தலைமைகளின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் காலம் இது | தினகரன் வாரமஞ்சரி

தலைமைகளின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் காலம் இது

கருணாகரன்  
 

-தமிழ் அரசியற் களம் குழம்பிக் கிடக்கிறது. சரியாகச் சொன்னால் சிரிப்புக்கிடமாகியிருக்கிறது. தமிழ் மக்கள் கொண்டிருந்த பொற்கனவுகளும் கோபுர நம்பிக்கைகளும் உடைந்த கண்ணாடித் துண்டுகளாகச் சிதறுகின்றன. இதற்குக் காரணம், தனியே அரசியற் கட்சிகளின் தவறுகள் மட்டுமல்ல. மக்களுடைய தவறுகளும்தான். மக்களுக்கும் அரசியற் சக்திகளுக்கும் இடையில் ஊடாட்டமாக இருக்கும் புத்திஜீவிகள், பல்கலைக்கழகம் போன்ற சமூக நிறுவனங்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளுமைகள் என்ற அனைவருடையதும்தான்.

இந்த அனைத்துத் தரப்பின் தொடர் தவறுகளின் திரண்ட வடிவமே இன்றைய அவல நிலையாகும். ஆகவே இது ஏதோ தேர்தல்கால பிணக்குகள் என்று யாரும் தவறாகக் கணிப்பிட வேண்டாம். நீண்ட காலமாகத் திரண்டு வளர்ந்த தவறுகள், பிழைகளின் வளர்ச்சியடைந்த வடிவமே இதுவாகும். இதை இப்பொழுதாவது, திருத்திக் கொள்ளவில்லை என்றால், இன்னும் இன்னும் மோசமான – கீழ் நிலைக்கே தமிழ் மக்களுடைய அரசியல் செல்லும். தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால், நோய்க்குத் தகுந்த சிகிச்சை செய்யவில்லை என்றால் கன்றிப்போயிருக்கும் சீழை அப்புறப்படுத்தவில்லை என்றால், அது தீராத வியாதியாகி பெரும் எதிர்விளைவுகளையே உண்டாக்கும். ஆகவே, கட்சி அபிமானம், தலைமை விசுவாசம் என்பதற்கு அப்பால், மக்களின் எதிர்காலத்தைக் குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்.

தடுமாற்றங்கள் ஒரு போதும் நிதானமான தெரிவுகளுக்கு இடமளியாது. உறுதியும் நிதானமும் நிறைந்த புதிய தெரிவுகளை நோக்கிச் செய்யும் பயணமே இந்தத் தேக்கத்தை உடைக்கும். இந்தத் தவறுகளின் மயானக் கிடங்கிலிருந்து மக்களை மீட்கும்.

இதற்கு ஒரு புதிய சிந்தனைத் தொடக்கமும் செயற்பாட்டுறுதி மிக்க அணியும் தேவை. வரலாறு அதற்கான பங்களிப்பை இளைய தலைமுறையின் கைகளில் ஒப்படைத்திருக்கிறது. அதை இன்றைய இளைய தலைமுறையினர் தற்துணிவுடனும் சிந்தனைத் திறனோடும் முன்னெடுக்க முன்வர வேணும்.

இது புதியவர்களின் யுகமாகும். உலகம் இளைஞர்களின் ஆற்றலால்தான் இன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவர்களின் படைப்பாக்கத்திறனையே நாம் இன்று அனைத்துத் துறைகளிலும் அனுபவிக்கிறோம். ஆய்வு கூடங்கள் தொடக்கம், உற்பத்தி மையங்கள் வரையில் இளைய தலைமுறையின் ஆற்றலே நிரம்பிக் கிடக்கின்றன. ஆகவே இங்கும் ஒரு புதிய இளைய தலைமுறை வரலாற்றின் தொடர்ச்சியாக – வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு புதிதாக எழுச்சியடைய வேண்டும். அதுவே இன்றைய தேவை. இதையே இந்தப் பத்தியாளர் யதார்த்தத்தின் தேவைக்கான பதிலீடாக முன்னிறுத்துகிறார்.

