சிந்தனையில் மாற்றம் வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

இலங்கையின் 70வருடகால ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இந்த நாடு பெற்றுக்கொண்ட அணுகூலங்களை தராசிலிட்டு நிறுத்துப்பார்ப்போமானால் பாரம் அதிகமாகக் காணப்படுவது கசப்பான அனுபவங்களேயாகும் என்பதே நிதர்சனமான உண்மை. இதனை எவராலும் மறுத்துரைக்க முடியாது. சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தாலும் சரி, சுதந்திரமடைந்து ஏழு தசாப்தங்களை நிறைவு செய்திருக்கும் இன்றைய காலகட்டத்திலும் சரி, கூடுதலாகக் காணப்படுவது கசப்பான அனுபவங்களேயாகும். பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டில் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் முரண்பாடுகளில் உடன்பாடு கண்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை சரியான திசையில் பயணிக்கச் செய்வதில் நாம் தோல்வியைத்தான் கண்டிருக்கின்றோம்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் குறித்தும் சகவாழ்வு பற்றியும் பல தசாப்தங்களாக குரல் கொடுக்கப்பட்டு வந்தாலும் கூட இனவாதம் என்ற நெருப்பு குண்டத்துக்குள் அது பொசுங்கிப் போவதையே வரலாற்றில் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஜனநாயக அரசியலில் இது வெல்லாம் சகஜம்தான் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். இந்தச் சொற்றொடரானது ஜனநாயக மரபுக்கு விடுக்கப்படுகின்ற சவாலாக நோக்க வேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்தையும், இன்றைய ஜனநாயகச் செயற்பாடுகளையும் எடுத்துக்கொண்டால் இந்த ஜனநாயகத்தை விட அந்த ஏகாதிபத்தியம் பரவாயில்லை என்று கூறும் அளவுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதற்காக ஏகாதிபத்தியம் சரியெனக் கூறுவதற்கு நாம் முன்வரவில்லை.

இவ்வாறு நாம் எடுத்துச் சொல்லக்காரணம் கடந்த காலத்தில் தொடங்கி இற்றை நாள் வரை எமது பாராளுமன்ற ஜனநாயகம் பயணிக்கும் பாதை மிகவும் மோசமானதாகவே தொடர்கின்றது. இந்த இங்கிதமற்ற செயற்பாடுகளால் நாட்டு மக்கள் ஜனநாயக அரசியலில் நம்பிக்கையற்றதொரு நிலையே வெளிப்படுத்தப்படுகின்றது. மிக அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது பைத்தியக்கார விடுதியை விடவும் மோசமானதாகவே காணப்பட்டது. ஜனநாயக அரசியலில் வாதப்பிரதிவாதங்கள் தாராளமாக இடம்பெறலாம்; தவறில்லை. ஆனால், ஜனநாயகப்பண்புகளுக்கு வேட்டுவைக்கும் விதத்தில் காடைத்தனங்களும், கோமாளிக் கூத்துக்களும் இடம்பெறுவதை எந்த அளவுகோள் கொண்டு அளந்து பார்க்க முடியும் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.

அரசியல்வாதிகள் என்பவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்லர், எம்மிடையே இருந்து உருவாகி மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. இவர்கள், அனைவருமே ஒரு காலகட்டத்தில் பாடசாலைகளுக்குச் சென்று படித்தவர்கள்தான். இந்த அரசியல்வாதிகள் தமது இளமைக் காலத்துப் பள்ளி வாழ்க்கையை ஒருதடவை மீள அசை போட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம் இன்று உருவாகியுள்ளது.

பாடசாலை வாழ்க்கையென்பது புனிதம் மிக்கதாகும். அந்தப் பருவத்தில் நாம் கற்றுக்கொண்டவை பசுமரத்தாணி போன்ற பதிவை ஏற்படுத்துவனவாகும். எமது நாட்டின் இன்றைய நிலையை எண்ணிப்பார்க்கின்றபோது அன்றைய காலகட்டத்தில் எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஓட்டைக்குடத்தில் வார்க்கப்பட்ட நீருக்குச்சமாகிப்போயுள்ளது. பள்ளிப் பருவத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் நல்லிணக்கம், சகவாழ்வுப் பண்பாடுகளை இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி மறந்துபோக முடிந்தது என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விடயத்தில் யாரை நோக்கி சுட்டுவிரல் நீட்ட முடியும்?

