யாரும் நானாக வேண்டாம் நீங்கள் நீங்களாக இருங்கள் | தினகரன் வாரமஞ்சரி

யாரும் நானாக வேண்டாம் நீங்கள் நீங்களாக இருங்கள்

“நாம் சென்ற காலத்தை மறந்து விட்டு எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கு எங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சென்றகால அனுபவங்களை எதிர்கால நல்ல சந்தர்ப்பங்களுக்காப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாரும் நானாக வேண்டாம். உங்களுக்குள் ஒரு திறமையுண்டு, குறிக்கோள் உண்டு அதை வெளிப்படுத்தி நீங்கள் நீங்களாவே இருங்கள்” என்று தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள முன்னாள் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் முன்னேற்றம் பற்றி சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஆலோசனைக் கூட்டத் தொடர்களில் கலந்துகொண்டுள்ள அவர் அதுபற்றிக் கூறியதாவது;

நாங்கள் தற்போது கிரிக்கெட்டில் மாற்றம் கொண்டுவர வேண்டியது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றொம். நீண்ட கால வரலாற்றைக்கொண்ட இவ்விளையாட்டை இன்னும் நீண்ட காலத்துக்கு உயிர்பெறச் செய்ய வேண்டுமானால் இதில் சில மாற்றங்ளைச செய்ய வேண்டும். இப்படியான மாற்றங்களுக்கு எப்போதும் அவுஸ்திரேலியாவிலுள்ள பழைமைவாய்ந்த பெர்பேர்ன் கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் முன்னோடியாகவுள்ளது. தற்போது அங்கு கூடியே மாற்றங்களைப் பற்றி நாங்கள் ஆராய்ந்துவருகிறோம்.

நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது;

எப்போதும் நாம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பின்நிற்கக் கூடாது. முதலில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்பு, அவர்களின எண்ணங்களைப் பற்றியும் நாங்கள் அறிய வேண்டும். டி10, டி 20 என குறுகிய கால போடடிகளுக்கே ரசிகர்களின் ஆதரவு கிடைக்கின்றது. நவீன முறைகளை அறிமுகப்படுத்துவது, எதிர்காலத்தில் கரிக்கெட் நடைமுறைகள் பற்றி ஆராயவும், கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக அறிவுரைகள் வழங்கவும் இதன்போது ஆலோசனை நடத்தவுள்ளோம்.

மேலும் டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரொன்றை நடத்துவது எப்படி? அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுக் கொடுத்து அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு கிடைக்கும் இலாபத்தை அதிகரிப்பது எப்படி என்பதைப் பற்றி நாங்கள் ஆலோசனை செய்யவுள்ளோம்.. உண்மையில் தற்போது டெஸ்ட் போட்டிகளின் ஒளிபரப்பினால் கிடைக்கும் இலாபம் குறைவாகவேயுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் இந்திய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கே கூடிய ரசிகர்கள் மைதானம் வருகிறார்கள். எனவே மற்றைய அணிகள் பங்குகொள்ளும் போட்டிகளுக்கும் ரசிகர்களை எப்படி அதிகரிகச்ச செய்வது என்பதைப் பற்றியும் நாங்கள் ஆலோசனை நடத்திவருகிறோம்.

சர்வதேச கிரிக்கெட் சங்கம் என்பது. உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து- நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்படும் ஓர் சங்கம். இதில் தொடர்ந்து ஓர் பொறுப்பான அங்கத்தவராக இருக்க நான் விரும்பவில்லை என்று கூறிய குமார் சங்கக்கார தற்போதைய இலங்கை அணியின் ஒருநாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் பற்றிக் கூறும் போது அஞ்சலோ மத்தியூஸ் சிறந்த வீரர் மட்டுமல்ல சிறந்த தலைவரும் கூட. தினேஸ் சந்திமால், லசித் மலிங்க, ரங்கனஹேரத், திமுத் கருணாரத்ன போன்ற வீரர்களும் சிறந்த தலைவராக மிளிரக் கூடியவர்களே. ஆனால் இலங்கை கிரிக்கெட்டும், தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் சேர்ந்து நல்ல முடிவை எடுத்துள்ளார்கள். மீண்டும் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றது அவரின் சொந்த விருப்பமென்றாலும் அம்முடிவு இலங்கை அணிக்கு நல்ல செய்தியாகும்.

