் நடுத் தெருவுக்குக் கொண்டு வந்ததற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முக்கிய காரணமாகவுள்ளது. எனவே, கடந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற அனைத்து அழிவுகளுக்கும், அவர்கள் அனுபவிக்கின்ற சொல்லொணாத் துயரங்களுக்கும் அரசாங்கம் மாத்திரம் பொறுப்புக் கூறிப் பயனில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.

 

எங்களுடைய கட்சியின் கொள்கைகள் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகாலக் கொள்கைகளாகவுமுள்ளது. ஆகவே, பொறுப்புக் கூறலுக்குரிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு எங்களுடைய கொள்கைகளை முழுமையாக ஏற்று ஆரோக்கியமானதொரு அரசியலை முன்னெடுக்கக் கூடிய புதிய அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் இணைந்து செயற்படத் தயார். மாறாக இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாங்கள் செயற்பட்டால் தமிழ் மக்களுக்குப் பச்சைத் துரோகம் செய்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை நாங்கள் காப்பாற்றுவதாகவே அமையும். ஆகவே, ஆயிரக்கணக்கான மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை நாம் எப்போதும் துஷ்பிரயோகம் செய்யத் தயாரில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

Comments