அப்படிப் புதியன படைக்க வரும் புதியவர்கள் – இளைய தலைமுறையினர் கடந்த கால வரலாற்றுப் படிப்பினைகளையும் நிகழ்காலத் தலைமைகள், கட்சிகளின் தவறுகளையும் இனங்கண்டு, அவற்றிலிருந்து விலகிச் செயற்படுவது அவசியம். இதற்கு ஏற்கனவே இருக்கும் கட்சி அபிமானங்களும் தலைமைகளின் மீதான அரைகுறை விசுவாசமும் நிச்சயமாகத் தடையாக இருக்கும். எனவேதான் சொல்கிறேன், அந்தத் தீய சக்திகளின் நிழலை விட்டு முதலில் நீங்க வேணும் என.

இவ்வாறு சொல்லும்போது, நீங்கள் குறிப்பிடும் முன்னனுபவங்கள் இல்லாத இளைய தலைமுறை பாதிக்கப்பட்டிருக்கும் இனமொன்றின் தலைவிதியை எப்படி மாற்றுவதற்குப் பங்களிக்க முடியும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். அதோடு மிகச் சிக்கலடைந்திருக்கும் தமிழ் – முஸ்லிம் உறவு, வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பான விவகாரம், கிழக்கின் அரசியற் கள யதார்த்தம், கொழும்புத் தலைமைகளோடு நடத்த வேண்டிய அரசியற் போர், இந்தியா போன்ற உலக நாடுகளுடனான இராசதந்திர உறவுகள் எல்லாவற்றையும் எப்படிக் கையாளும்? என்ற சந்தேகமும் உங்களுக்கு ஏற்படலாம்.

இந்த இடத்தில் இதற்குப் பதிலாக ஒரு கேள்வியை முதலில் எழுப்ப வேண்டும். அப்படியென்றால், இதுவரையும் களத்தில் நின்ற – நீங்கள் ஆதரித்த இந்தத் தலைமைகள் தமிழ் மக்களுடைய அரசியலை எந்த வகையில் ஈடேற்றியுள்ளன. அந்த ஈடேற்றம் என்பது என்ன?

மக்கள் வழங்கிய தேர்வு அறுபது ஆண்டுக்கும் மேலானது. அவர்கள் ஒரே முகம் கொண்டு தமிழ்த்தலைமைகளை ஆதரித்துப் பலப்படுத்தியிருக்கின்றனர். ஆனால், அந்தளவுக்கு அந்தத் தலைமைகள், தமிழ் மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுக்கான அரசியலையும் முன்னேற்றவில்லை. பதிலாகச் சனங்களை முடிவற்ற துயரத்திற்குள்ளும் அவலத்திற்குள்ளும் தள்ளியதே மிச்சம். இன்னும் தீராத துயரத்துக்குள்ளேயே லட்சக்கணக்கான மக்கள் உத்தரிக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான், இந்தத் தலைமைகள் இன்று தங்களுக்குள்ளே கிடந்து குத்துப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சந்தி சிரிக்கும்படி நடந்து கொள்கின்றன.

இந்த இடத்தில் ஒரு கேள்வி. ஒரேயொரு கேள்வி. இதற்கான பதிலை யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். உண்மையில், உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். இப்போது எந்தத் தரப்புச் சரியாகச் செயற்படுகிறது? எதன் மீது உண்மையாகவே நம்பிக்கை வைக்க முடியும்? வேறு தரப்புகள், தலைமைகள் இல்லாத நிலையில் வேறு எதை நாம் ஆதரிக்க முடியும்? இருப்பவற்றுக்குள் ஒன்றைத்தானே தெரிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்படும் சொதப்பல் நியாயங்களை இங்கே சொல்ல வேண்டாம். அது குப்பையில் போட வேண்டிய பதில்.

