போர்க்காலம் பெண்களை உரிமைக்காக கழுவேறச் சொன்னது | தினகரன் வாரமஞ்சரி

போர்க்காலம் பெண்களை உரிமைக்காக கழுவேறச் சொன்னது

பொருளாதார விடுதலையே பெண்ணுக்கு விடிவைத்தரும், அங்கிருந்து சமூக விடுதலையை வெல்ல முடியும் என்பதும் அதன் பின் அரசியல் விடுதலை சாத்தியமாக்கப்பட வேண்டும் என்பதும், பெண் விடுதலைக் கோட்பாட்டாளர்களால் உலகெங்கும் முன்வைக்கப்படும் கருத்தாக உள்ளது.

அப்படியாயின் ஏன் பெண்கள் இன்னமும் நலிவுற்றிருக்கின்றனர் என்பது எனது கேள்வி. பெண்கள் ஆண்களுடன் கூட்டாக உழைக்கும் இடங்களில் அவளுக்குரிய கவுரவம் தரப்படுகிறதா என்றால், ஆம் எனவே சொல்லமுடிகிறது ஆனால் அங்கும் பெண் எப்படி நடத்தப்படுகிறாள் என்றால் அதைப்பேசுவது வேடிக்கையாகவிருக்கும்.

அண்மையில் ஒரு பொது நிகழ்வில் பெண்களும் மேடையில் இருந்தனர். ஆண்களும் மேடையில் இருந்தனர். பதவிவழி அந்தப்பெண்ணே முக்கிமானவராகவும் இருந்தார். சாதாரண சிற்றுண்டி வழங்கும் பரிசாரகர் முதலில் ஆண்கள் அனைவருக்கும் வழங்கிய பின்னரே அதிலும் குறிப்பாக வந்திருந்த ஒருவர் சுட்டிக்காட்டியதன் பின்பே பெண் அதிகாரிக்கான சிற்றுண்டியை வழங்கினார். இன்னுமொரு சம்பவம். கோவிலில் அர்ச்சகர் விபூதி கொடுக்கிறார். முதலில் ஆண்கள் நிற்கும் பக்கமே தெரிவாகிறது ஆகமங்களின்படி ஆண்கள் இடப்பாகத்தில் இல்லை. அது உமைக்குரிய பக்கம் ஆனால் கோவில்களில் ஆண்கள் முன்னிலைப்படுத்தப்படுவதால் வலமிருந்து இடமாக வரும் சம்பிரதாயம் நடக்கிறது.

இவையெல்லாவற்றையும் உடைத்துப்போட்ட போர்க்காலம் பெண்களை உரிமைக்காக கழுவேறச் சொன்னது. நாங்களும் செய்வோம். எங்களாலும் முடியும் என்று பெண்களும் ஆயுதம் ஏந்தப் புறப்பட்டனர். இயக்கங்களில் இணையும் நோக்கோடு தாமாகவே முன்வந்து குழுக்களில் இணைந்த பல பெண்கள் இயக்கங்களிலிருந்து வெளியேறியோ, அல்லது கைவிடப்பட்டோ, அந்தரித்தோம் என்று கூறிய சோகக் கதைகளை நானறிவேன். இவர்களில் பலர் புலிகளின் அமைப்பில் சேர்ந்து கொண்டிருந்தனர்.

மண் விடுதலையோடுதான் பெண்விடுதலையும் அடங்கியுள்ளது என்பதையும் பெண் விடுதலையின்றேல் மண் விடுதலையில்லை என்ற அவர்களது கோசத்தையும் நம்பி பெண்கள் ஆயுதமேந்த முன்வந்தனர். இது எமது மண்ணில் மட்டுமல்ல இங்கு போர் நடந்து கொண்டிருந்தபோதே போரை முடித்துக்கொண்ட கியூப, வியட்நாமிய, சீன, பர்மிய நாடுகளில் பெண்களின் ஆயுதமேந்திய போராட்டம் நடந்தவைதான். போர் முடிந்ததும் அவர்களது தீரமும் முடிவுக்கு வந்துவிட்டன. அவர்கள் மீண்டும் வயற்காட்டுக்கும் அடுப்பங்கரைக்கும் சென்று விட்டனர்.

