வடக்கில் அனைத்துக் கட்சி பெண் வேட்பாளர்களும் ஓரணியில் திரள்வு | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் அனைத்துக் கட்சி பெண் வேட்பாளர்களும் ஓரணியில் திரள்வு

எந்தக் கட்சியில்  போட்டியிட்டாலும் ஒரே நோக்கிலேயே செயற்படுவதாகப் பிரகடனம்

செல்வநாயகம் ரவிசாந்

 

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வரும் நிலையில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் ஒன்றிணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ். நகரில் தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டனர்.

நேற்றுப் பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இச் செய்தியாளர் சந்திப்பில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வட மாகாணத்தில் போட்டியிடும் 32 பெண் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

‘விழுது’ ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்ட பெண் வேட்பாளர்கள் தாம் போட்டியிட முன்வந்தமைக்கான நோக்கங்கள், உள்ளூராட்சி சபையில் பெண்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களும் தெரிவித்தனர்.

இவர்களினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள தாவது;

கடந்த 30 ஆண்டுகால யுத்தக் கொடூரத்திலிருந்து சற்று மூச்சு விடும் தருணத்தில் தான் சத்தங்கள் ஓய்ந்தாலும் எமது சமூக,பொருளாதார, கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களின் இருப்புக் கேள்விக்குறியதென எமக்குப் புரிகின்றது.

எதிர்காலத்தை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற தவிப்பு, எவ்வாறு மீளக் கட்டியெழுப்பப் போகிறோம் என்ற சிந்தனைக்கு முன்பாகவே எமது பிரதேச உள்ளுராட்சி சபைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை, எமக்கெனத் தனித்துவமானதொரு அரசியல் தளத்தைப் போட வேண்டுமெனில் கடந்தகால அரசியலுக்கு மாறுபட்ட விதத்தில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் பண்பாட்டில் மேம்பாட்டைக் கொண்டு வருவதன் மூலமே நாம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும்.

இதனால் தான் பெண்களாகிய நாம் பொறுத்தது போதும் என்ற நிலையில் நீதியையும், நியாயத்தையும் எமது பிரதேசத்தில் நிலைநாட்டக் கட்சிகள்மூலமாகவும், சுயேட்சைக் குழுக்கள் மூலமாகவும் களமிறங்குகின்றோம்.

நீதிக்காகப் போராடுவதற்குத் தயாரான நாம் இம்முறை புதியதொரு ஜனநாயக ரீதியான அரசியல் பண்பாட்டைப் படைக்கப் போவது உறுதி.

சமூகத்தில் வாழும் சகல மக்களையும் எவ்வித இன, மத, மொழி வேறுபாடுகளின்றி அவர்களை மதித்து, அவர்களின் தேவைகளை அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன் நிறைவேற்ற முன்னின்று செயற்படுவோம். இங்கு எமது வெளிப்படைத்தன்மை, சமூகத்தின் மீதான பொறுப்புடைமை, சமூகத்திற்கு கணக்குக் காட்டும் தன்மை போன்றவற்றால் எமக்கு சமூகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள்,ஆண்கள், பெண்கள், இளைஞர், யுவதிகள்,மதத் தலைவர்கள், அரசியற் தலைமைத்துவங்கள் என அனைத்துத் தரப்பினரும் பக்கபலமாக இருப்பார்கள். உண்மையும், நேர்மையும் கொண்ட எமது அரசியலில் தனிமனித சிபாரிசுகளோ , பொய்யான வாக்குறுதிகளோ அல்லது சலுகை காட்டி வாக்குகள் பெறுவதோ

இருக்காது.

பல வருடங்களாகச் சமூகத்தில் பணியாற்றிய எமக்கு மக்களின் ஆதரவு இந்த வட்டாரத் தேர்தல் முறைமை மூலமாக வெற்றியைப் பெற்றுத் தரும். எம்மால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஊழல் நடவடிக்கைகளுக்குத் துணை போகாத பக்கச் சார்பற்ற வெளிப்படைத் தன்மை பேணப்படும்.

