ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “அண்ண முருகேசு மாஸ்டரை கொஸ்பிடலுக்கு கொண்டு போய் இருக்கினமாம். என்னென்டு தெரியேல்ல.”

“நேத்திரவு அவரோட சந்தியில பேசிக் கொண்டிருந்து போட்டில்ல வீடு வந்தனான். என்னோட நல்லா பேசிக் கொண்டிருந்தவரப்பா...”

“முதல் நாள் நானும் கண்டு பேசினனண்ணே ரியூசன் கொடுத்து போட்டு வந்து கொண்டிருந்தவர்”

“ஆனா சின்னராசு ஒன்டு கவனிச்சியே”

“என்னண்ண?”

“முருகேசு மாஸ்டர் கொஞ்ச நாளா டென்சன்ல இருந்தவர் தெரியுமோ?”

“அப்பிடியே”

“அடுத்த வருசம் ரிடையராக இருந்தவர். மகன் நல்லா படிச்சிப் போட்டவன். ஆனா வேலை கிடைக்காம வீட்டில இருந்தவன். ரெண்டு பெட்டயள். இருவருக்கும் கல்யாண வயசு வந்து போட்டுது. காசு பணமென்டு பெரிசா எதுவும் சேர்த்து வைக்கேல்ல. ஸ்கூல்ல படிப்பிச்சிப்போட்டு வெளியால ரியூசன் கொடுத்தவர். ரெண்டு வேலை பார்த்துத்தான் குடும்பத்தை ஓட்ட முடிஞ்சிது. மெசின் மாதிரி உழைக்க வேண்டிக் கிடந்தது. உதால ஏற்பட்ட மனஅழுத்தம் தான் அவரை கட்டில்ல போட்டுது.”

“நீங்க சொல்லுறது சரிதானண்ண அவரை எப்ப ரோட்டில் கண்டாலும் ஒன்டு ஸ்கூலுக்கு போய் கொண்டிருப்பார் இல்லையென்டா ரியூசன் கொடுக்க போவார். இல்ல ரியூசன் குடுத்துப்போட்டு திரும்பிப்போவார்”

“இடைக்கிடை கொஞ்சம் ஓய்வு எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும். பிள்ளையளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்குறதை அவரின்ட கடமையாக செஞ்சவர். மனசு சரியென்டாலும் உடம்பு ஒத்துழைக்க வேணுமே..!

“நாங்களும் ஓய்வு ஒளிச்சல் இல்லாம கஷ்டப்படக் கூடாது இடைக்கிடையில ஓய்வு எடுத்தா நல்லதென்ன?”.

“உடம்பென்டது மெசின்மாதிரி. மெசினுக்கு எரிபொருள் மனுசனுக்கு தீனி. மெசினுக்கு எண்ணெய் மனிசனுக்கு தூக்கம் ஓய்வு. இப்படி கிழமைக்கு ஒருநாளாவது நல்ல ஓய்வு குடுத்தாத்தான் உடம்பு சுறுசுறுப்பா வேலை செய்யும். உதுக்கு ஒரு உதாரணம்.”

“என்னண்ண”

“இப்ப மனிசன் இருக்கிறது போட்டியும் பொறாமையும் நிறைஞ்சி கிடக்கிற உலகம். உதில் பணமிருந்தாதான் ஆக்கள மதிப்பினம் என்டபடியா முழு உலகமும் பணத்தை சம்பாதிக்கத்தான் ஓய்வு ஒளிச்சல் இல்லாம ஓடிக் கொண்டிருக்கு. உதுக்கு இடையில கொஞ்சம் ஓய்வு குடுக்க வேணும் என்டு கூறி ‘உலகத்தை ஆற்றுப்படுத்துற 7 நாட்கள்’ என்டு ஒரு நிகழ்ச்சி செய்கினம்.”

“ஆற்றுப்படுத்தலென்டா என்னண்ண?

“ஆற்றுப்படுத்தலென்டா அமைதியாக இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுவது. இந்த நிகழ்ச்சிய உலகத்தில 66 நாடுகளில நடத்துகினம்.”

“எங்கட நாட்டிலயுமோ?”.

