முனைப்பு பெறும் தேர்தல் அலசல்கள் | தினகரன் வாரமஞ்சரி

முனைப்பு பெறும் தேர்தல் அலசல்கள்

எந்தக் கட்சியையும் யாரும் ஆதரிக்கலாம். அவ்வாறு யாரையும் ஆதரிக்கலாம். விடலாம். அது அவரவர் விருப்பம். அது அவரவர் உரிமை. ஆனால், எந்த அடிப்படையில் ஆதரிப்பது, விடுவது என்ற அறிவு தேவை. கொள்கை சார்ந்தே நாம் ஆதரிக்கிறோம் என்று எளிதாக இதற்கான பதிலைச் சொல்லிக் கடந்து போய்விட முடியாது. 

“உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் (வெற்றி – தோல்வி) எப்படி அமையும்?” என்ற எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல வலுக்கத் தொடங்கியுள்ளது. தென்னிலங்கை முடிவுகள் எப்படி அமையும்? மைத்திரியின் கை வலுக்குமா? மகிந்தவின் தரப்பு வெல்லுமா? ஜே.வி.பிக்கு எத்தகைய வாய்ப்புகள் உள்ளன? ஐ.தே.க விற்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? முஸ்லிம் தரப்பில் எந்தக் கட்சி வெற்றி வாகை சூடும்? அல்லது எந்த அணி வெல்லும்? மலையகக் கட்சிகளில் யார் அதிக இடங்களைக் கைப்பற்றுவார்கள்? எந்தெந்த இடங்கள் யார், யாருக்குக் கிடைக்கும்? எவரெவருக்கு எத்தனை எத்தனை சீற் கிடைக்கும்?

வடக்குக் கிழக்கில் யாருக்கான அல்லது எந்தத் தரப்புகளுக்கான சாத்தியங்கள் உண்டு? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளன? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (தமிழ்த்தேசியப் பேரவை) வெற்றிபெறுமா? முருகேசு சந்திரகுமாரின் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு ஏற்றமாதிரி வெற்றிகளைப் பெறுமா? ஆனந்தசங்கரி – சுரேஸ் கூட்டுக்கு எத்தனை இடங்கள் கிட்டும்? இப்படியே தீவிர அலசல்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

எல்லோரும் கட்சிகளின் ​வெற்றியைப் பற்றிச் சிந்திக்கிறார்களே தவிர, யாருமே சனங்களின் வெற்றியைப் பற்றிச் சிந்திப்பதாக இல்லை. சனங்களின் வெற்றி என்பது, சனங்களை மனதில் கொண்டிருக்கும் சக்திகள் வெற்றியடைவதிலேயே உள்ளது. அந்தச் சக்திகளை உரிய முறையில் அடையாளம் காண்பதில் தங்கியுள்ளது. அவ்வாறான அடையாளம் காணுதல் – அடையாளம் காட்டுதல் - என்பது மிகப் பெரியதொரு விசயம். அது சமூக, பொருளாதார, ஜனநாயக, அரசியற் பண்பாட்டின் விளைவாகும். இதற்குச் சரியான செயற்பாடுகள் தேவை. இதைச் செய்ய வேண்டியது சமூகப்பொறுப்புணர்வுள்ள தரப்பினரின் கடமை. ஊடகங்களின் பொறுப்பு. ஒவ்வொரு தரப்பைப் பற்றிய கேள்விகளையும் எழுப்பி, பொது மக்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தீர அறிவதற்கான களவெளியைத் திறக்க வேண்டும். அறிவூட்டல் மூலமாகவே மக்கள் சரியான தெரிவுகளைச் செய்ய முடியும்.

ஆனால், இதை யாரும் செய்வதாகக் காணவில்லை. பதிலாக ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு தரப்பினரும் தமது குறுகிய பரப்பில் நின்றே எதையும் நோக்குகின்றனர். எதையும் செய்ய முற்படுகின்றனர்.

இது பெருந்தவறு. எந்தக் கட்சியையும் யாரும் ஆதரிக்கலாம். அவ்வாறு யாரையும் ஆதரிக்கலாம். விடலாம். அது அவரவர் விருப்பம். அது அவரவர் உரிமை. ஆனால், எந்த அடிப்படையில் ஆதரிப்பது, விடுவது என்ற அறிவு தேவை. கொள்கை சார்ந்தே நாம் ஆதரிக்கிறோம் என்று எளிதாக இதற்கான பதிலைச் சொல்லிக் கடந்து போய்விட முடியாது. அந்தக் கொள்கையைக் குறிப்பிட்ட கட்சியோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ நிறைவேற்றக் கூடிய சாத்தியமென்ன? கடந்த காலத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் எத்தகையன? அவற்றின் பெறுபேறுகள் என்ன? எதிர்காலத்தில் அவர்கள் சரியாகச் செயற்படுவதற்கான உத்தரவாதம் எவ்வாறுள்ளது? அதற்கான பொறுப்பு என்ன? இந்த மாதிரி யாருமே கேட்பதில்லை.

