பத்திரிகை வாசிக்கும் பெண்கள் எத்தனை பேர்? | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பத்திரிகை வாசிக்கும் பெண்கள் எத்தனை பேர்?

வாழ்வாதாரமா  சேதாரமா 10

ஒருகாலமும் இல்லாத பெரு விழாவாக இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராக பெண்களை நிறுத்த கட்சிகள் முயன்று வருகின்றன. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போதுதான் பெண்கள் அரசியல் அனுபவம் என்பதையும் அரசியல் அறிவு என்பதையும், எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தேடவேண்டியிருந்தது.

எங்களுடைய பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை படித்த பெண்கள் சிலர்ஆள்பதி டொனமூரிடம் வைத்தபோது, அரசாங்கத்தின் பலமான தூண்போன்று நின்ற சேர். பொன். இராமநாதன் ஆள்பதியிடம், எங்கள் பெண்களுக்கு வாக்குரிமையை கொடுத்து அவர்களை வீதிக்கு இறக்கிவிடாதீர்கள். ஒழுங்கான வீட்டு நிர்வாகத்தையே அவர்களால் செய்ய முடியாது இந்நிலையில் வாக்குரிமை அவர்களுக்கெதற்கு என்று வாதிட்டதை அன்றைய உதயதாரகை பத்திரிகை பிரசுரித்திருந்தது.

ஆனாலும் பெண்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் என்ன இந்த வாக்குப்போடும்போது மட்டும், என் பாட்டியிடம் நீ யாருக்கு வோட்டுப் போட்டாய் என்று கேட்டால்,

இவர் பச்சைப்பெட்டிக்குத்தான் போடச் சொன்னவர். அதுக்கதான் போட்டன் என்றாளாம் என் பாட்டி. அவளுக்கு தெரிந்த அரசியல் அதுதான் கணவனே கண்கண்ட தெய்வம். காலம் மாறிக்கொண்டு போனது என்தாய் வாக்குச்சாவடிக்கு சிறுமியாக இருந்த என்னைக் கையில் பிடித்து கூட்டிச் சென்றாள் ஏனெனில் வேட்பாளர் வாக்குச் சாவடிக்கு மிக அண்மையில் பந்தல் போட்டிருந்தார். அங்கே வாக்கு அளிக்க வரும் தன் ஆதரவாளர்களை மறித்து குளிர்பானம் சிற்றுண்டி கொடுத்தபின்தான் வாக்களிக்க போக விடுவார். எதிர் வேட்பாளரும் அவ்வண்ணமே ஒருபந்தலை அமைத்திருந்தார். அது ஓரு நகர சபைத் தேர்தல். மாலையில் பட்டாசுகள் முழுங்க வென்றவரின் பெயரைக்கூவியவாறு ஆதரவாளர்கள் வீதியில் ஊர்வலமும் போனார்கள். அவர்களுடைய கூச்சல் இவ்வாறு அமைந்தது.

ஆறுமுகம் ஐயாவுக்கு ஜே

அஞ்சுமுகமும் ஒருமுகமும்

ஆறுமுகம்

ஆறுமுகம் ஐயாவுக்கு ஜே, எதிர் வேலுப்பிள்ளையருக்கு எதுவுமில்லை போ.சில காலத்தின்பின் சின்னங்களை வைத்து வைக்களிக்கும் முறை வந்தது

போடு புள்ளடி ரோதைக்கு நேரே

போடு புள்ளடி மரத்துக்கு நேரே என்ற வகையில் கோசங்கள் எழுப்பப் பட்டன. எனக்குத் தெரிந்து 1955ம் ஆண்டுதான் வேட்பாளர்கள் பந்தல் போடுவதும் வாகனங்களில் வாக்காளர்களை ஏற்றுவதும் கோசம் போடுவதும் தடை செய்யப்பட்டன. என்றாலும் இவை இன்னும் தொடர்ந்து கொண்டுதான்: தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முதல்முதலாக பண்டார நாயகாவின் கட்சியில் வேட்பாளராக நின்ற வவுனியா சீ. சுந்தரலிங்கத்துக்கு வாக்களித்த போது. அவரைப்பற்றி எதுவும் தெரியாமலே இருந்த எம் அயலவர்கள், தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கொள்கையிலேயே வாக்களித்தனர்.என்பது எனக்கு நன்கு புரிந்தது.

