ரமணி Vs மைதிலி | தினகரன் வாரமஞ்சரி

ரமணி Vs மைதிலி

தைப்பொங்கலுக்கு வீட்டுக்கு வந்திடு!

தொலைபேசியூடாக இதே வார்த்தையை அம்மா மூன்றாவது முறையாகவும் என்னிடம் கூறி விட்டாள். எனக்கோ தர்மசங்கடமான நிலைமை.

ஒருபுறம் 'உங்க வீட்டு வாசல நான் ஜென்மத்துக்கும் மிதிக்க மாட்டேன்' என்று சூளுரைத்த மனைவி. மறுபுறம் 'பேரப்புள்ளைகளப் பாக்க ஆசையாக இருக்கு. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா' என அழைப்பு விடுக்கும் அம்மா. தயங்கித் தயங்கி மனைவியிடம் விசயத்தைக் கூறினேன்.

'உங்கட அம்மாவோட ஒண்டும் எனக்குக் கோபமில்ல அங்க வாறதில எனக்கிருக்கிற ஒரேயொரு பிரச்சின உங்கட தம்பி பொண்டாட்டிதான்'

'அவங்க இப்ப அம்மாவோட இல்லையாம். தனிய வீடெடுத்து போயிட்டாங்க எண்டு அம்மா சொன்னவ'' அவங்க தைப்பொங்கலுக்கு உங்க அம்மா வீட்ட வரமாட்டாங்களா? '

'அதப்பற்றி எதயும் அம்மாசொல்லல்ல. வரலாம். வராமலும் விடலாம்.'

'வானிலை அறிக்கையில' மழைவரலாம், வராமலும் விடலாம்' எண்டு சொல்லுறாப்போல சொல்லுறீங்க'

'நிச்சயமாத் தெரியாத ஒண்ட எப்படிச் சொல்லுறது?

'அதுவும் சரிதான்... உங்கட அம்மா பாவம். தனியக்கிடக்கிற மனுசி... வயசான காலத்தில கிடைக்கிற அற்ப சந்தோசம் பேரப்பிள்ளைகள கொஞ்சுறதுதான். அதையேன் நாம கெடுப்பான்?'

மனைவி பச்சைக்கொடி காட்டிவிட்டாள். மனத்தில பெருக்கெடுத்த உற்சாகத்தோடு அம்மாவிற்கு விடயத்தைத் தெரியப்படுத்தினேன்.

இம்முறை தைப்பொங்கலுக்கு முதல் நாள் சனிக்கிழமை வருவதால் தூரப்பயணம் செல்வதில் அவதிப்படத் தேவையில்லை. பிளாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் அடைபட்டுக் கிடக்கும் சிறிசுகள் விடயமறிந்து துள்ளிக் குதித்ததைக் கண்டு எனக்குள்ளும் மகிழ்ச்சி பிரவாகித்தது. கடந்த இரண்டு வருடங்களாக எனது வீட்டுத் தைப்பொங்கல் சூரிய உதயத்தைக் காணாமலே... படைக்கப்பட்டு... ருசிக்கப்பட்ட அனுபவங்கள்... கொஞ்சம் சங்கடமானவைதான்.

வெள்ளியன்று இரவு ரெயிலில் புறப்பட்டோம். யார் செய்த புண்ணியமோ அன்று பயணஞ் செய்ய இருந்த குடும்பமொன்று தமது பயணத்தை இறுதி நேரத்தில் கைவிட்டதால் உறங்கலிருக்கை ஆசனப்பதிவை இரத்துச் செய்துவிட, அந்தநேரம் பார்த்து நானும் ஆசனப் பதிவுசெய்ய புகையிரத நிலையம் சென்றிருந்ததால் ரிக்கட்டுகள் எனது கைமாறியது ஒரு சுகானுபவம்.

பிள்ளைகள் இருவரும் மகிழ்ச்சியோடு தமது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க, பெரியவர்கள் இருவரும் இறுக்கமான மன உணர்வுகளோடு பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளாக எனது மனைவி என்னிடம் கேட்டாள்.