இந்த ஆதரவு மனோ நிலை என்பது பெரும்பாலும் “ரசிகர் மன்ற” மனநிலைக்கு ஒப்பானதே. தாங்கள் அபிமானம் வைத்திருக்கும் தரப்பின் மீது எத்தகைய கேள்விகளையும் எழுப்பக் கூடாது என்று ஒவ்வொருவரும் கருதுகின்றனர். இதிலிருந்தே பலரும் தமது தேர்தல் மதிப்பீடுகளை – அரசியல் மதிப்பீடுகளை மேற்கொள்கின்றனர். ஆனால், அரசியல் என்பது நம்பிக்கையின் மீது கட்டியெழுப்பப்படும் பயணம் என்பதை விட கேள்விகளின் மீது நிகழ்த்தப்படும் பயணம் என்பதே சரியானது.

இதேவேளை தேர்தல் வெற்றி – தோல்விகளைப் பற்றி மதிப்பிடுவோரில் தேசிய அளவில் சிந்திப்போரும் உண்டு. பிராந்திய எல்லையில் சிந்திப்போரும் உள்ளனர். கட்சி மட்டத்தில் சிந்திப்போரும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் அப்பால், தனிப்பட்ட ரீதியில் தமக்கு இணக்கமான வேட்பாளர்களின் வெற்றி - தோல்வி என்ற அளவில் சிந்திக்கின்றவர்களும் உள்ளனர். இவர்கள் எல்லாம் தமக்கு ஏற்றவாறு அளவுகோல்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த அளவு கோல்களின் மூலம் தமது நோக்கை வெளிப்படுத்துகின்றனர்.

ஆகவே, இனி வரும் நாட்களில் “கருத்துக் கணிப்புகள்” என்ற பேரில் அவரவர் தங்கள் தங்கள் விருப்பங்களைப் பொது அபிப்பிராயமாக்குவதற்கு முனைவர். இதுதான் வழமையாக நடப்பதும். ஏற்கனவே முகநூல் உள்பட சமூக வலைத்தளங்களிலும் சாத்தியப்படும் பொதுப் பரப்பிலும் தமக்குச் சார்பான தரப்புக்கு ஆதரவாகப் பரப்புரைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கங்கள், மதகுருமார், ஆயர் இல்லம், சிவில் சமூகம் போன்ற தரப்புகளின் அறிக்கைகளும் வரக்கூடும். இவையும் தங்களின் விருப்பங்களையும் நலன்களையும் பொது விருப்பமாக்குவதற்கே முயற்சிக்கும். இப்படி மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சிகள் பலமாக நடப்பதற்கான சாத்தியங்களே தெரிகின்றன.

ஏற்கனவே கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களும் சனங்களின் தலைகளைக் கழுவி, அதற்குள் தம்மைத் திணித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். கட்சிகளைப் பொறுத்தவரை அவற்றின் அரசியல் எதிர்காலம் தேர்தல்களின் வெற்றியில் தங்கியிருப்பதால், அவை அதற்காக என்னவும் செய்ய முற்படும். சனங்களின் நலனை விடக் கட்சிகளின் நலனே முக்கியம் என்றாகி விட்ட சூழலில் இதைத் தவிர வேறு என்னதான் நடக்கும்? வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

சரியாகக் கவனித்தீர்கள் என்றால், இந்தக் கட்சிகள் எல்லாம் அசல் வியாபார நிறுவனங்களாகவே செயற்படுகின்றன என்பது புரியும். ஒரு கட்சிக்கு அதனுடைய வளர்ச்சியில், நலனில் அக்கறையிருக்கலாம். ஆனால், அது நியாயமானதாக – ஒரு எல்லைக்குட்பட்டதாக – வரையறுக்கப்பட்டதாக - இருக்க வேண்டும். கட்சி நலன் என்பது கொள்கையாகவோ பெருங் கொள்கையாகவோ இருக்கக் கூடாது. அது சனங்களுக்குச் சேவை செய்கின்ற ஒரு அமைப்பு. ஒரு நிறுவனம், ஒரு மையம் என்ற புரிதலோடும் நிலைப்பாட்டோடும் செயற்பட வேண்டும்.

எளிய உதாரணம், விவசாயம் செய்கின்றவர்கள் தமக்கான லாபம், தமக்கான தொழில் என்ற அடிப்படையிலேயே அதைச் செய்கின்றனர். ஆனால், அந்த விவசாயச் செய்கையின் மூலமாக மக்களுக்கு உணவு கிடைக்கிறது. விவசாயத்தின் மூலமாக அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் இரசாயனக் கலவைகளை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. கடை வைத்திருப்பவர் லாபத்திற்காகக் கலப்படங்களைச் செய்வது முறையல்ல. கடலில் மீன் பிடிப்பவர் தொழில், வருவாய், லாபம் என்ற அடிப்படையில் செயற்படலாம். அதற்காக டைனமற்றை வெடிக்கவைத்து மீன்களைப் பிடிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இப்படித்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்வோரும் அந்தத் தொழிலின் மூலமாகத் தமக்கான வருவாயை, வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர். அதற்காக அவர்கள் முறைகேடாக, அதிக லாபத்தைக் குறிவைத்துக் குறுக்கு வழியில் அந்தத் தொழிலைச் செய்யக் கூடாது. இந்த வகையில்தான் அரசியற் கட்சிகளும் நியாயத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும். ஆனால், அப்படி இன்றைய சக்திகளிற் பெரும்பாலானவையும் இல்லை என்பதே உண்மை. இது கவலைக்குரியதாகும்.

