குளிரான காலநிலைக்கு காரணம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

குளிரான காலநிலைக்கு காரணம் என்ன?

 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிருக்கு காரணம் என்ன?

அதிகளவான வெப்பத்தினால் நிலத்திலுள்ள நீர் ஆவியாகிறது. பூமி அதிவெப்பமடையும் போது அதனை தனிப்பதற்காக இப்படியான பனிப்பொழிவுகள் இடம்பெறும். அதேநேரத்தில் வடகீழ் பருவ காற்றானது இமயமலை பகுதி குளிர்காற்றுடன் உருவாகிறது. இது இந்தியாவிலிருந்து நேரடியாக வருவதாலும், அதேநேரத்தில் வங்காள விரிக்குடாவிலிலிருந்து கொரியோ லிஸ்ட் போஸ்டின் விதிக்கு அமைந்த குளிர்ந்த காற்று திரும்புவதால் அந்த குளிர்ந்த தன்மை எம்மையும் வந்தடைகிறது.

எல்நினோ (El Nino) / லாநினா (La Nina) எப்படி இலங்கையை பாதிக்கிறது?

எல்நினோ, லாநினா ஆகியவை பசுபிக் கடலில் ஏற்படும் நீரோட்டங்களின் மாற்றத்தினூடாக உருவாகின்றன. எல்நினோ கடலில் உருவாகும் வெப்ப நீரோட்டம். லாநினா கடலின் குளிர்ந்த நீரோட்டமாகும்.

எல்நினோ மழை பெய்ய வேண்டிய காலங்களை தடுத்துவிடுகிறது. வடகீழ் பருவ பெயர்ச்சி காலமானது டிசம்பர் இறுதியிலிருந்து மார்ச் வரை மழை பெய்ய வேண்டிய காலமாகும். ஆனால் இந்த எல்நினோ இவற்றுக்கு எதிராக செயற்படும். அதாவது மழை பெய்ய வேண்டிய காலங்களில் மழை பெய்யாது. அதுபோல தென்மேல் பருவ பெயர்ச்சி காலங்களில் வடக்கு, கிழக்கில் மழை பெய்வதில்லை. மழை பெய்யாத காலங்களில் மழையை பொழிய செய்வது லாநினா மாற்றங்களேயாகும்.

அதாவது பசுபிக் கடலில் ஏற்படும் வெப்ப மற்றும் குளிர்நீரோட்டங்களின் மாற்றங்களினால் இந்தப் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சியில் இடையிடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் தாக்கமே இலங்கையில் காலநிலையில் மாற்றத்தை உருவாக்கி ஆதிக்கம் செலுத்துகிறது.

காலநிலை அவதான நிலையம் ஒரு அனுமானத்தினூடாக கூறுகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் உங்கள் கருத்து என்ன?

இது மக்களின் தவறான கருத்து. 23 பிராந்திய அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு மூன்று மணித்தியாலயத்திற்கு ஒரு முறை வெப்பநிலை, மழைவீழ்ச்சி, காற்றின் வேகம் போன்ற தரவுகள் பெறப்பட்டு உடனுக்குடன் கொழும்பு காரியாலயத்திற்கு அனுப்பப்படுகிறது. செய்மதி படங்களின் ஊடாகவும் எமது ராடார் கருவிகளின் தரவுகளினூடாகவும் கணிப்புகளை மேற்கொண்டு அறிவித்தல்களை விடுக்கிறோம். இதை அனுமான ரீதியில் அறிவிப்பதில்லை.

கடந்த முறை களுத்துறை பகுதி மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்கு காரணம் எமது பிரதான காரியாலயம் களுத்துறையில் இல்லாததேயாகும். நாடு முழுவதிலும் ஆங்காங்கே மழை, வெப்பம் என்பன மூன்று மணித்தியாலத்திற்கு ஒருமுறை அளவிடப்பட்டாலும் அதனை ஒழுங்கிணைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட பிரதான காரியாலயம் ஒன்றிருக்க வேண்டும். இலங்கையில் சுமார் 500 மையங்களில் நாளாந்தம் மழை வீழ்ச்சி, வெப்ப நிலை அளவிடப்படுகிறது.

சுனாமி குறித்து காலநிலை அவதான நிலையம் கவனம் செலுத்துகிறதா?