'உங்கட அம்மா, நம்மள கூப்பிட்ட மாதிரி உங்கட தம்பி குடும்பத்தையும் வரச்சொல்லியிருந்தா என்ன பண்ணுறது?'

'ஒண்டுமே பண்ண முடியாது. அது அம்மாட வீடு' அங்க ஆர்வரணும் போகணும் எண்டு முடிவுசெய்யுற அதிகாரம் அவவுக்குத்தான் இருக்கு.

'உங்கட தம்பி பொண்டாட்டி வந்தால், அவள நான் எப்பிடி முகங் கொடுக்கிறது?'

'இஞ்ச பார் ரமணி, குடும்பமெண்டால் பிணக்குகள் வாறது சகஜம் தான். எனக்குக் கூடப் பிறந்த உறவெண்டு உள்ளது ஒரேயொரு தம்பி. அவனுக் கெண்டு இருக்கிற உறவு நான். எங்களுக்குள்ள இது வரைக்கும் முரண்பாடுகளெண்டு பெரிசா எதுவுமே வந்ததில்ல. கடந்த ரெண்டு வருஷமாத்தான் நாங்க ரெண்டுபேரும் ஆளை ஆள் பாக்காம, பேசாம இருக்கிறம். அதுக்கு காரணம் நாங்க எங்கட பெண்டாட்டிமாரின்ர உணர்வுகளுக்கு குடுக்கிற மரியாதை. நீங்க ரெண்டுபேரும் உங்களுக்குள்ள சண்டைபோட்டப்போ, உங்க ரெண்டு பேரின்ர பக்கத்திலயும் நியாயம் இருந்திச்சு. அதனாலதான் ஒரு தற்காலிக பிரிவ நாங்க ஏத்துக் கிட்டம். அந்தப் பிரிவு தொடரணும் எண்டு நீ ஆசைப்பட்டா தம்பி பொண்டாட்டியோட பேசாம இரு. 'ஆனாநான் பேசாம இருக்கமாட்டன். எனக்கு என்ட தம்பி வேணும். ஆயுசுக்கும் அவன்ர துணை எனக்குவேணும்'

கூறும் போது எனது நா தளதளத்தது. கண்கள் கலங்கின. அதன் பிறகு ரமணி எதுவுமே பேசவில்லை சிந்திக்கிறாள் என்பது புரிந்தது.

அதிகாலையில் எமது ஊர் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய எம்மை அழைத்துச் செல்ல தம்பி காத்திருந்தது எமக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி.

அவனோடு அவனது காரில் ஏறிப் பயணித்து வீடு வந்து சேர்ந்த போது தம்பியின் மனைவி தேநீர்க் கோப்பைகளைக் கைகளில் தந்து உபசரித்தமை எமக்குக் கிடைத்த மற்றுமொரு இன்ப அதிர்ச்சி.

பிள்ளைகள் தேநீர் அருந்திய சில நிமிடங்களில் உறங்கிப் போனார்கள். தம்பியின் மனைவி அவர்களைத் தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினாள். மனைவியும் நானும் ஓய்வுபெற எண்ணி படுக்கையில் சரிந்தோம்.

தூக்கம் கலைந்தபோது அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மா ரொம்பவும் உருமாறிப் போயிருந்தாள். முதுமை... தள்ளாமை... இவற்றோடு அவளது தேகம் உலர்ந்து சுருங்கிப் போய் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. நொடிக்கொரு தடவை இருமினாள். சுவாசிக்க சிரமப்படுவதும் புரிந்தது.

'அம்மா, என்ன செய்யுது உங்களுக்கு? ஏன் இப்படி மோசமாப் போயிட்டீங்க? '

'கொஞ்ச நாளா சுகமில்ல ஐயா. என்னெண்டு சொல்லத் தெரியல்ல ஒருதொகை வருத்தம். நான் தவமிருந்து பெத்த ரெண்டு புள்ளைகளுமே ஆளை ஆள் பாக்காம பிரிஞ்சிருக்கிற கொடுமைய என்னால தாங்கிக்க முடியல்ல. நான் சாக முந்தி உங்கள சேர்த்துப்பாக்கணும் எண்டு ஆசைப்பட்டன். அதனால தான் உங்கள வரச்சொன்னன். என்ர வார்த்தைகள மதிச்சு ரெண்டுபேருமே வந்திட்டீங்க'