ஒரு தலைவர் நல்ல பண்புகளுடன் கூடிய மனிதராக இருக்க வேண்டும். வீரர்களின் திறமையைப் பற்றியும் அவர்களின் விசேட குணாம்சங்களைப் பற்றியும் எவ்வேளையிலும் தலைவர் தெரிந்திருக்க வேண்டும். அதேவேளை முடிவுகள் எடுக்கும் போது தீர்க்கமான திட்டமிடல் அவசியம். வீரர்களிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்தும் கூறும் போது சங்கக்கார தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் திறமையான தலைவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவ்வரிசையில் தற்போதைய தலைவர்களில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் சுமித் சிறந்த தலைவராவார். அவரிடமுள்ள திறமை பற்றிய விசுவாசம்தான் அவரை சிறந்த தலைவராக்கியுள்ளது. எச்சந்தர்ப்பத்திலும் தலைவர் பதற்றமடையக் கூடாது. தனது இலக்கு என்ன அவ்விலக்கை அடைவது எப்படி அதை அடைவதற்கான வழி என்ன என்பதை ஸ்டீவ் சுமித் நன்றாகத் திட்டமிடுகிறார். அவர் எதிரிலுள்ள சவால்களுக்கு சிறந்த முறையில் முகம்கொடுத்து அணியை வழிநடத்தகிறார்.

இலங்கை பாடசாலை கிரிக்கெட்டைப் பற்றி அவர் கூறும் போது அங்கு நிறைய குறைபாடுகள் உள்ளன. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் போட்டித்தன்மை அதிகம். எனவே அதற்கு முகம்கொடுக்கக் கூடிய அளவுககு எங்கள் பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியானது இன்னும் முன்னேற்றமடைய வேண்டும. தேசிய அணிக்கு தெரிவாக வேண்டுமானால் பாடசாலை கிரிக்கெட்டை மட்டும் நம்பியிராமல் கழகங்களுக்கிடையிலான போட்டிகளிலும் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் எங்கள் நாட்டில் 19 வயதின் கீழ், 23 வயதின் கீழ் உள்ள கழகங்களிக்கிடையிலான போட்டிகள் மிகக் குறைவு. அவர்ளுக்கு சிறந்த போட்டித் தொடர்கள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும. அப்போதுதான் அவர்கள் தேசிய. சர்வதேச அளவுக்குத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும் இவ்வயதினருக்கு சர்வதேச போட்டித் தொடர்களில் விளையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிறந்த அனுபவத்தைப் பெற்று சிறந்த வீரர்களாக உருவாக முடியும்.

தனது முன்னேற்றம் பற்றிக் கூறிய சங்கக்கார;

நான் சிறு வயது முதலே எனது சகோதர சகோதரிகளுடன் சகஜமாகப் பழகியது, நான் பயின்ற பாடசாலையிலும் பாடசாலையிலும் எனக்கு சிறந்த முன்மாதிரிகள் கிடைத்தது. அத்துடன் நான் பழகிய சமூக சூழ்நிலையும் ஒரு காரணம், மேலும் நான் பழகிய நண்பர்களை முக்கியமாக நான் சொல்வதற்கெல்லாம் தலையாட்டாமல், நல்லது கெட்டதை விவாதித்து என்னை நல்வழிப்படுத்திய உற்ற நண்பர்கள் இவர்கள் எல்லாம் என் முன்னேற்றத்துக்கு காரணம்.

இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் எனக் கேட்ட போது;

ஒருவரும் என்னைப் போல் ஆக வேண்டும் என்று முயற்சிக்க வேண்டாம். உங்களுக்குள்ளேயும் திறமையுண்டு, அதே போல் உங்களுக்கென்றே ஒரு கனவு, இலட்சிம் இருக்கும். எனவே உங்கள் இலட்சித்தை அடைவதற்காக முயற்சி செய்யுங்கள். அப்போது நீங்கள் நீங்களாவே உயர்ச்சி பெறுவீர்கள்.

− கசுன் இறுகல் பண்டார

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.