சுனாமி ஏற்படும் பட்சத்தில் அல்லது பூமி அதிர்ச்சி ஏற்படும் பட்சத்தில் உடனடியாக எமது திணைக்களத்திற்கு அறிவிக்கப்படும். எங்கே, எத்தனை ரிக்டரில் ஏற்பட்டது எவ்வளவு ஆழத்தில் ஏற்பட்டது போன்ற தகவல்கள் உடனடியாக எமது திணைக்களத்திற்கு வந்துசேரும். அதனை வைத்தே சுனாமி பாதிப்பு உண்டா இல்லையா என்பது தீர்மானிக்க இதற்கு ஆசியா கண்டத்திற்கு இந்தியாவே பொறுப்பான நாடாக விளங்குகிறது. எங்கே பூமி அதிர்வுகள் ஏற்பட்டாலும் அதேநொடியில் எமக்கு அறிவித்தல் கொடுக்கப்படுகிறது. சுனாமி குறித்த எச்சரிக்ைக விடுப்பதற்கான அதிகாரம் வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு மட்டுமே உண்டு. சுனாமி பாதிப்பு உருவாகுமா இல்லையா என்ற அறிவித்தலை அனர்த்த முகாமைத்துவத்திற்கு அவரே அறிவிப்பார்.

பூமியதிர்ச்சி ஏற்படுதலை குறித்து கணிப்பீடு செய்வது யார்?

பூமியதிர்ச்சி குறித்து எமது திணைக்களத்திற்கு தகவல்தான் கிடைக்கிறது. பூமி அதிர்வை முன்கூட்டியே அறிவிக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்படவில்லை.

ஆனால் சூறாவளி அனர்த்தங்களை முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவித்து மக்களை எச்சரித்து, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முடியும். முதலில் தாழமுக்க பிரதேசம் உருவாகும். அந்த தாழமுக்க பிரதேசம் இலங்கையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை கணித்துக் கூறலாம். தாழமுக்கமானது தீவிர தாழமுக்கமாக மாற வேண்டும். இது சூறாவளியாக மாற்றமடைய வேண்டும். சூறாவளி ஏற்படும் போது அதன் மையம் எங்கே உருவாகியுள்ளது என்பதையும் திட்டவட்டமாகக் குறிப்பிடலாம்.

இலங்கையின் காலநிலைகள் பற்றி?

இலங்கையைப் பொறுத்தவரையில் நான்கு வகையான காலநிலைகள்தான் நிலவுகின்றன. அதாவது தென் மேல் பருவப் பெயர்ச்சி, வட கீழ் பருவப் பெயர்ச்சி, இடைப் பருவப் பெயர்ச்சி 1, இடைப்பருவப் பெயர்ச்சி 2 என்று இவற்றைக் குறிப்பிடலாம்.

பெரிய நாடான இந்தியா துல்லியமாக காலநிலையை அறிவிக்கிறது. சிறிய நாடாகிய எமக்கு ஏன் துல்லியமாக கணித்து கூறமுடியாமல் உள்ளது?

தற்போது நாங்கள் அதிநவீன ராடார் சொன்ட் எனப்படும் சிறிய கருவியைப் பயன்படுத்துகிறோம். இந்த கருவியில் UHF அண்டனா பொருத்தப்பட்டுள்ளது. இது 38 கிராம். IMS 100 நிறை கொண்டது. 200 கிராம் கொண்ட பலூன் ஐதரசன் (Hydrogen) காற்றின் மூலம் 800 கிராமாக மாற்றமடைகிறது.

இந்த பலூனில் ராடார் சொன்ட் பொருத்தப்பட்டு விண்ணில் பறக்க விடுகிறோம். இதனூடாக வான் மண்டலத்தில் நிலவும் காலநிலையை அவதானிக்கிறோம். தரைமட்டத்திலிருந்து மேனோக்கி செல்லும் போது காற்றின் வேகத்தையும், திசையையும் கணிப்பிடுவோம். இதன் மூலம் மேக உருவாக்கத்தையும் நாம் துல்லியமாக கணிக்கிறோம்.

நாம் அனுப்பும் ராடார் சொன்ட்டில் UHF அண்டனா பொருத்தப்பட்டுள்ளது. நாம் செய்மதியைப் பயன்படுத்தி இந்த அண்டனா ஊடாக தரவுளை பொற்றுக் கொள்கிறோம்.