அடுத்து இடம் பெற்ற இனக்கலவரம் தப்பு, இனப்படுகொலை. தமிழரசுக் கட்சியை பலப்படுத்தியது. நல்லதோ கெட்டதோ தமிழன் என்பதே முதன்மை பெற்றாலும் எமது பெண்களிடம் அப்போதும் அரசியல் தெளிவு இருக்கவில்லை. வீட்டில் குடும்பத் தலைவர் யாருக்கு போடச் சொல்கிறாரோ அவருக்கே வாக்களித்தனர். இனமோதல்களையும் அதன் தாக்கத்தையும் தமிழரசுக்கட்சி மாநாட்டில் பெருமளவிலான பிரசாரமாக மேற்கொண்டாலும்,பெண்களின் வரவு மந்தமாகவே இருந்தது பெண்களுக்காக தனியாக ஒருநாள் ஒதுக்கப்பட்டு ஆண்களால் தூண்டிவிடப்பட்டு பெண்கள் அதில் கலந்து கொண்டாலும் எனது வீட்டில் நடந்த கதையை எனக்கு மறக்க முடியாது.

அம்மா என் தந்தையின் நெருக்குவாரத்தில் மாநாட்டுக்கு புறப்பட்டாலும் புறப்படுமுன் காலையிலேயே மத்தியான உணவை தயார் செய்து முடித்து, பின்னர் அடுக்கடுக்காக நின்ற நாம் ஆறுபேரையும் வெளிக்கிடுத்தி, கைக்குழந்தைக்கான பால்புட்டி சாணைத்துணிகள் அவற்றை போடுவதற்கான உமல் பை அப்போது பம்பர் பொலித்தீன் கிடையாது. தண்ணீர் குவளை பால் கரைப்பதற்கு லக்டோசன். சுடுதண்ணி என எல்லாவற்றையும் கட்டி எடுத்துக் கொண்டு, வந்த லொறியில் எங்களையும் ஏற்றி தானும் ஏறி, மேலும் ஏறிய குடும்பப் பெண்கள் பிள்ளைகளுடன் நெருக்குப்பட்டு கூட்டம் நடக்கிற இடத்தை அடைந்தபோது. கைக்குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. பரவலாக மற்றப் பெண்களின் குழந்தைகளும் அழுதன. கூட்டம் குழம்பவதாகக் கூறி குழந்தைகளுடன் வளர்ந்த பிள்ளைகள் மண்டபத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். சின்னவன் தண்ணீர் கேட்டழுதான் மூத்தவன் பம்பாய் மிட்டாய் கேட்டான். அம்மாவிடம் பணமில்லை அவர்களை தாக்காட்டி கூட்டம் எப்படா முடியும் என்று காத்திருந்து வெளியே வந்தாள். மீண்டும் லொறியில் ஏறிய பெண்கள் பேசிக் கொண்டதாவது,

அந்த மனிசி கட்டியிருந்த சீலையப் பாத்தியே,

உந்தமாதிரி சிமிக்கியத்தான் நானும் பத்தரட்ட செய்யக்குடுத்திருக்கிறன.

கந்தசாமியின்ர மனிசி வந்திருந்தவள் பாத்தியே

ஒண்டுக்கும் வெளியில விடான் இண்டைக்கு என்னண்டு விட்டான்

வடிவான பெட்டைதான் என்னக்கா இப்படிப்பட்ட கதைகளே பெரும்பாலும் உலவின. ஆனால் என் தந்தை அம்மாவிடம், கூட்டத்தில என்னவாமப்பா பேசினவை என்று கேட்டார்.

என்னத்தையப்பா அவளுகள் படிச்ச பொண்டுகள். இனி ஊரடிபட்டதுகள் என்ன திறமா கதைக்குதுகள் என்றாரேயொழிய அங்கே பேசியவை பற்றி அவருடைய தலையில் எதுவும் ஏறவில்லை.

காலங்கள் மாறினாலும் பெண்கள் சம அளவில் பட்டப்படிப்பு படித்தாலும், பதவிகளில். அமர்ந்தாலும்.அவர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது மிகவும் குறைவே. அது அவர்களுக்கு தேவையில்லாத விடயம் அவர்களது வீட்டுவேலைகளும் வருமானத்துக்காக செய்யும் வேலைகளுமே அவர்களை அமுக்கி வைத்திருக்கிறது. எங்காவது பெண்களை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும்போது.