அரசியலில் மகத்தான பணிகளைச் செய்த முன்னுதாரணர்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். இந்தக் கட்சிகள் கூட அத்தகையவர்களின் அடையாளத்தைக் காண்பித்தே தமது அரசியல் நன்மைகளை அடைவதற்கு முயற்சிக்கின்றன. தம்மையும் தமது கட்சியினதும் சமகால, கடந்த காலச் செயற்பாடுகளைச் சொல்லி தேர்தலில் வாக்குக் கேட்பதைக் காண முடியவில்லை. இது பெரும் பலவீனமான நிலையல்லவா? இப்படிப் பலவீனமான நிலையைக் கொண்டுள்ள கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் எப்படி ஆதரிப்பது?

இதில் சில வேடிக்கைகளும் உண்டு. தமிழரசுக் கட்சியின் தலைவராக ஒரு காலத்திலிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் படத்தைத் தமது விளம்பரச் சுரொட்டிகளில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றன தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் (தமிழர் விடுதலைக் கூட்டணி). இதில் ஒரு கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் கேட்டார், “ரண்டு கட்சியும் ஒண்டுதானே! ரண்டிலும் ஒரே ஆளின்ரை படந்தானே போட்டிருக்கு?” என. இந்த வேட்பாளருக்கு தான் எந்தக் கட்சியில் போட்டியிடுகிறேன்? எந்த அடிப்படையில் போட்டியிடுகிறேன்? தன்னுடைய விளம்பரச் சுவரொட்டியில் போடப்பட்டிருக்கும் தலைவரின் படம் யார் என்று எதைப்பற்றியுமே தெளிவில்லை. இது தனியொரு வேட்பாளரின் நிலை அல்ல. பெரும்பாலான வேட்பாளர்களின் நிலையும் தகுதியும் இப்படித்தான் உள்ளது.

இன்னொரு வேட்பாளர் வன்னியில் ஜே.வி.பியின் சார்பாகப் போட்டி யிடுகிறார். அவருக்கு ஜே.வி.பியைப் பற்றியே தெரியாது. அதனுடைய முன்னாள் தலைவர், இப்போதைய தலைவர், அதனுடைய செயற்பாடுகள் எதைப்பற்றியும் தெரியாது. ஆனால், போட்டியிடுகிறார். இவருக்கு எப்படி மக்கள் ஆதரவளிக்க முடியும்?

அடுத்தவர் முதல்வாரம் வரையில் த.தே. கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவர். கூட்டமைப்பினர் தனக்கான இடத்தைக் கொடுக்கவில்லை என்றவுடன் இன்னொரு அணிக்குத் தாவி தேர்தலில் போட்டியிடுகிறார். இங்கே கொள்கை என்பது என்ன அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் தடாலடியாகக் கொள்கை மாற்றம் எப்படி நிகழ்ந்தது? கொள்கை ரீதியான மாற்றம் நிகழாமல், தனக்கான இடத்தைத் தேடும் நிலையே இங்கே காணப்படுகிறது.

இப்படியான நிலையில்தான் நாம் தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அல்லது அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நடைமுறையில் இந்தத் தேர்தலில் வெற்றியடையும் தரப்புகள் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றிலும் வெற்றிபெறுவதற்கான – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான – வாய்ப்பைக் கொள்கின்றன. அதனால்தான் ஏகப்பட்ட போட்டியும் பெரும் பிரயத்தனங்களும்.

இவ்வளவுக்கும் தேர்தல் களம் சேறாகியுள்ளது. அரைவாசிக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் எந்தத் தகுதியும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் சிலவேளை வெற்றியடைந்தால், நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

இது தொடர்பாக ஊடகங்களும் மெய்யான சமூக அக்கறையுள்ள தரப்பினரும் ஜனநாயக விரும்பிகளும் விழிப்புடன் செயற்பட வேண்டும். சனங்களை விழிப்படைய வைப்பதில் இந்தச் சக்திகளுக்குப் பெரும் பொறுப்புண்டு. குறிப்பாக ஊடகங்கள் இந்த விடயத்தில் கவனமாகவும் பொறுப்போடும் செயற்படுவது அவசியம்.

வரலாற்றை முன்னகர்த்த வேண்டுமாக இருந்தால் சமூகம் முன்னகர வேணும். அதற்குரிய அடிப்படைகளை உருவாக்குவதே சமூகச் சிந்தனையாளர்களின் கடமை. அதன் வழி நடப்பது மக்களுடைய இயல்பு. இதுவே மாற்றங்களை எப்போதும் உருவாக்கும் விதியாகும்.

கருணாகரன்

Comments