கொத்மலை - திஸ்பனை தமிழ் குடும்பங்களுக்கு விடிவு எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

கொத்மலை - திஸ்பனை தமிழ் குடும்பங்களுக்கு விடிவு எப்போது?

ஹற்றன் க. கிருஷாந்தன்
 

கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா, திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

1984 முதல் 1993ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு செல்லும் பொருட்டு ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் சில குடும்பங்கள் அக்கரப்பத்தனை, டயகம, கந்தபளை போன்ற பகுதிகள் உட்பட இன்னும் சில இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். மேலும் பல குடும்பங்கள் திஸ்பனை, மொச்சகொட்டை, கட்டுகொல்ல பகுதிகளில் கடந்த 30 வருடங்களுக்கு வழங்கப்படாத நிலையில் தற்குறியாக வாழ்ந்து வருகின்றனர்.

மகாவலி அபிவிருத்தி திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாற்று இடங்களில் காணிகளும், வீடுகளும் வழங்கப்படுவதற்கு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரேயே அவ்விடத்திலிருந்து தொழிலாளர் குடும்பங்கள் அகற்றப்பட வேண்டும் என அன்றைய மலையக தலைவர்களான செளமியமூர்த்தி தொண்டமான், பெரியசாமி சந்திர சேகரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் ஏனைய தலைவர்கள் கையொப்பம் இட்டதன் பின்னரேயே அங்கிருந்து தொழிலாளர் குடும்பங்கள் அகற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.

ஆனால் அப்பகுதி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வேறு, செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் வேறு என்பது 30 வருடங்களின் பின் இப்பொழுது தெரியவந்துள்ளது. இப்பகுதியில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின் மீள் குடியமர்த்தும் திட்டங்களும் உருவாக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் வெளியிடங்களிலிருந்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இதில் அதிகமானோர் தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் பெருந்தொகையான ஏக்கர் காணிகளை தமதாக்கி கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அத்திட்டத்தின் பின் இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மகாவலி அபிவிருத்தி திட்ட அமைச்சு என உருவாக்கப்பட்டிருந்த அமைச்சு வழியாக அப்பகுதியில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு காணி உறுதி பத்திரங்களையும் வழங்கியுள்ளனர். அந்தவகையில் மறைந்த முன்னாள் தலைவர் காமினி திஸாநாயக்க, ரணசிங்க பி​ேரமதாஸ, டீ.பி. விஜயதுங்க ஆகியோருடன் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா அம்மையார், மஹிந்த ராஜபக்ஷ எனப் பல தலைவர்கள் ஊடாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய வெளிப்பிரதேசங்களிலிருந்து மக்களை கொண்டுவந்து மகாவலி காணிகளில் குடியமர்த்த முடியுமென்றால் காலங்காலமாக அந்த இடத்தில் வாழ்ந்த தமிழர்களை குடியமர்த்த முடியாமல் போனமைக்கு காரணம் தான் என்ன?

மறுபுறுத்தில் அங்கிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தமிழர்களில் எஞ்சிய குடும்பங்களுக்கு மலையக தமிழ் தலைவர்கள் செய்தது தான் என்ன ? அல்லது பெற்றுக்கொடுத்தது தான் என்ன? என்ற கேள்வி 30 வருடங்களாக இருந்து வருகின்றது.

இப்பகுதியில் மகாவலி திட்டத்தின் போது வசித்து வந்த தொழிலாளர் குடும்பங்களை வெளியேறுமாறு கோரிய தோட்ட நிர்வாகங்கள் 1993ம் ஆண்டு 11 மாதம் 10ஆம் திகதியே கடைசியாக சம்பளத்தை வழங்கியுள்ளது.

அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு மாற்று இடங்களுக்கு செல்லுமாறும் பணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாமலும், தமக்கென ஒரு இடம் கிடைக்காததாலும் தொடர்ந்தும் சொந்த இடத்தில் வாழ்ந்து வருகின்ற 35 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் இன்று கேட்பாரின்றி அநாதைகளாகப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இவர்கள் வசிக்கும் இடமும், வெளியாருக்கு பிரித்து கொடுக்கப்பட்ட இடமாகவே காணப்படுகின்றது. அந்த இடங்களில் வாழ்கின்ற இந்த தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும், குடியிருப்பு ரீதியாகவும், அடிப்படை வசதிகளிலும் பின் தள்ளப்பட்ட நிலையில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் கடந்த 6 மாத காலமாகவே மின்சார வசதியை பெற்று வாழ்ந்து வருகின்றனர்

இந்த மின்சாரத்தை கூட பெறுவதற்கு தமிழ்த்தலைவர்கள் உதவவில்லை எனவும், அப்பகுதியின் கிராம சேவகரின் உதவியைக் கொண்டு கொத்மலை பிரதேச உப செயலாளர் பிரிவினூடாக அனுமதி பெற்று மின்சாரம் பெற்றிருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

எமக்கென ஒரு இடம் கிடைத்தவுடன் உங்களுடைய இடங்களை கொடுத்து விட்டு நாம் செல்கின்றோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தற்பொழுது வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான குடியிருப்பு வசதியை மலையகத் தமிழ்த் தலைவர்கள்தான் பெற்றுத்தர வேண்டும்.

இங்கே சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள், பிணக்குகள் என ஏற்படுவது கடந்த 30 வருட காலமாக நிகழ்ந்து வருகின்றது. குடிநீர்ப்பிரச்சினை, வீதி பிரச்சினை, தொழில் பிரச்சினை ஆகியவற்றில் பிணக்குகள் ஏற்படுவதுடன், அவ்விடத்தில் வாழும் 35 குடும்பங்களில் பாடசாலை மாணவர்கள் முறையாக கல்வி கற்கும் வசதிகளற்று இருப்பதுடன், இன்னும் பல அடிப்படை பிரச்சினைகளில் பின் தள்ளப்பட்டும் உள்ளனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு மட்டுமன்றி சிங்கள அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்ட இம்மக்களின் நிலை தொடர்பில் 30 வருடங்களின் பின் 2017ம் 11ம் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக அமைச்சர் கபீர் ஹாசீமுக்கு இம்மக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தும்படி கடிதம் ஒன்று மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாழும் குடியிருப்புகள் வெள்ளையர் காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக பெய்த மழையில் குடியிருப்பு பகுதியின் ஓர் அறை இடிந்து விழுந்துள்ளது.

இவ்வாறான நிலையில் மலையக தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர்கள் எம்மீது முக்கிய கவனத்தை செலுத்தி கொலப்பத்தனை பகுதியில் வீடுகளை அமைத்து தொழில் நடவடிக்களை முன்னெடுக்க முன்வர வேண்டும். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.