இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

கடந்த இரு வருடங்களிலும் கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தால் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணி இவ்வாண்டு ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது.

சர்வதேச தரவரிசையில் முதலிரு இடங்களில் உள்ள தென்னாபிரிக்க – இந்திய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் கடந்த வாரம் கேப்டவுனில் மோதியது.

இம்மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை திறமையின் உச்சியில் இருக்கும் இந்திய அணி முறியடிக்கும் என்றே அநேக ஆசிய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

வேகப்பந்து வீ்ச்சுக்கு சாதகமான இம்மைதானத்தில் இரு அணிகளும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புப் போலவே இரு அணிகளினதும் வேகப்பந்து வீச்சாளர்களே போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். நான்கு நாள் நீடித்த இப்போட்டியில் மூன்றாவது நாள் முழுவதும் மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. நான்காவது நாள் முடிவதற்குள் அப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 72 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. திறமையின் உச்சியிலிருக்கும் இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் மோதும் போது வாங்கிக் கட்டிக் கொள்வது வரலாராகியுள்ளது. அவ்வணி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆசியக்கண்டத்துக்கு வெளியே (மேற்கிந்தியத் தீவுகளைத் தவிர) வேறெந்த பலம்வாய்ந்த அணியுடன் டெஸ்ட் தொடரொன்றை வென்றதில்லை. அவ்வணி தொடர்ச்சியாக இக்காலப் பகுதியில் 23 டெஸ்ட்களில் விளையாடியுள்ளன. அதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதுடன் 16 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

வெளிநாடுகளில் இந்திய அணியினரின் டெஸ்ட் வரலாறே இவ்வாறாகத்தான் உள்ளது. உள்ளூரில் வெளுத்துவாங்கும் அவ்வணி வெளிநாடுகளில் அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதமானங்களில் வாங்கிக் கட்டிக்கொள்கின்றது. அண்மைக்காலமாக கோஹ்லியின் தலைமையில் சகலதுறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ள இந்திய அணி தென்னாபிரிக்காவில் சாதிக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டாலும் அவ்வணியின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியிருந்தனர்.

எனவே இத் தொடரில் மீதமுள்ள இரு போட்டிகளில் இந்திய அணி மீண்டுடெழுமா அல்லது ‘வீட்டில் புலி- வெளியில் எலி’ என்ற வரலாறே தொடருமா என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

(எம்.எஸ்.எம்.ஹில்மி)

Comments