மலையக மக்கள் தகுதியற்றவர்களை ஒதுக்குவதில் முனைப்பாக இருக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்கள் தகுதியற்றவர்களை ஒதுக்குவதில் முனைப்பாக இருக்க வேண்டும்

எமாற்றுபவர்களை  ஏமாற்றுவதே சரியான பதிலடி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் உக்கிரமடைந்து வருகின்றன. அண்மையில் கொட்டகலையில் இ.தொ.கா. தமது வேட்ப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தது. ஹட்டனில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தமது கட்சி சார்பில் களத்தில் இருப்பவர்களுக்கான அறிமுக நிகழ்வை நடாத்தியது. வழமைப்போல இருகட்சித் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஹட்டன் நகரை அடையாளப்படுத்த கடந்த காலங்களில் எத்தனையோ விடயங்கள் காணப்பட்டன. ஆனால் ஹட்டன் நகரம் ஒரு போதைப் பொருள் கேந்திரமாக மாறிவிட்டது. இன்று ஹட்டன் நகரில் அதிகமான போதைப் பொருளை அடையாளமாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. மலையகத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றது நாங்களே! வீட்டுத் திட்டங்கள் எம்மால் தான் பெறப்பட்டன. இன்று வீடமைப்பு என்ற பெயரில் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார் இ.தொ.கா. பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்.

இதற்கு பதிலடி கொடுப்பதுபோல தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டுத் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் இவ்வாறு கேள்விக்கணை தொடுக்கின்றார். கடந்த 50 வருடங்களாக இருந்த அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? மலையகத்தின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் காரணம் நாங்களா? அவர்களா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் ஜமீன்தார்கள் போல நடந்து கொண்டதை மாற்றியமைத்தது நாங்கள் தான். இன்று அவர்கள் வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்க வழி செய்தது நாங்களே என்பது திகாம்பரம் கூற்று.

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கட்சிகளின் பரப்புரைகளால் மக்கள் குழம்பிப் போகலாம். ஆயினும் தீர்க்கமான இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு அவர்கள் வருவது மட்டும் நிச்சயம். இம்முறை தேர்தலில் விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட்டு வட்டார முறை அறிமுகமாகியுள்ளது. குறித்த ஒரு வட்டாரத்திலிருந்து ஒரு கட்சி சார்பாக ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும். குறித்த கட்சியின் சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவதோடு வாக்காளர் வேலை முடிந்து விடும். வாக்குச் சீட்டில் முன்னரைப்போல போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் இருக்காது. பெயர்கள் வாக்களிக்கும் நிலையத்துக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். முன்பு விருப்பு வாக்கை பயன்படுத்தியதைப் போல இரு கட்சி சின்னங்களுக்கு வாக்களிக்க முடியாது. அவ்வாறானவை நிராகரிக்கப்படும். அதாவது குறிப்பிட்ட வட்டாரத்தில் ஒரு வாக்காளர் ஒருசின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்கலாம். இதன் மூலம் ஒரு வேட்பாளர் தெரிவை உறுதிப்படுத்திக் கொள்ள இயலும். வாக்காளர் தாம் யாருக்கு வாக்களிக்க போகின்றோம் என்பதை தீர்மானிப்பதோடு அவர் போட்டியிடும் கட்சியின் சின்னத்தை சரியாக அறிந்திருந்தால் போதும். இதேநேரம் குறிப்பிட்ட வட்டாரத்துக்கு கட்சியினால் நியமிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் மீது அதிருப்தி கொள்ளும் பட்சத்தில் மக்கள் வாக்களிக்க விரும்பாது போனால் அக்கட்சிக்கான வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படும்.

மொத்தமாக 8293 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் முப்பதாயிரமாக காணப்படுகின்றது. கட்டுப்பணத் தொகை அதிகரித்த நிலையிலும் சுயேச்சைக் குழுக்களும் தாரளமாக போட்டியிடுகின்றன. இதனால் ஏட்டிக்குப் போட்டியான. பரப்புரைகளுக்கும் விமர்சனங்களுக்கும் குறைவிருக்கப் போவதில்லை.