பழைய வாழ்க்கையை தொடர்ந்து நடத்தவேண்டிய தலைவிதி அவர்களுக்கு விடுதலை பெற்ற நாடுகளில்கூட பெண்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கவில்லை. இங்கும் அதுதான் நடந்தது. எமது பெண்களின் ஆயுதமேந்திய போராட்டங்கள் எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும் சிறப்பாக அவர்கள் செயல்பட்டிருந்தாலும் அவை மேலும் பெண்களை போரில் இணைப்பதற்கான பிரசாரமாக இருந்ததேயொழிய பெண்கள் எந்தவகையிலும் திட்டமிடுதலிலும் தீர்மானமெடுப்பதிலும் உப்புக்குச் சப்பாணிகளாகவே உட்கார்ந்திருந்தனர்.

அவர்களால் காதலிக்க முடிந்தது. என்றாலும் எல்லோராலும் கலியாணம் வரை போக முடியவில்லை. ஒரு பெரிய அமைப்பாக தமது செயல்களை முன்னெடுத்தவர்களாலேயே சாதி, சமய, சொத்துடமை, போன்ற வேலிகளை கடக்க முடியாமலிருந்தது. அவற்றைத் தாண்டமுடியாமலும் பழைய வாழ்க்கைக்குள் போக முடியாமலும், இன்றுவரை முதிர் கன்னிகளாக இருப்பவர்களுள் பெரிய படை நடத்தியவர்களும், சாதாரணப் போராளிகளும் அடக்கம். இவர் வரும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்ல பலர் இருந்தனர் அப்போது. இப்போது தன் உறவினர்களுக்குப் பாரமாக இருப்பதாக கூறுகிறார் பாமா, இவர் அமைப்பில் இருந்தபோது, திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டவர், இவரது சாதியை விசாரித்தறிந்த பின் திருமணத்துக்கு மறுத்து விட்டார். அவரும் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த போராளிதான்.

இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்த எங்கள் போராளிகள்,முற்று முழுதாக கணவனின் அல்லது குடும்பத்தின் சொத்தாக மாறி தமது கோட்பாடுகளை விட்டு வீட்டுக்குள் முடங்கியதை கண்ணால் கண்டோம். இதை நாங்கள் வேடிக்கையாக பெண்விடுதலை என்பது கொடியேறும் வரைதான் அதற்கப்பால் குடும்பக் குத்து விளக்காகிவிடுவர் என்போம். இதில் கொடி என்பது தாலிக்கொடியை குறிக்கும்.

உடல் ரீதியாக படுகாயமடைந்தவர்களால் உடல் உழைப்பை வழங்க முடியவில்லை. அல்லது வழங்கினாலும் அது வேலை கொள்வோருக்கு திருப்தியளிப்பதாக இல்லை. இந்நிலையில் பெண்களை மிக மோசமாக தாக்கும் அபாயம் தனிமை என்பதும், தட்டிக்கேட்க ஆளில்லாமையுமாகும். எவ்வளவுதான் முற்போக்குக் கருத்துகளை உருவேற்றி வைத்திருந்தாலும், அவர்களுக்கும் தன்மானம், துணிவு, பயிற்சி எல்லாம் இருந்தாலும். பசி வந்திடப்பத்தும் பறந்துபோம். தமக்காக போராட முன்நின்ற போராளிகளான இவர்களுக்கு நேர்மையான ஒரு வேலையை கொடுக்க முன்வராத சமூகம் அவளுக்கு விபசாரி என்ற பட்டத்தை இலகுவாகக் கொடுக்கிறது.

இந்த நிலையில்தான் அரசியல் விழிப்புணர்வு பற்றிப்பேசுகிறோம் இன்னமும் வன்முறை அடங்காத நிலையே சமூகத்தில் காணப்படுகிறது. வன்னிப்பகுதியில் மனைவியை கடுமையாகத் தாக்கியவர்களுக்கெதிராக வழக்குகள் நடத்தி தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளனர், யாழ்ப்பாணமும் அப்படித்தான் சாவகச்சேரியில் இதுபோன்ற வழக்கொன்று நடைபெறுவதாக பத்திரிகை சொல்கிறது. பரவாயில்லை பெண்கள் இந்தளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னமும் கணவனிடம் மோசமான சித்திரவதைகளை அனுபவித்து வரும் பெண்கள் உள்ளமை கண்கூடு.