எமது நாட்டில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இன்று நல்லிணக்கம், சகவாழ்வு என்பன மேலோங்கிக் காணப்படுகின்றது. நிறைய பாடசாலைகளில் ஆண்களும் பெண்களும் இரண்டாக கலந்து படிக்கின்றனர். மற்றொரு புறத்தில் இன வேறுபாடின்றி மதவேறுபாடின்றி ஒன்றாக கல்விகற்பதையும் காணமுடிகின்றது. அவர்களுக்கிடையே எந்தவித வேறுபாட்டையும் காணமுடிவதில்லை. ஒற்றுமை, நல்லிணக்கம் சமாதான சகவாழ்வு அங்கிருந்துதான் தோற்றம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தான், எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லிணக்கத்தையும், சமாதான சகவாழ்வையும் கற்றுக்கொள்வதற்கு மீண்டுமொரு தடவை பாடசாலைக்குச் செல்வது நல்ல பயனைத் தரும் எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்சி அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும் எமது நாட்டை பாரிய பின்னடைவுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. சுயநல அரசியலுக்காக நாட்டு மக்களை இனரீதியிலும், மத அடிப்படையிலும் பிளவுபடுத்தி புனிதமான தேசத்தில் இரத்த ஆறு ஓடுவதற்கான சூழ்நிலையை தோற்றுவித்திருக்கின்றன. கட்சி அரசியல் தவறானது என நாம் சொல்ல வரவில்லை ஜனநாயகப் பண்புகளை உள்வாங்கி மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க உறுதிபூண்டுவருபவர்கள் காலப்போக்கில் சுயநல அரசியலை முன்னெடுத்ததால் ஏற்பட்ட விளைவுகள் எமது தேசத்தை பாரிய அழிவுக்குள் தள்ளி விட்டிருப்பதுதான் வேதனையாக உள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பள்ளி மாணவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. பள்ளி வாழ்க்கையில் அன்னியோன்ய உறவுடன் சகவாழ்வு, நல்லிணக்கம், ஒற்றுமையுடன் சிறகடித்துப் பறக்கும் மாணவச் சமுதாயம் பாராளுமன்ற அமர்வுகளை பார்த்ததன் பின்னர் அவர்களது மனங்கள் தடுமாறிப்போவதையே வெளிப்படையாக காணமுடிகிறது. இன, மத, மொழி வேறுபாடுகளால் நாட்டுமக்கள் தவறான திசையில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன, மத, மொழி பேதங்களைக் கடந்து தேசிய நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் உறுதிப்படுத்தக்கூடியதான தேசியக் கொள்கைத் திட்டமொன்றின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் நாம் இலங்கையர்கள் என்ற மனநிலை உருவாக்கப்படவேண்டும். மக்கள் இன ரீதியாகவும் மத, மொழி ரீதியாகவும் பிளவுப்படுவதை தடுத்து இலங்கையர் என்ற கோட்பாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் தாம் நீண்டகாலமாகவே சமாதான சகவாழ்வு, நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த இலக்கை அடையக் கூடிய வாய்ப்பு இன்றளவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எத்தனையோ திட்டங்கள், கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்றுமே வெற்றியளிப்பதாக காண முடியவில்லை. மறைந்த இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை வரவழைத்து இங்கு மும்மொழிக்கொள்கை மாநாடொன்று கூட நடத்தப்பட்டது. அந்தத்திட்டத்துக்கு என்ன நடந்தது என்பது கூடத் தெரியவில்லை. அவர் மறைந்துவிட்டார். அதோடு சேர்ந்து இந்தக் கொள்கைத்திட்டம் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டதோ தெரியவில்லை இது போன்று பல திட்டங்களை நாட்டை ஆட்சிசெய்த அரசுகள் கொண்டுவந்தன. அவை அனைத்தும் அந்தந்த ஆட்சிக்காலத்தோடு மடிந்து போய் விட்டன. காரணம் என்ன? தூய்மையான எண்ணமாக அவை காணப்படவில்லை என்பது தான் உண்மை.

எனவே தான் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அரசியல்வாதிகள் எமது பள்ளி மாணவர்களிடமிருந்து ஜனநாயக அரசியல் பண்புகளுடன் கூடிய நல்லிணக்கம், சமாதான சகவாழ்வுப் பாடத்தைப் படிக்கவேண்டும். ஜனநாயக அரசியல் சாக்கடை அரசியலாக மாறி விடக்கூடாது. ஜனநாயக அரசியலுக்கு பண பலமும், உடற்பலமும் மட்டும் போதாது. முக்கியமாகத் தேவைப்படுவது ஒழுக்கப் பண்பாடும், நல்லெண்ணமும் தான், இனம், மதம், மொழி கடந்து ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும்.

எமது எதிர்காலச் சந்ததியினர் எமது கல்லறைகள் மீது சாபமிடக்கூடிய நிலையை தாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. நாளைய தேசமும், மக்களும் சுபீட்சமாகவும் நல்லுறவுடனும் தலைநிமிர்ந்து வாழக் கூடியதான உயர்ந்த நிலையை ஏற்படுத்தி விட்டுச் செல்ல வேண்டும். கடந்த காலத் தவறுகளுக்காக இப்போதே பாவ விமோசனம் தேடிக் கொள்ள முன்வரவேண்டும். நாட்டுமக்களின் மனங்களை வெல்லவேண்டுமானால் எமது மனங்கள் முழுமையாக மாற்றம் பெறவேண்டும். அதற்கான பயணத்தில் நாம் அடியெடுத்து வைப்பதுதான் நாளைய சந்ததிக்கு நல்வழிகாட்டியாக அமையும். 

Comments