சொர்க்கத்தின் வாசற்படி | தினகரன் வாரமஞ்சரி

சொர்க்கத்தின் வாசற்படி

மாலை மதி முகத்தில்

வேர்வை படர அவள்

நூலாம் இடைமுறிய அசைந்தாள்- − கெண்டைக்

கால்கள் துடிக்க,... விழி

வேல்கள் கணை தொடுக்க...

கன்னி சுவைநடனம் பயின்றாள் – இளங்

காளை மனங்கள்கவ்வி நடந்தாள்!

பட்டு உடல் அசைய

மெட்டி இசை பயிலே

தொட்டு(எம்) உணர்வுகளைத் தட்டி – முக

மொட்டில் நகை அவிழ....

எட்டி நடை பழகி...

மோக மலர்கள்கொட்டி நெளிந்தாள் – என்னில்

முற்றும் அவள்நிறைந்து வழிந்தாள்!

மானைப் பழிக்கும் இரு

தோளை அசைக்கையில் அவ்

வானக் கருங்குழலும் நீளும் – இதழ்த்

தேனில் நனைந்து அவள்

தேகம் படர்ந்து விளை

யாடல் பயிலமனம் துடிக்கும் – அவள்

அற்புதங்கள் என்னுணர்வைச் சரிக்கும்

கொங்கை என வெதிரில்

தொங்கும் குரும்பைகளில்

என்றன் முகம்பதிய விரும்பும் –அந்தத்

தங்கக் கதுப்புகளில்

பொங்கும் வியர்வை யெனத்

தொங்க எனக்குள் ஆசை அரும்பும் – சுவைச்

சொர்க்கம் நினைந்துமனம் நொறுங்கும்!

வெண்டி விரலசைத்துச்

செண்டாய் அதைவிரித்து

துண்டாய் முறிந்து இசைக்(கு) ஆடி – எனைக்

கொண்டாள்,... என(து) இயக்கம்

கொன்றாள்,... எழில் அரசி

வந்தால்.... கிடைத்துவிடும் சொர்க்கம் – பெண்ணால்

வாழும் மனிதர்க்கில்லை துக்கம்! 

Comments