 

எமது திணைக்களம் தியடலைட் மூலம் காலை 5.30 மணி, 11.30 மணி, மாலை 5.30 மணிக்கு ‘பைலட் பலூன்’ மூலமாக வானிலை ஆய்வுக்காக அனுப்பப்படுகிறது. இந்த ஒரு பலூனை அனுப்ப பதினையாயிரம் ரூபா செலவு ஏற்படுகிறது. ஒருநாளைக்கு நாற்பத்தையாயிரம் ரூபா செலவு ஏற்படுகிறது. ஆனால் இந்த ராடார் சொன்ட் பலூனை அனுப்ப முப்பத்தையாயிரம் ரூபா செலவு ஏற்படுகிறது. இந்த ராடார் சொன்ட் நாம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் காலை 11 மணிக்கு அனுப்புகிறோம்.

நாளாந்தம் ஒரு ராடார் சொன்ட் பலூனை அனுப்பும்படி ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது. இதனூடாக துல்லியமாக மேக மண்டல படத்தை பார்க்க கூடியதாக இருக்கும். ஆகவே இந்திய போன்ற நாடுகளில் ஒருநாளைக்கு இருமுறை ராடார் சொன்ட்டை அனுப்புகின்றனர்.

இந்தியாவிடம் சொந்த செய்மதியுமுண்டு. நாமும் நாளாந்தம் இருமுறை ராடார் சொன்ட் பலூனை அனுப்பினால் துல்லியமாக ஆய்வனை மேற்கொள்ளலாம். பைலட் பலூனை அனுப்புவதன் மூலம் வளிமண்டலத்தில் பதினெட்டு கிலோ மீற்றர் அல்லது இருபது கிலோ மீற்றர் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கும். ராடார் சொன்ட் மூலம் அனுப்பும் பலூன் கிட்டதட்ட இருபத்தொன்பது கிலோ மீற்றர் வரை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். ராடார் சொன்ட் தரவுகள் மூலம் மிகத் துல்லியமான தரவுகளை நாளாந்த அடிப்படையில் பெற முடிகிறது.

ராடார் சொன்ட்டில் வளிமண்டலத்தின் வெப்பத்தினையும், ஈரப்பத்த்தினையும் அளவிடும் இரு பகுதிகள் காணப்படுகின்றன. இந்த சொன்ட் அனுப்பப்படும் பலூன் மேலே செல்ல செல்ல பலூன் விரிவடைந்து எல்லையை அடைந்த பின்பு பலூன் வெடித்து விடும். இந்த ராடார் சொன்ட் பெரும் பாலூம் கடலில் விழும். மக்கள் வாழும் இடத்தில் விழுந்தாலும் அதில் காலநிலை அவதான நிலையத்தின் முகவரியுண்டு. இந்த புதுவிதமான சிறிய பொருளை கண்டுயாரும் அச்சம் அடைய வேண்டியதில்லை.

இதை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாது. 2020ம் ஆண்டில் டுப்லா ராடார் கருவிகளை ஜப்பான் எமக்கு வழங்கவுள்ளது.

இது இலங்கையில் இரு பகுதியில் பொருத்தப்படும். கொழும்பிலும் அம்பாறை பொத்துவில் பகுதியிலும் இவை ​பொருத்தப்படும். இதனூடாக இலங்கையின் முழுக் கால நிலையையும் சரியாக அவதானிக்கலாம். இந்த டுப்லா ராடார், மேகத்தின் அடர்த்தியை குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் எவ்விடத்தில் மழை பெய்யும் என்பதையும் துல்லியமாக அறிய முடியும்.

நாட்டில் எத்தனை வானிலை அவதான நிலையங்கள் உள்ளன?

பதில்: கொழும்பில் அமைந்திருப்பது தலைமை அலுவலகம், இது தவிர இருபத்தி மூன்று பிரதான அலுவலகங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதான அலுவலகம் உண்டு. இதேவேளையில் களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் அலுவலகங்கள் கிடையாது. எதிர்வரும் காலத்தில் இவ்விரு மாவட்டங்களிலும் அலுவலங்கள் அமைக்கப்படும்.

தற்போது காலநிலையில் பாரிய மாற்றங்கள் உருவாகியுள்ளன. இதற்கு காரணம் என்ன?

பதில்: தென்மேல் பருவப் பெயர்ச்சி காலநிலை முடிவடைந்து, இடைநிலைப் பருவப் பெயர்ச்சி காலநிலையும் முடிவடைந்து, தற்போது வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவுகிறது. இக்காலநிலை டிசம்பர் நடுபகுதியில் ஆரம்பமானது.

இக்காலநிலையால் எதிர்பார்த்த மழைவீழ்ச்சி கிடைக்கப்படவில்லை. எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதியளவு மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகத்தையும் திசையையும் எவ்வாறு கணக்கிடுகிறீர்கள்?