மனத்தில் ஒரு குற்ற உணர்வு பரவிப் படர்ந்து வியாபித்தது. பிள்ளைகளை வளர்க்க பெற்றவர்கள் படுகின்ற சிரமங்களை அனுபவம் எனக்குப் புகட்டியிருந்தது. எனக்குள்ளிருந்த கோபம்... அகங்காரம் எல்லாம் கரைந்துபோய் மனம், லேசாக, தம்பியைதேடிச் சென்றேன். இருவரும் மனம் திறந்து பேசினோம். ஒருவரை ஒருவர் தழுவினோம். மன்னிப்பு கேட்டோம்.

ஆனால், எங்களது துணைவியர் இருவரும் கோபம் நீங்கி குண நலன் பாராட்டியதாகத் தெரியவில்லை. ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருவரையொருவர் தவிர்ப்பது புரிந்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாவிட்டாலும் பிள்ளைகளை எதிர் கொண்டால் அவர்களை அணைத்து தமது அன்பை வெளிப்படுத்தத் தவறவில்லை. சகோதரர்கள் இருவரும் பொங்கலுக்கான ஆயத்தங்களில் இறங்கினோம்.

அடுத்து வரும் சில மணிநேரங்கள் நாங்கள் பிஸியாக இருக்கப் போவதால் இந்தக் கதையைக் கூறிக் கொண்டிருக்கும் நான் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். இதன் மீதியை என் மனைவியின் கூற்றாய் கேளுங்கள்.

நான் ரமணி. திருவாளர் கேசவனின் மனைவி. தைப்பொங்கலுக்காக கணவனின் வீட்டிற்கு வந்திருக்கும் நான் என் மைத்துனன் மனைவி மைதிலியைச் சந்திக்கும் தருணங்களைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்ப காலங்களில் அவளும் நானும் நல்ல சினேகிதிகளாயிருந்தோம். இன்னும் சொல்லப் போனால் அவளை என் னமத்துனனுக்காகத் தேர்ந்தெடுத்ததே நான் தான். இடையில் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இரு குடும்பங்களையும் பிரித்து வைத்துவிட்டது. அந்த முரண்பாடு என்ன? எப்படி நாம் பிரிந்தோம் என்பதைப் பற்றியெல்லாம் நான் இங்கு கூறப் போவதில்லை.

என் மாமியாரது கோரிக்கையை என் கணவர் என்னிடம் கூறியபோது முதலில் எதிர்மறையான உணர்வை வெளிக்காட்டவே முனைந்தேன். நிதானமாக யோசித்தபோது என்னுடைய பிடிவாதத்திற்கு அர்த்தமே இல்லை எனத் தோன்றியது. எனது மாமியார் இன்றுவரை சினந்து என்னிடம் ஒரு வார்த்தையைக் கூட வெளிப்படுத்தியதில்லை. அப்படியிருக்கும் போது யார்மீதோ கொண்ட கோபத்தை யார் மீதோ காட்டுவதில் நியாயம் இல்லை என உணர்ந்து புறப்பட்டு வந்துவிட்டேன்.

மைதிலியைக் காணும் போதெல்லாம் எங்களது பிரிவுக்குக் காரணமாகவிருந்த அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து போகிறது. அவளது முகத்தை நேருக்குநேர் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறேன். பொங்கல் பொங்கும் போது இரு மருமகள்மாரும் இணைந்து பானையில் அரிசிபோட வேண்டும் என்று மாமியார் கட்டளையிட்டிருக்கிறார். அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று புரியவில்லை. பிள்ளைகள் தாங்கள் இணைந்த சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டின் பின்பக்கம் பரந்து கிடந்த தோட்டக் காணியில் விளையாடி மகிழும் அவர்களைத் தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்கிறேன். பெரியவர்களிடத்திலிருக்கும் கோப தாபங்கள் எதுவும் அவர்களிடமில்லை. அன்றலர்ந்த மலர்களாகச் சிரிக்கும் அவர்களது சந்தோசம் எனக்கும் தொற்றிக் கொள்கிறது. தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் அவாவில் வீட்டின் பின்புறத்தை நோக்கி நகர்கிறேன்.