தமிழ்க் கவி
பேசுகின்றார்

அவர்கள் குதூகலமடையக்கூடும். ஆனால் கிராம மட்டங்களில் பெண்கள் அப்படி மகிழ்ச்சியடைந்தாலும் அது அவர்களுக்கு வெகு நேரம் நீடிப்பதில்லை.

மூன்று மணிக்கு கூட்டம் என்றால் மூன்றரைக்கே பெண்கள் வர ஆரம்பிப்பார்கள். மற்றவர்களுக்காக காத்திருந்து நான்குமணிக்கு மேல் கூட்டம் ஆரம்பிக்கும்போது முதலில் வந்த பெண்கள் பொறுமையிழந்து பரபரப்பாவார்கள். மாடு பட்டிக்கு வந்துவிடும், பிள்ளைகள் டியூசால வந்துவிடுவார்கள்,கணவன் ஏன் இவ்வளவுநேரம் என்று கேட்பான்.

காரணம் சொன்னாலும் நம்ப மாட்டான். என்பன போன்ற காரணங்கள் அவள் மனதைக் குடையும். கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க முயலும்போது பெண்கள் வெளியேறுவதுபற்றிய சிந்தனையிலிருப்பர். எனவே கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களே தீமானத்தை செய்ய வேண்டியதாயிருக்கும்.

இப்போது பல இடங்களில் இந்நிலை மாற்றமடைந்து வருவதாகத் தோன்றினாலும், நகர மட்டத்திலும் ஒரு கூட்ட ஒழுங்கமைப்பை செய்யும்போது. தொடர்ந்தும் குறிப்பிட்ட சில பெண்களே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை காணக்கூடியதாக உள்ளது பிரதேச சபைக் கூட்டத்திலிருப்போரே நகரசபை கூட்டத்திலும், மாதர் கூட்டங்களிலும் கிராம அபிவிருத்திசார் கூட்டங்களிலும், முதியோர் தினம் காலாச்சார அமைப்புகள்.தொல்லியல்சார் நிகழ்வுகள் கிராம அமைப்புகளின் சமாசம் என எல்லாவற்றிலும் கலந்து கொள்கிறார்கள். காரணம் பத்துப்பெண்களை கலந்து கொள்ள வைக்கும்படி ஒரு கிராம தலைவரையோ நகர தலைவரையோ கேட்கும் போது இந்த ஆள்திரட்டும்பணி அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை.

இலகுவாக கேட்ட இடத்துக்கெல்லாம் வரக்கூடியவர்களேயே அவர்கள் அனுப்ப முடிகிறது. ஆக, பெண்களைச் சென்று சேரவேண்டிய எந்த நலத்திட்டங்கள் பற்றிய கருத்துகளும் சேரவேண்டிய இடத்தை சென்றடைவதில்லை. இந்த நிலையில்தான் நாம் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் பற்றிய கருத்துக்களை கொண்டுவருகிறோம்.பெண்களின் குடும்பச்சுமையை யாரும் பங்குபோட இன்னும் முன்வரவில்லை. அவளை வீட்டு வேலைகள் என்னும் பொறிக்குள்ளிருந்து மீட்க இன்னும்ட உலகம் முன்வரவில்லை.

என்னதான் குடும்பத்திட்டம் உதவினாலும், மிக்சி கிரைண்டர் சலவைமெசின் உதவினாலும், காஸ் குக்கர், ரைஸ் குக்கர்கள் உதவினாலும்.

அவர்களின் அரசியல் தெளிவென்பதும் விடுதலைக் கோட்பாடென்பதும், தொலைக்காட்சி நாடகங்களிலும் சினிமாவிலும் புடம் போடப்படுகிறது. நாடகம் பார்ப்பவர்கள், பார்க்கும் பொழுதில் செய்தி இடைவரும்போதுதான் எழுந்து அடுக்களைக்குப் போவதை வழமையாகக் கொணடுள்ளமை கண்கூடு. செய்தித் தாள்களில் செய்தி படிக்கும் பெண்கள் எத்தனைபேர்.

தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பவர்கள் எத்தனை பேர். மாறவேண்டும் இவர்களை மாற்றவேண்டும்.

Comments