அரசியல் உரிமைகள் என்பவை இந்த விழிப்புணர்வுகளை அடுத்தே வருகிறது. தன்னை அறிந்து தனக்கான உரிமைகளை அறிந்து, தனக்கான ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து, சமூகத்தின் அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு, தனக்கும் இந்த அரசாங்கத்தின் நடைமுறைகளில் பங்கேற்கும் அனுபவம் உண்டு என நிமிர்ந்து வரும்போதுதான் விடுதலை என்பது நிறைவாகும்.

உலகத்தில் பெண்கள் முன்னே வரவில்லையா? அதுவும் இலங்கையே முதற் பெண் பிரதமரைக் கொண்டதாக இருக்கும்போது இது நியாயமான பேச்சா என்று கேட்பவர்களுக்காக நாம் பலமுறை சொன்னாலும், மீண்டும் நினைவூட்டுகிறேன். இத்தாலியும் இங்கிலாந்தும் தவிர வேறெந்த நாட்டிலும் பெண்கள் நேராக அரசியலுக்குள் வரவில்லை. ஆயிரத்துதொளாயிரத்து முப்பதுகளிலேயே முதல் பெண்மணி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றால், அவரும் வாரிசுரிமையாகவே அந்தப்பதவிக்கு வந்தார் என வரலாறு சொல்கிறது. அப்படியே தொடர்ந்து அரசியலில் பதவிக்கு வந்தவர்கள் பெரும்பாலும் வாரிசுகளாகவே வந்துள்ளனர். தமிழ்ப்பெண்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வந்தாலும் அவர்களும் வாரிசுரிமையில் அனுதாப வாக்குகளுக்காக அரவணைத்துக் கொள்ளப்பட்டவர்களே, அப்படி இல்லாமல் வந்தவர்கள், நீர்க்குமிழிகள் போல உடைந்து போனார்கள்.

அதெப்படி ஒரு பதவியின் காலம் ஐந்து வருடங்களாக இருக்கும்போது அவர்களால் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாமற் போனது. எப்படி மக்கள் இவர்களை மறந்து போனார்கள் என்றால் நினைத்திருந்தால்தானே மறப்பதற்கு.

இவர்கள் வேட்பாளர்களாக நிற்கும்போதும் சரி அதன் பின்னரும் சரி, மக்களிடம் செல்லும்போது இவர்களது முதன்மையை அவர்கள் சார்ந்த கட்சிகள் அனுமதிப்பதில்லை. நான் ஒருபோதும் இந்தப்பெண்களை தனியாக கண்டதுமில்லை யாராவது சில அல்லக்கைகள் இவர்களுடன் திரிவதே வழக்கம். அங்கேயும் இந்தப் பெண்ணுடன் துணையாக ஒருபெண்ணைக் காண்பது அபூர்வம்.

எனக்கு இதன் தாற்பரியம் விளங்கவில்லை. ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினருக்கு பெண் செயலர் இருப்பது அபூர்வம். ஆனால் ஒரு ஆண் அதிகாரிக்கு பெண் செயலர்கள் அமைந்திருப்பது மிக அதிகம். இந்த முரண்பாடு எதனால். பெண்ணால் நிர்வாகத்தை நடத்த முடியாது என்ப தெல்லாம் பழைய மூடக்கொள்கை என்பதை எல்லாத் துறைகளிலும் பெண்கள் நிரூபித்து வந்தாலும், பெண்ணை பின்னின்று நடாத்த எப்பொழுதும் ஆண்களே முயல்கின்றனர். இந்த நிலைக்கு இடம் கொடாத பெரிய அதிகார பதவிகளிலிருப்போராயினும், விரைவிலேயே விவாக ரத்தாகிவிடுகிறது. அது பெரும் மறைக்கமுடியாத உண்மையாக உள்ளது. இதன் பின்னணியிலே ராஜீவ்காந்தி இருந்த காலத்தில் சிரிக்கவே தெரியாத சோனியாவையும் விஜயகுமாரணதுங்க இருந்த காலத்தில் அருகே பவ்வியமாக நின்ற சந்திரிகா அம்மையாரையும் பண்டாரநாயக்க இருந்தகாலத்தில் பதவிசாக வந்துபோன சிறிமாவோ அம்மையாரும், அவர்கள் மறைந்தபின் நேரெதிர் மாற்றமடைந்தமையை நினைவுபடுத்துவோம்.

Comments