நாடு முழுவதுமாக 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என மொத்தமாக 341 சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 341 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 5092 பேர் வட்டார முறையிலும் (60 சத வீதம்) 3264 பேர் விகிதாசார முறையிலும் (40 சத வீதம்) தெரிவாவர். மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளைக் கைப்பற்றுவதற்காக 342 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 22 சபைகளுக்காக 686 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 சபைகளுக்காக 293 பேரும் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, அட்டன் டிக்கோயா நகரசபை, தலவாக்கலை லிந்துலை- கவனத்துக்குரியதாக இருக்கின்றது. ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் 18 சபைகளுக்காக 445 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொனராகலை மாவட்டத்தில் 10 சபைகளுக்காக 228 பேர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் 17 சபைகளுக்காக 474 வேட்பாளர்களும் கேகாலை மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 393 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதேநேரம் பெரும்பான்மையின கட்சிகளோடு இணைந்து போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் தேசிய கட்சிகள் இனவாதத்தைக் கையாண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் விரக்தியடைந்த சிலர் சுயேச்சைக் குழுக்களாக களம் காணத் தலைப்பட்டுள்ளனர்.

அத்தோடு அதிருப்தியடைந்த சில சிறுபான்மை கட்சிகள் தமது சொந்தச் சின்னத்தில் போட்டியிட துணிந்து விட்டிருந்தன. குறிப்பாக மலையகத்தின் பல பகுதிகளிலும் கொழும்பிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவு செய்த வேட்பாளர் பட்டியலை ஐ.தே.க ஏற்றுக்கொள்ள மறுத்த விடயம் முக்கியமானது. இதற்குப் பதிலடி கொடுப்பது போல அமைச்சர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் ஏணி சின்னத்தில் போட்டியிட அதிரடியாக முன்வந்திருந்தார். ஒருமித்த முற்போக்குக் கூட்டணி என்ற பெயரிலேயே மனோவின் அணி இறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக கட்சிப் பிரமுகர் சண் குகவரதனை அவர் அறிவிக்கவும் செய்தார். இத்துடன் இரத்தினபுரி, மாத்தளை, கண்டி மாவட்டங்களில் சில இடங்களிலும் ஒருமித்த முற்போக்குக் கூட்டணி ஏணி சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இது ஐ.தே.க வுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியமாக கூட அமையலாம்.

நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்தவுடன் கைகோர்த்து களம் காணும் மலையக தேசிய முன்னணிக்கும் இனவாத ரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டமை குறித்ததான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மனோ கணேசனுக்குப் போட்டியாக அவரது தம்பி பிரபா கணேசனே விளங்குகின்றார். இவர் இ.தொ.காவோடு இணைந்து சேவல் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இங்கு 47 தொகுதிகளில் சேவல்கூவ களமிறங்கியுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கிடையிலான போட்டியினால் தமிழ் வாக்குகள் சிதறிப்போக இடமுண்டு. இதனால் உறுப்பினர் தொகை குறைவடையலாம். இவ்வாறான தமிழ் கட்சிகளின் போட்டி அரசியலால் இங்கு ஐ.தே.க. பயனடையும் சூழ்நிலை எழவே செய்யும். ஐ.தே.க சார்பில் ரோஸி சேனநாயக்கா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்தபொதுத் தேர்தலில் ரோஸி சேனநாயக்கா மனோவைவிட குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தமையை அரசியல் அவதானிகள் கோடிட்டுக் காட்டுகின்றார்கள்.

மலையகத்தின் பல கட்சிகள் ஒரே வட்டாரத்தில் போட்டியிடுவதால் வாக்குகள் பல முனைகளில் பிரியும். அத்துடன் வாக்களிப்பு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். வழமையாகவே நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படும் பிரதேசம் மலையகமே! இம்முறை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இது மலையகத்தை பொறுத்தமட்டில் எந்தளவுக்கு பயன்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். புதிய கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் விருப்பு வாக்குகள் அளிக்கும் முறை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாலும் வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்படவிருப்பதாலும் தேர்தல் முடிவுகள் விரைவாகவே வெளிவரக்கூடியதாக இருக்கும். இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஒரேநாளில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுவது ஒரு சிறப்பாகும்.

மலையக மக்களைப்பொறுத்தவரை இது இன்னுமொரு தேர்தலாக மட்டும் அமைந்து விடக்கூடாது. தமது பிரதேசத்தில் உண்மையான மக்கள் பிரதிநிதியை அடையாளங்கண்டு வாக்களிக்க வேண்டியது மலையக மக்களின் கடப்பாடு. ஊழல், மோசடி, வீண்விரயம், அசட்டை மனப்பான்மை கொண்டவர்களை இணங்கண்டு ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக மலையக வாக்காளர்கள் தம்மை தயார் படுத்திக்கொள்வது மிகமிக அவசியமானது.

பன். பாலா 

Comments