ஆகவே, புதியன நோக்கிச் செல்ல வேண்டியதே இன்றைய தேவையாகவுள்ளது. அந்தப் புதியன அல்லது புதிய சக்தி இந்த உள்ளுராட்சி தேர்தலுக்குச் சாத்தியப்படுமா? என்று யாரும் கேட்கலாம். வரலாறு இன்றுடன், இந்தத் தேர்தலோடு முடிவடைந்து விடுவதில்லை. அதற்கும் அப்பால், நீண்டு செல்வது. ஆகவே வரலாற்றின் தொடர்ச்சியை நோக்கியே நாம் சிந்திக்க வேண்டும். அதற்கான பணியை இன்று செய்ய வேண்டியுள்ளது. இது அதற்கான களமும் காலமுமாகும். அதற்கு சிதைந்திருக்கும் இன்றைய நாளின் படிப்பினைகள் முக்கியமானவை. இன்றைய நாள் படிப்பினைக்குரியது. இதிலிருந்தே சிறந்த பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். அனைத்துத் தரப்பினரின் தவறுகளும் நம் கண்களுக்குத் தெரிகிறதல்லவா. எல்லாத் தலைமைகளின் உண்மையான அடையாளமும் நமக்குப் புரிகிறதல்லவா. ஆகவே புதிய தலைமை என்பது எப்படிச் செயற்பட வேண்டும் என்று.

இதை விடுத்து, ஒவ்வொரு கணமும் இந்தத் தலைமைகள் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கின்றன? அடுத்த கூட்டு எப்படி அமையப்போகிறது? யார் அதற்குத் தலைமை? எந்தச் சின்னத்துக்கு நாம் வாக்களிப்பது? எந்தத் தரப்பை ஆதரிப்பது? என்றெல்லாம் சிந்திப்பது தன்னம்பிக்கையைத் தாரை வார்ப்பதற்குச் சமம்.

பானையில் இருந்தால்தான், அகப்பையில் வரும் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மையில் இந்தக் கட்சிகள் என்ற பானையில், இந்தத் தலைமைகள் என்ற பானையில் சோறும் இல்லை. அமுதமும் இல்லை. வெறும் பானைகளே இவை.

இந்த வெறும் பானைகளின் மூலம் தீராப் பிரச்சினைகளின் பெரும் பசியோடிருக்கும் சமூகத்துக்கு எப்படிப் பசியாற்ற முடியும்?

இதேவேளை இந்த இடத்தில் சிலர் எழுப்பும் சில முக்கியமான விடயங்களை மேலும் கவனிக்கலாம்.

1. தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானோரின் நிலை - தமிழ்த் தேசியம், பலமான அரசியல் சக்திகள் (ஏக பிரதிநித்துவம்) என்பதாக உள்ளது.

2. கிழக்கில் தமிழ்த் தேசியம் என்பது முஸ்லிம்களின் அரசியலையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

3. புதிய - மாற்று அணி ஒன்று சரியான முறையில் மக்கள் அபிமானம் பெறும் வகையில் அல்லது தடுமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகி உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் உருவாக்கப்படவில்லை.

4. மாற்று அணி இயக்கங்களுக்கு கடந்த கால கசப்பான வரலாறு ஒரு தடையாகவே இருந்து வருகிறது.

மேற்படி கவனத்துக்குரிய அல்லது விவாதத்திற்குரிய நான்கு விடயங்கள் தொடர்பாகவும் பதில் சொல்வதாக இருந்தால்,

1. தமிழ் வாக்காளர்கள் 1960 களிலிருந்தே இதே மனநிலையுடன்தான் தமிழ்த்தரப்பை (அ.இ.த.க, த.வி.கூ, த.வி.பு (இது இயக்கமாக இருந்தாலும் அதற்கான ஆதரவு) ஈரோஸின் சுயேட்சை, த. தே.கூ) ஏகபிரதிநிதித்துவத்துக்கு ஏற்றவாறு தெரிவு செய்து வந்துள்ளனர். ஆனால், இதன்மூலம் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன?