வன்முறையினால் வளர்ந்த அரசியலை மாற்றி சகலருக்கும் நன்மை பயக்கும் அரசியல் பண்பாட்டை மீளவும் எமது சமுதாயத்தில் எமக்காக, எமது தாய்மாருக்காக, எமது சகோதர, சகோதரிகளுக்காக உருவாக்குவோம்.

உள்ளூராட்சி மன்றங்களின் சகல தேவைகளையும் சமூகத்தின் சகல தரப்பினரும் பெறக் கூடியதாகச் செய்வோம். ஒவ்வொரு குடிமகனினதும் திட்டமிடலையும், பங்கேற்பையும், பங்களிப்பையும், அமுல்படுத்தலையும் மக்களுக்கான சேவைகள் மூலம் உறுதிப்படுத்துவோம்.

இன, மத, மொழி பேதமின்றி எந்தக் கடசியில் பெண் போட்டியிட்டாலும் அவளுக்கான முழு ஆதரவையும் மக்களுடன் இணைந்து வழங்குவோம்.

தேர்தல் வன்முறைகளையும், அரசியல் பழிவாங்கலையும் சமூகத்தில் அடியோடு இல்லாதொழித்துப் புதியதொரு வன்முறையற்ற அரசியல் பண்பாட்டை உருவாக்குவோம்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதம் பெண்களாகவுள்ளனர். அதுமாத்திரமன்றி வாக்களிக்கும் சனத்தொகையில் 56 சதவீதமானவர்களும் பெண்களாகவே காணப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த காலங்களில் பெண்ணுக்கு வாக்களித்து அவளது வெற்றிக்கு வாய்ப்பளிக்காத ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் உணர்ந்து பெண்களை நேரடி வேட்பாளர்களாக உள்வாங்கிய கட்சிகளுக்கும், கூடுதலான பெண்களை உள்வாங்கிய கட்சிகளுக்கும் தனது மனப்பாங்கை மாற்றி பெண்களின் புதிய அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இம்முறை பெண்களின் வெற்றிக்குப் போராட வழிசமைப்போம்.

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாம். பாதிப்புக்குள்ளான பெண்கள் தமது பாதிப்புக்களிலிருந்து மீண்டுவர அவர்களுக்கான வாழ்வாதாரம், தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் தகைமை என்பவற்றுடன் தலைமைத்துவம் பெறவும், அவர்களின் ஒளிமயமான வாழ்வுக்கு கட்டியம் கூறவும் பெண்களாகிய நாம் இம்முறைத் தேர்தலில் தலைமைத்துவப் பொறுப்பைப் பெறுவோம்.

எங்கள் அரசியல் மொழியானது இனிமை, சிநேகம், புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, ஆழ்ந்த சிந்தனை, கடும் முயற்சி, உறுதி , கெளரவம், பணிவு, தன்னடக்கம் கொண்டதாக இருப்பதாலேயே உங்களது தாயாக, சகோதரியாக, மகளாக உங்களுக்காகத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் எனவும் அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெண் வேட்பாளர்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கையில்,

கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கெனத் தனித்துவமான தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுகின்ற போதும் நாங்கள் கட்சி சாராமல் அனைத்துப் பெண் வேட்பாளர்கள் சார்பாகவும் இன்றைய தினம்(நேற்று) தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிட்டுள்ளோம் . உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே செயற்படுவோம்.

நாம் இணைந்து வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளோம். அவர்களுடன் நடாத்தப்படும் கலந்துரையாடலின் இறுதியில் எட்டப்படும் உடன்பாடுகளுக்கமைவாகச் செயற்படுவோம்.நாம் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எந்தச் சவாலையும் எதிர்கொள்வதற்கும் நாம் தயாராகவேயிருக்கின்றோம்.

எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாம் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் பெரிதும் உறுதுணை புரியுமென நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

Comments