காற்றின் வேகத்தை அளப்பதற்கு Anemometer (காற்றுமானி) பயன்படுத்தப்படுகிறது. அதனூடாக திசையையும் அளவிடப்படுகிறது. காற்றியின் வேகத்தை பயன்படுத்தி மின்நுட்பத்தை செயற்படுத்தலாம். காற்றின் திசையைப் பயன்படுத்தி அதனூடாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லலாமா வேண்டாமா என்பதைச் சொல்கிறோம். பாதகம் என்று கூறப்படும் போது, மீனவர்கள் கடலுக்குச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த காலங்களில் எமது அறிவித்தல்களுக்கு செவிசாய்க்காமல் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு பல அனர்த்தங்களும், உயிர்ச்சேதங்களும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடி, மின்னல், மழை குறித்து எவ்வாறு கணிப்பீடு செய்யப்படுகிறது?

வானிலுள்ள மேகம் மூன்று வகையான படைகளாகக் காணப்படும். கீழ்நிலை படை, நடுநிலை படை, மேல்நிலை படை மேகங்கள் காணப்படுகின்றன.

கீழ்ப்படையில் காணப்படும் சிபி குளோப் மேகம் எனப்படுகிறது. இதில் type 9, type 3 ஆகியனவாகும். இந்த மேகங்கள் உருவாகுவதன் மூலமாக இடிமின்னல் ஏற்படக்கூடும். நடுப்படை மேகங்கள் மழைப் பெய்யும் காலங்களில் பக்கபலமாக காணப்படும். மேற்படை மேகங்கள் மூலம் மழை பெய்வதில்லை.

காலநிலை அவதான நிலையம் சில வேளைகளில் பிழையாக கணிப்பிடுகிறதே?

சுமார் ஒரு தசப்த காலத்திற்கு முன்பு தொழில்நுட்பங்களில் குறைப்பாடுகள் இருந்தன. தற்போது இக்குறைப்பாடு நீக்கப்பட்டுள்ளது. தற்போது காலநிலையை முன்கூட்டியே கணித்து கூறக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட நாட்களில் மழை பெய்யும் என்று கூறிய வேளைகளில் மழை பெய்தே இருக்கிறது. கிட்டத்தட்ட 80 சதவீதம் திட்டவட்டமாக கூறும் அளவுக்கு தொழில்நுட்ப விருத்தியடைந்துள்ளோம். ஆனாலும் அதிநவீன தொழிநுட்பக் கருவிகளின் தேவையுள்ளது. அவற்றைப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் 90 வீதம் சரியாக்க் கூறலாம்.

உங்களது திணைக்களத்திற்கும் மீன்பிடி, விவசாயத்திற்கும் இடையிலான சம்பந்தம் என்ன?

காற்றின் தன்மையைப் பற்றி கடற்றொழில் அமைச்சுக்கு நாங்கள் அறிவுறுத்தல்களை வழங்குகிறோம். மீன்பிடிப்பவர்கள் அவர்களின் திணைக்களத்தின் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். ஊடகங்களின் ஊடாக வெளியாகும் அறிவித்தல்களைக் கேட்பதன் மூலம் மீனவர்கள் காலநிலையை அறிந்து கொள்கிறார்கள். ஆழ்கடலில் செல்லும் மீனவர்கள் வானொலி அறிவித்தல் மூலமாகவே நிலைமைகளை அறிந்துக் கொள்கின்றனர். விவசாயிகள் நேரடியாக எமது திணைக்களத்திற்கு வந்து அறிவித்தல்களை பெற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் விவசாயத் திணைக்களத்திற்கு தரவுகளை அனுப்பி வைக்கிறோம். வவுனியா, மகாவலி உட்பட பல விவசாய பகுதிகளில் நிலத்தின் ஈரலிப்புத் தன்மை, வெப்ப நிலை குறித்து கூறகூடிய ஆய்வு பகுதிகள் உள்ளன.

காலநிலை அவதான நிலையத்திற்கு நாளாந்த செலவு என்ன?

ஒருநாளைக்கு மூன்று பைலட் பலூன் அனுப்பும் போது நாற்பத்தையாயிரம் ரூபா செலவாகும். ராடார் சொன்ட் அனுப்பும் போது முப்பத்தையாயிரம் செலவு ஏற்படுகிறது. ஆனால் ராடார் சொன்ட் அனுப்பும் போது பைலட் பலூன் அனுப்புவதில்லை என்றார். 

போல் வில்சன்... 
 

Comments