புதிய ஊடக கலாசாரம் உருவாக இதுவே சரியான தருணம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய ஊடக கலாசாரம் உருவாக இதுவே சரியான தருணம்

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

 

புதிய ஊடக கலாசாரம் உருவாகுவதற்கு இதுவே சரியான தருணமென அநுர திசாநாயக்க எம்.பி நேற்று சபையில் கூறினார். ஊடக சுதந்திரம் பற்றி பேசும் இந்த அரசாங்கத்திலேயே பாரிய இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது என்றும் அவர் விசனம் தெரிவித்தார். "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிணை முறிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளித்திருந்தபோது ஜிந்தோட்டையில் பாரிய இனக்கலவரம் ஏற்படுத்தப்படுகிறது. இது பிரதமரின் செய்திக்கான முக்கியத்துவத்தை இழக்கச் செய்வதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சதியென பொது மக்கள் கதைத்துக் கொண்டார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் ஊடகங்கள் உண்மையை வெளிப்படுத்த தயங்கக்கூடாது" என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

தொலைக்காட்சியில் நடத்தப்படும் அரசியல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்ட நாடகம் என்றும் இதில் எவ்வித யதார்த்தமும் இல்லை என்றும் பார்வையாளர்களுக்கு புரிகிறது. மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் கலவரத்தை உருவாக்குவது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அநுர திசாநாயக்க எம்.பி மேலும் தெரிவித்ததாவது-

ஊடகங்கள் தமது அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவது முற்றிலும் தவறானது. அவ்வாறு செயற்படும் ஊடக நிலையங்கள் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

உள்ளதை உள்ளபடி சொல்வது தான் செய்தி. அதில் நிறுவன உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த முடியாது. செய்தி சரியா? அல்லது தவறா? என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் எமது மக்களும் அரசியல் கலவரத்தையே விரும்புகிறார்கள். சிங்கள மொழியில் சித்திக்கு ஏற்ற சித்தப்பா என்றொரு பழமொழி உண்டு. அதனைபோல் நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு ஏற்றவர்கள். இதனால் அரசியல்வாதிகளை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது தொலைக்காட்சிக்கு தற்போது சகஜமாகி விட்டது. இவ்வாறான நிகழ்சிகளை பார்வையிடுவதனை மக்கள் முதலில் கைவிட வேண்டும்.

தொலைக்காட்சிகளில் தற்போது அழகுசாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களுக்கு பதிலாக அப்பொருளைப் பற்றிய கால் மணி நேர நிகழ்சியே ஔிபரப்பு செய்யப்படுகிறது. இதனை அந்த தொலைக்காட்சியில் ஏனைய நிகழ்சிகளை செய்யும் பெண்ணே தொகுத்து வழங்குவதால் குறித்த தொலைக்காட்சி நிறுவனமே இதனை விளம்பரம் செய்வதாக மக்கள் நினைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தி கிராமங்களில் பல பெண்கள் தமது முகத்தை நாசம் செய்துள்ளார்கள். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்சியை தொகுத்து வழங்குவதற்கு அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமே தொகுப்பாளர் ஒருவரை வழங்க வேண்டும் என்ற உடன்படிக்கையை தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மூலம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வரி வருமானம் என்ன? எந்தவொரு வருமானம் கிடைக்குமாக இருந்தாலும் அது உடனடியாக திறைசேரிக்கு கிடைக்க மாட்டாது.

Comments