தேர்தல் வேளையில் மாத்திரம் ஒலிக்கும் சமஷ்டியும், இணைப்பும்! | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் வேளையில் மாத்திரம் ஒலிக்கும் சமஷ்டியும், இணைப்பும்!

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை மும்முரமாகத் தயார்படுத்தி வருகின்ற இவ்வேளையில், வடக்கு – கிழக்கு அரசியல் களத்தில் சமஷ்டி மற்றும் இணைப்பு என்ற வார்த்தைகள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற எண்ணங்களை தமிழ் மக்கள் மறந்து விடுவதற்குத் தலைப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் கட்சிகள் அவற்றை இலகுவில் விட்டுவிடுவதாக இல்லை. ‘தமிழர் அரசியலை’ முன்னெடுத்துச் செல்வதற்கு இணைப்பும், சமஷ்டியும் பேருதவியாக அமைந்து விடுவதாகவே இப்போது எண்ணத் தோன்றுகிறது.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும், அதனையடுத்து அவ்வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதும் வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆகிய இரு யோசனைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்கள் மத்தியில் அழுத்தமாகவே வலியுறுத்தியிருந்தமை இப்போதும் நினைவிருக்கின்றது.

ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைக்கின்ற பட்சத்தில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வென்றெடுக்க முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் நேரடியாக உறுதியளிக்காத போதிலும், அன்றைய தேர்தல் வாக்குறுதிகள் இதுபோன்ற நம்பிக்கையை மறைமுகமாக உணர்த்தியதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இருந்த போதிலும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வொன்றை நல்லாட்சி அரசாங்கத்தில் வென்றெடுக்க முடியுமென்ற நம்பிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்றைய வேளையில் மக்களுக்கு அளித்தது உண்மை!

அதாவது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வு அடங்கிய புதிய யாப்பு ஒன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவையும் அன்றைய வேளையில் அம்மக்களுக்கு வழங்கியிருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்களின் வாக்குகள் கணிசமான பங்களிப்பு வழங்கியிருந்ததையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறுதிகளே தமிழ் மக்களிடமிருந்து அவ்வாறான பேராதரவைத் தருவதற்கு உதவியிருந்ததையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லை. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழியமைத்துக் கொடுத்தது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மண்ணில் ஒலித்த ‘இணைப்பும் சமஷ்டியும்’ சில நாட்களில் மங்கிப் போய்விட்டன.

2015 ஓகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வேளையில் இணைப்பு, சமஷ்டி ஆகிய சொற்பதங்கள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கின. ‘வடக்கு – கிழக்கு இணைப்புடனான சமஷ்டியைப் பெற்றுத் தருவோம்’ என்று தமிழ்க் கூட்டமைப்பு நேரடியாக உறுதி எதனையும் மக்களிடம் அளிக்காத போதிலும், அவ்விரு பதங்களையும் தமிழ்க் கூட்டமைப்பினர் பலர் தாராளமாகப் பயன்படுத்தத் தவறியது கிடையாது. அவர்களது அவ்வாறான வார்த்தைகள் தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏகபிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்ததையும் மறந்துவிடுவதற்கில்லை.

2015 ஓகஸ்ட் தேர்தலுடன் சமஷ்டியும் இணைப்பும் தேய்ந்து போன நிலையில், இப்போது அவ்வார்த்தைகள் வடக்கு – கிழக்கில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலே இதற்கான காரணம்.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு அப்பாலும் சென்று தீர்வைப் பெற்றுத் தருவோமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதாகவும், அக்கூற்றானது யுத்தத்தில் வெற்றியீட்டிய இராணுவத்தினரின் தியாகங்களை அவமதிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் ஆட்சேபித்திருந்ததையும் இவ்விடயத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.

மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பாணியைப் பொறுத்தவரை வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்பதெல்லாம் உடன்பாடான விடயங்கள் அல்ல என்பது வேறு விடயம். அது ஒருபுறமிருக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற இருவிடயங்களும் எதிர்காலத்தில் சாத்தியப்பாடான யோசனைகள்தானா என்பதையும், அவ்விரு எண்ணக்கருக்களையும் தமிழ்க் கட்சிகள் மக்களிடம் முன்வைப்பது பொருத்தமாகுமா என்பதையும் இன்று தமிழ் அரசியல் கட்சிகள் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகின்றது.

அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்த வேளையில், தென்னிலங்கையின் பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் மத்தியில் உத்தேச யோசனைகளுக்கு எதிர்ப்புகளே அதிகம் தோன்றியிருந்தன.

இத்தனைக்கும் வடக்கு – கிழக்கு இணைப்பையோ அன்றி சமஷ்டியையோ உத்தேச யாப்பு கொண்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பையோ சமஷ்டியையோ உள்ளடக்காத தீர்வொன்றைக் கூட தமிழினத்துக்கு வழங்குவதற்கு உடன்பாடில்லாத உறுதியான மனோநிலையில் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான தென்னிலங்கை அரசியல் சக்திகள் இருக்கையில், வடக்கு கிழக்கின் இன்றைய உள்ளூராட்சி தேர்தல் களத்தில் இணைப்பு, சமஷ்டி ஆகிய வார்த்தைகள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருப்பது தேர்தலுக்கான ஒரு உத்தி என்பதைத் தவிர வேறொன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

வடக்கு – கிழக்கு இணைப்பையோ அல்லது சமஷ்டித் தீர்வையோ பெரும்பான்மை அரசியல் சக்திகளிடமிருந்து வென்றெடுப்பதற்கான களநிலைவரம் இன்று கிடையாது. அதற்கான நம்பிக்கை எதிர்காலத்திலும் தோன்றப் போவதில்லை. தமிழினத்துக்கு உச்சகட்ட தீர்வை வென்றெடுக்கக் கூடிய அரசியல் ஒற்றுமையும் ஆளுமையும் தமிழினத்திடம் கிடையாதென்பதும் இங்கு முக்கியமான விடயம்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து தமிழினத்தின் அரசியல் பலமும் குன்றிப் போய் விட்டதென்பதை ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது.

இவ்வாறிருக்கையில், இணைப்பு, சமஷ்டி போன்ற வார்த்தை ஜாலங்களெல்லாம் இனிமேலும் எதற்கு என்பதே தமிழ் மக்கள் முன்வைக்கின்ற வினா! 

Comments