“ஓமப்பா எங்கட நாட்;டிலயும்தான”

“எங்கட நாட்டில இதை முன்னின்டு நடத்துகிறவர் அதரலியே ரதனதேரர் என்ட பௌத்த பிக்கு”

“உந்த பெயரை கேட்டிருக்கிறனான்.”

“உவர் பாராளுமன்றத்தில ஒரு உறுப்பினர். உந்த நிகழ்ச்சிக்கு உரியவர்களிட்ட பேசி அவர்; அரசாங்க ஒத்துழைப்பையும் தேடிப் போட்டவர். உந்த 7 நாள் நிகழ்ச்சிய வருசத்தின்ட முதல் நாளான போன முதலாம் திகதி விகாரமகாதேவி பூங்காவில ஆரம்பிச்சவை”.

“7 நாளும் ஒரே நிகழ்ச்சியோ?”

“ஏழு நாளும் வெவ்வேறு நிகழ்ச்சிகளத்தான் நடத்தினம். மனிதரிட்ட இப்ப இருக்கிற சிந்தன மாறவேண்டும் தெரியுதோ சிந்தனைகள் மாறி புதுப்புது சிந்தனைகள் வரவேணும். போட்டி பொறாமைய மாத்திக்கொண்டு மனுசா; ஒருத்தருக்கொருத்தர் உதவ வேண்டும். முக்கியமா இயற்கையோட கூடிவாழுற பக்குவம் மனிசருக்கு வர வேணும்;. இல்லையெண்டா மனிசகுலத்தின்ட அழிவு விரைவில வந்துபோடும் விளங்குதோ”

“விளங்குதன்ன”

“இயற்கையை நேசிக்கிறவை முதலில ஒன்டாக்கூட வேணும். அறிவைப் பாவிக்க வேணும். உலகத்தில இப்ப எரிபொருள் குறைஞ்;சுக்கொண்டு போகுது. உது முடிஞ்சி போட்டுதென்டா எல்லாமே நிண்டு போகும். குடிதண்ணி கிடைக்காது மின்சாரம் கிடைக்காது”

“வீணா அழிஞ்சி போகுமென்ன”

“உத மனசில இருத்திக்கொள்ள வேணும். வன சீவராசிகள் அழிஞ்கொண்டு போகுது என்டு சொல்லுறதவிட உதுகல மனிசன்தான் அழிச்சிக்கொண்டு இருக்கிறான் என்டது நிறையப்பேருக்குத் தெரியிறதில்ல. இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிப்போடுவினம். பின்னால மழை இல்ல என்டு சொல்லுவினம் இருப்பதையெல்லாம் பாவிச்சிப் போட்டமென்டா அது முடிஞ்சி பிறகு என்ன செய்யிறதென்டத யோசிக்க மாட்டினம். உதுபோலதான் எண்ணெய்யும் இப்ப இருக்கிற எண்ணெய் குளங்களில பெற்றௌல் டீசல் முடிஞ்சிதென்டா கரண்ட் இல்ல கார் பஸ் இல்ல போக்குவரத்து இல்ல”.

“சாப்பாடும் இல்லயெண்ண”

“உதுக்குத்தான் சூரிய மின்சாரம, கடல்அலை மின்சாரம, காத்து மின்சாரம் என்டவையை பாவிக்க பழகிக்கொள்ள வேண்டும். என்டு ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டு இருக்கினம். ஆனா எங்கட ஆக்கள் இன்னும் நிலக்கரி மின்சாரம் எண்ணெய்யில மின்சாரம் என்டுதான் நிக்கினம் உவை பழகிப்போன தென்டபடியா அதனைவிட்டு புதிய வழிமுறைகள் கிடக்குது. ஆனா உதால செலவு கட்டுப்படியாகாது என்டு சொல்லிக் கொண்டிருக்கினம். இறுதியில இதுவூம் இல்ல. அதுவும் இல்ல. என்ட நிலையிலதான் இருக்கப்போகினம்.”

