புதியன கழிதலும் பழையன புகுதலும்! | தினகரன் வாரமஞ்சரி

புதியன கழிதலும் பழையன புகுதலும்!

என்னடா தலைப்பை மாற்றிப்போட்டிட்டான் என்று நினைப்பீங்கள். அப்பிடி இல்லை. தெரிஞ்சு போட்டதுதான்.

ஒவ்வொரு மனிசனும் தன்னை அஞ்சு வருஷத்திற்கு ஒரு தடவை புதுப்பிச்சுக்ெகாள்ள வேணுமாம். நம்மில் பல பேர் அப்பிடிச் செய்யிறதே இல்லை. எந்தத் தேடலும் செய்யமாட்டாங்க. எப்போதோ படிச்சத, அப்பிடியே கட்டிப்பிடிச்சுக் ெகாண்டு இருப்பாங்க, பழைமை மாறாமல்.

ஆனால், நாங்கள் படிச்ச படிப்பு, தொழிற்கல்வி எல்லாம் அடுத்த 2020இல அவுட் டேட்டாகப்போகுதாம். அதாவது காலாவதியாகப்போகுதாம். அதுக்கு முகங்கொடுக்கிறமாதிரி ஆசிய நாடுகள்ல கல்வித்துறையிலை மாற்றங்கள் வந்துகொண்டிருக்காம். எண்டாலும் அது மந்தகதியிலை நடக்கிறதாச் சொல்றாங்க. இலங்கையிலை சொல்லவும் வேண்டாம். அதுக்கு எந்தவிதமான தயார்படுத்தலும் இல்லை என்று சொல்றாங்க. தொழில்வாண்மை ரீதியிலை நாங்க எங்கடை கல்வி முறையை மாற்ற வேண்டும் என்பது பொதுப்படையான அபிப்பிராயம்.

நாங்க கற்று வைச்சிருக்கிற தொழிற்துறை அறிவு, செய்துகொண்டிருக்கிற தொழில் முறைமை எல்லாத்திலும் 2020 இலை சடுதியான மாற்றம் வருமென்று சொல்றாங்க. ஆனால், பாருங்க... எல்லாத்திலையும் பழைய வடிவங்களும் முறைமைகளும் தான் புதிசு புதிசா வந்துகொண்டிருக்கிறது என்கிறார் நண்பர்.

அதுவும் உண்மைதான். ஒரு காலத்திலை வந்த பெல்பொட்டம் திரும்பவும் புது வடிவத்திலை வரலயா? பிறகு அது மறைந்து, போட்டால் கழற்றிக்ெகாள்ள முடியாதபடி கலிசான்கள் வரலயா? இப்ப பொம்பிளைப் பிள்ளைகளும் அப்பிடித்தான் போடுதுகள், பொடியன்களும் அப்பிடித்தான் போடுறாங்கள். வேலைக்கு வரும்போதும், வீட்டுக்குப் போகும்போதும் எப்பிடி கஷ்டப்படுவாங்கள் என்பதை அவங்கதான் அறிவாங்க!

ஆனால், தகவல் தொழில் நுட்பம் என்பது பொருள்மாதிரியோ உடை மாதிரியோ அல்ல. என்றாலும், அந்தத் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஒரு பொருள், ஒரு சாதனம் புதுமையிலிருந்து பழைமைக்குச் சென்றுகொண்டிருப்பதைப் பற்றி நண்பர் ஒருவர் முகநூலில் எழுதியிருக்கிறார். இதுதான் அது!

"கைடயக்கத் தொலைபேசியில் உள்ள life Saving facility பற்றி உங்களுக்கு தெரியுமா?

இது தற்போது நான் பயன்படுத்தும் 2000 ரூபாவிற்கு புறக்கோட்டையில் வாங்கிய கைப்பேசி (உங்கள் பார்வையில் மொக்க போன்) இது.

கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நான் பயன்படுத்திய android கைப்பேசி உடைந்து விட்டது, தற்காலிகமாக புகைப்படத்தில் உள்ள கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின் றேன், இந்தத் தொலைபேசியை இது போன்ற அவசர தேவைகளின் போது மட்டுமே நான் பயன்படுத்தி வந்தேன்.

ஆனால், இம்முறை 3 வாரங்களுக்கும் அதிகமாக தொடர்ச்சியாக பயன்படுத்திக்கொண்டிருக் கின்றேன், தொடர்ச்சியாக பயன்படுத்தும் போதுதான் இந்த கைப்பேசியில் life Saving என்ற வசதி இருப்பது தெரிய வந்தது.

Life Saving என்றால் என்ன தெரியுமா?

இந்தத் தொலைபேசியை நான் காரணம் இல்லாமல் கையில் எடுப்பது இல்லை, அழைப்பு அத்தியாவசியம் என்றால் மாத்திரமே அதை எடுக்கின்றேன், அப்புறம் அந்தத் தொலைபேசி அழைத்தால் மாத்திரமே கையில் எடுக்கின்றேன், Notification தொல்லைகள் எதுவும் இல்லை, எவன் என்ன செய்தான் என்று பராக்கு பார்க்கும் வேலைகள் எதுவும் இல்லை, அதைப்பார்க்க வேண்டும், இதைப்பார்க்க வேண்டும் என மனம் பரபரப்பது இல்லை.

வீட்டை விட்டு வெளியில் வந்ததும் உலகின் அழகியல் அத்தனையும் என் கண்ணில் தெளிவாக தெரிகின்றது, பத்திரிகைகள் புத்தகங்களின் மீதான ஈர்ப்பு மீண்டும் என்னை ஆட்கொண்டுள்ளது, மனத்தில் இருந்த பெரிய அழுத்தம் நீங்கியிருக்கின்றது.

சொல்லுங்கள் இந்தக் கைப்பேசியில் life Saving facility இருக்கின்றதா? இல்லையா?

இதையே நிரந்தரம் ஆக்குவது எனவும் முடிவு செய்துள்ளேன்.

இந்த android கைப்பேசிகளால் நிம்மதியிழந்து, உலகம் மீண்டும் என் மொக்கை பேசியை தேடும் நாள் தூரத்தில் இல்லை.

இப்பிடி அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கின்றார். கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு செங்கல்லைப்போன்று அதனை அங்குமிங்கும் தூக்கிச் செல்ல வேண்டும். இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. கலிசானில் போட்டுக்ெகாண்டு காதில் வயரை மாட்டிக்ெகாண்டு விசர் பிடித்தமாதிரி எங்கும் செல்லலாம். யாரோடயும் கதைக்கலாம், கதைக்காமலும் விடலாம். பாட்டு கேட்கலாம். கேட்காமல் காதில் மட்டும் கொழுவிக்ெகாள்ளலாம். இந்தத் தொலைபேசியைப் பலர் பயன்படுத்தும் விதம் இருக்ேக! அப்பப்பா.

காலையில் வணக்கம் சொல்வதும் அதிலைதான். இரவில் உறங்கப்போவதும் அதிலைதான். ஏதாவது ஒலிச்சமிக்ைஞ வந்தால், தூக்கிப் பார்க்கிறது. கனபேருக்கு ஸ்மார்ட் தொலைபேசி இருக்கும். அதனை இயக்கவும் தெரியாது! பிறகெதற்கு உது என்றால், எல்லோரும் நல்ல 'றிச்' போன் வைச்சிருக்காங்க. என்னிட்டையும் இருக்கு என்று காட்டுறத்துக்காகத்தான் என்பார்கள்.

அதனாலை, இங்கே நண்பர் சொல்லியிருக்கும் ஆலோசனை பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது என நினைக்கின்றேன். தொலைபேசி என்பது தொடர்பாடல் வசதிக்காகத்தானே! பாட்டு கேட்குறத்துக்கு அல்லவே! நீங்களும் சற்று யோசித்துப் பாருங்களனன்! 

Comments