கொய்யா பழங்கள் பழுத்திருக்கம் வாசனை என் சுவாசத்தில் கலக்கிறது. மா, பலா, வாழை எனும் முக்கனிகளும் காய்த்துக் குலுங்கும் அந்தத் தோட்டம் என் மாமியாரின் கடின உழைப்பால் மிக மிகச் சுத்தமாகப் பேணப்பட்டுள்ளதைக் கண்டு வியக்கிறேன். காலை இளங்காற்று என் தேகத்தை வருடுகையில் உடல் சிலிர்ப்பதை உணர்கிறேன். உண்மையில் உழவர் திருநாளைக் கொண்டாடி மகிழ உவப்பான ஓர் இடமாக அந்த இல்லத்தை நான் காண்கிறேன்.

கரும்பொன்றை உடைத்து கடித்துச் சுவைக்கையில் திடீரென்று பிள்னளகளிடத்திலிருந்து எழுந்த அந்த ஓலம்... என்னை பீதியடையச் செய்ய... அவர்களை நோக்கி ஓடுகிறேன். பிள்ளைகளை நெருங்கியபோது விளையாடிக் கொண்டிருந்த மைதிலியின் இளைய மகன் சாரங்கன் கிணற்றிற்குள் தவறி விழுந்திருப்பது புரிந்தது. ஒருகணம்... என் ஐம்புலன்களும் இணைந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்ற எனக்கு ஆணை பிறப்பிக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் நிலமையைப் புரிந்துகொண்டு கிணற்றில் குதிக்கிறேன். நீரில் மூழ்கித் திணறிக் கொண்டிருக்கும் சாரங்கனை வாரி எடுத்துத் தலை கீழாகத் தூக்கிப்பிடிக்கிறேன். அவன் விழுங்கியநீர் வாயின் வழியாகவெளியேற... அரங்கேற இருந்த ஒரு துன்பியல் நாடகம் பாதியிலேயே நின்றுபோய்... சாரங்கனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு எப்படி நான் வெளியே வந்தேன் என்பதும்... இப்படி ஓர் அசுரபலம் எப்படி எனக்கு வந்தது என்பதும் புரியாமல் நான் விழிக்க... உயிர் பிழைத்த தன்னுடைய மகனையும் என்னையும் மாறிமாறி கட்டியணைத்து முத்த மழைபொழியும் மைதிலி...

'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...? '

மீண்டும் உங்களிடம் கதை கூறவந்திருக்கும் நான் உங்கள் கேசவன்... தைப்பொங்கல் திருநாளை குடும்பத்தவரோடு இணைந்து குதூகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். பண்டிகைகள் யாவும் அர்த்தம் நிறைந்தவை. அவை அன்பைப் பகிர்தலையும் உறவைப் புரிதலையும் வளர்க்கும் ஊடகங்கள். கரும்பு, இளநீர், பால், பழங்கள், பூக்கள், கோலங்கள் எல்லாம் கண் முன்னே காண்கிறேன். பொங்கல் வேலைகளை ரமணியும் மைதிலியும் பங்கு போட்டுக்கொண்டு செய்கின்றனர். அவர்களோடு தம்பியும் நானும் இணைந்துகொள்கிறோம்.

பால் பொங்கி வழிகிறது... பிள்ளைகள் புத்தாடை அணிந்து மத்தாப்பு கொளுத்தி குதூகலிக்கின்றனர். தன் பிள்ளைகளின் குடும்பங்கள் தைப்பொங்கல் நன்னாளில் இணைந்த மகிழ்ச்சியில் பூரித்துநிற்கிறாள் அம்மா. வாசலில் பூத்துக் குலுங்கும் குண்டு மல்லிப் பூக்களின் வாசம் இல்லம் எங்கும் மணக்கிறது. 

மதுபாரதி, ஏறாவூர்

Comments