“ஒன்டும் மிஞ்சாமல் போகுமென்ன”

“ஓம் சின்னராசு. கோடிக்கணக்கான வருச காலத்தில் இந்த உலகத்தில மகா அழிவூகள் ஐந்துமுறை வந்து கிடக்கு என்டு சொல்லப்படுகுது. கடைசியா ஏற்பட்ட மகா அழிவில வானில இருந்து கோள் விழுந்து டைனோசர் என்ட சீவராசி எல்லாம் அழிச்சுப் போட்டுது. ஆனா ஐந்து தடவை மகா அழிவூ வந்த போதும் பூமி மொத்தமா அழியேல்ல. பூமியிலயும் ஒரு பகுதி தப்பிப்போட்டுது. உதில இருந்துதான் பூமி திரும்பவும் வளந்துது. உந்த ஐந்து மகா அழிவு காலத்திலயூம் மனுசன் இருக்கேல்ல. ஆறாவது பூமி காலத்திலதான் மனிசன் பிறந்தான். ஆனா இந்த ஆறாவது அழிவுக் காலத்தை ஒரே அடியா மனுசன் அழிச்சிப்போடுவான் போலத்தான் கிடக்கு இப்படி ஒரேயடியா அழிவுக்கு காரணமாகாம இயற்கையோட வாழப்பழகுங்கோ என்டதை அழுத்திச் சொல்லத்தான் இந்த ஏழு நாள் ஆற்றுப்படுத்தல் நிகழ்வை நடத்துகினம்”.

“ஏழு நாள் நிகழ்ச்சியில என்னென்ன நடக்குது?”

“முதல்நாளில இருக்கிற எரிபொருளை கூடியவரை சேமிக்க வேணும். அது வேகமா முடிஞ்சி கொண்டு போகுது மீண்டும் புதுப்பிக்கத்தக்க சூரிய மின்சாரம் கடலலை மின்சாரம் காற்று மின்சாரம் ஆகியவற்றை முறைப்படி உற்பத்தி செஞ்சமென்டா இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம். உதுக்கு ஒரு சமிக்ஞையாக உலக ஆற்றுப்படுத்தும் முதல் நாள் நிகழ்ச்சிக்கு முடிந்தவரை சைக்கிள்களில வாருங்கோ என்டு அழைப்பு விடுத்திருக்கினம்”.

“ சைக்கிளில வரச் சொன்னவையே?”

“இப்ப சைக்கிள் ஓட்டுறவை குறைஞ்சி கொண்டு வருவினம். ஆனா யாழ்ப்பாணத்தில குறையேல்ல. ஸ்கூல் பெட்டையள் இன்னும் சைக்கிள்ளதான் போறவை. தென்னிலங்கையில் உந்தப் பழக்கம் குறைஞ்சி கொண்டு வருகுது. அங்க உள்ள வீதிகளில சைக்கிளவிட்டு நடந்து போறதே பெரிய விசயம். இன்னொன்டு உள்ளவை வீடுகளுக்குள்ளேயே ஏசி போட்டுக் கொண்டு தேக அப்பியாசம் செய்வினம். அதுக்கென்டு இருக்குற சைக்கிள் லேன்ல சைக்கிள ஓட்டினமென்டா வம்பும் குறையும் மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். சீனாவில இன்னும் சைக்கிள் பழக்கத்தை விடேல்ல. தெரியுமோ சீனாவின்ட தலைநகரமான பீஜிங்கில மட்டும் இப்ப ஒருகோடி சைக்கிள்கள் இருக்கென்டு கணக்குப் பார்த்திருக்கினம”

“ஒரு கோடி என்டா ஒவ்வொரு குடும்பத்திலயும் ஒரு சைக்கிள இருக்குமென்ன.

“பின்ன சீன காரர்களுக்கு சைக்கிள் ஓட்டுறதுக்கு நல்ல ஆர்வம் இருக்கு தெரியுமோ?”

“எங்கட ஆக்களுக்கு இப்ப உதில ஆர்வம் இல்லையண்ண.”

“இப்ப செல்போனும் இன்டனெட்டும் வந்துபோட்டுதில்ல உதிலதான் எல்லோரின்ட கரிசனையும் கிடக்குது. சின்னராசு எங்கட இளைய தலைமுறை இப்ப முழு நேரமும் செல்போனிலதான் பொழுதுபோக்குது. உதாலதான் மனஅழுத்தம் பிரச்சினையள் கூடுது”.

“சரியா சொன்னியள். முதலில உவையளதான் ஆற்றுப்படுத்த வேணும்”.

“உதுக்கு ஏழு நாள் போதாதென்ன”

“உதைத்தான் நானும் நினைச்சனான் நீங்களும் சொல்லிப் போட்டியள்.”

Comments