மேலும் மேலும் இனமுரண்களே வலுத்துள்ளன. சனங்களின் அழிவும் துயரும் கூடியுள்ளன. இதை வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாகவே இருக்கும் மக்கள் நன்றாக உணர்வர். ஆகவே இனியும் அந்த ஏக பிரதிநிதித்துவம் பொருத்தமானதல்ல. மட்டுமல்ல, இன்றைய உலக ஒழுங்கு பன்முகத்தன்மையை - ஜனநாயகத்துக்கான முன்னுரிமையை அளிக்கிறது. பல சக்திகளும் ஆதரவைப் பெறட்டும். அப்போதுதான், ஒரு கூடையில் எல்லா முட்டைகளையும் போட்டு உடைக்க வேண்டியதில்லை.

2. கிழக்கில் மட்டுமல்ல எங்கும் எந்தத் தரப்பையும் எதிர்ப்பதற்கும் பகை கொள்வதற்கும் தமிழ்த்தேசியம் பயன்படுத்தப்படுமாக இருந்தால், அது தேசியமாக இருக்க முடியாது. இனவாதமாகவே இருக்க முடியும்.

3. மாற்று அணியின் உருவாக்கம் என்பது,மகத்தான இலட்சியத்தின்பாற் கொள்ளும் ஈடுபாட்டின் விளைவு. அதற்கான இலட்சிய உறுதியும் துணிவும் ஆற்றலும் நம்பிக்கையும் சேரும்போதே அது சாத்தியப்படும்.

4.மாற்று அணிகளுக்கு (இயக்கங்களின் வரலாறு) கசப்பான பக்கம் உண்டென்றென்றால், அதே கசப்பான - நம்பிக்கை மோசடியான வரலாறு தமிழ் மிதவாதக் கட்சிகளான தமிழரசுக் கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கும் உண்டு. ஆகவேதான் புதியதொரு தரப்பை மக்கள் அடையாளம் காண முயற்சிக்க வேணும். அப்படி எழுந்து வருகின்ற தரப்பை மக்கள் நம்பிக்கையோடு - தொடக்கத்திலிருந்தே விமர்சனங்களை முன்வைத்து. கவனத்துடன் ஆதரித்து வளர்க்க வேண்டும்.

தொகுத்துக் கூறுவதாக இருந்தால், இது கடந்த காலக் கட்சிகளின் மீதும் அவற்றின் தலைமைகளின் மீதும் நம்பிக்கை இழக்கும் காலமாகும். இது ஆற்றலுள்ளவர்களும் அறிவுள்ளவர்களும் கட்சிகளை விட்டு வெளியேறும் காலம். புதிய செயற்பாட்டாளுமைகள் மேலெழுவதற்கான சூழல் இது. இதை உணர்ந்து கொள்ளவில்லை என்றால், தமிழ்ச்சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னடைந்தே இருக்கப்போகிறது.

(தொடர் 20ஆம் பக்கம்)

இதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அந்த இடத்தில் பின்னடைவும் துயரமுமே வந்து சேரும்.

'அரசியல் ஆய்வாளர்கள் இடைத்தரகர்களாக மாறிச் சீரழியாமல்இ உய்த்துணரும் அறிவுடையோராக மாறிச் செயற்பட வேண்டும்'. இன்றைய சூழலைச் சரியாக விளக்கி, நியாயத்தை எடுத்துரைத்து,மக்களை விழிப்படைய வைக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்குரியது. இதில் ஊடகங்களின் பொறுப்பே இன்றைய நாளில் முக்கியமானது.

ஒரு சமூகத்தின் கண்கள் ஊடகங்களாகும். அதிலும் அவை மூன்றாவது கண்ணாக ஒளி சுடர வேண்டியவை.

ஆனால், இன்று அவை (தமிழ் ஊடகங்களில் பலவும்) தொழிற்படும் விதம் காலில் தேவைக்கேற்றமாதிரிக் கொழுவி கழற்றி விடப்படும் செருப்புகளாகி விட்டன.ஒரு போதும் இப்படிச் செயற்படக்கூடாதவை ஊடகங்கள்.

இப்படிச் செயற்படுமாக இருந்தால், அது மக்கள் விரோதமாக, வரலாற்றுக்கு விரோதமாக, ஜனநாயக விரோதமாகவே அமையும். ஆகவே இது அனைவருடைய பொறுப்புக்குரிய காலமாகும். 

Comments