‘தல பூட்டுவா’ என்ற கொம்பன் யானையின் மர்ம மரணம் | தினகரன் வாரமஞ்சரி

‘தல பூட்டுவா’ என்ற கொம்பன் யானையின் மர்ம மரணம்

வசந்தா அருள்ரட்ணம்

நீண்டு வளைந்த தந்தங்கள் பூட்டிக் கொண்டதால் “இந்த யானைக்கு ‘தலபூட்டுவா’ என்ற ஒரு காரணப் பெயர். இதன் தந்தங்களுக்கும், வேழ முத்துகளுக்கும் ஆசைப்பட்டு இக் கிழட்டு யானையை கொன்று விட்டதாக நம்பப்படுகிறது. மேலும் ஐவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்”

யானைகள் என்றாலே நமக்கெல்லாம் அது ஒரு பரவசமூட்டும் மிருகம். அனைவரிடத்திலுமே யானைகள் பற்றிய ஒரு சுவாரஸ்சியமான அனுபவம் கட்டாயம் இருக்கும். சிறு வயதில் யானையை பார்த்து சிரித்து இருப்போம். யானைக் கனவுகள் கண்டு பயந்து அழுதிருப்போம், கம்பீரமாக அதன் மேல் ஏறி உட்கார்ந்து பெருமைப்பட்டு இருப்போம். யானைகளின் வித்தைகளை பார்த்து வியந்திருப்போம், அடர்ந்த காட்டில் யானைகள் கூட்டம், கூட்டமாய் செல்லும் அழகை பார்த்து ரசித்து படம் எடுத்து இருப்போம். பெரஹராவில் யானைகளின் கம்பீரப் பவனி கண்டு ரசித்திருப்போம். இப்படி யானைகள் பற்றிய அனுபவங்களை கூறிக்கொண்டே போகலாம். ஆனால் மனிதநேயம் மங்கிவரும் எம் நாட்டில் அண்மைக்காலமாக தந்த வேட்டை என்ற பெயரில் யானைகள் கொல்லப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

அந்தவகையில் ‘வயம்ப மரபுரிமை’ என்று அழைக்கப்படும் கல்கமுவ வனப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘தலபூட்டுவா’ என சிங்களத்தில் செல்லமாக அழைக்கப்படும் கொம்பன் யானை அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் காட்டுயிர்களை மதிக்கும் அனைவர் இதயங்களையும் கனக்க வைத்துள்ளது. 56 வயதும் 12 அடி உயரமும் கொண்ட இந்த யானையின் தந்தங்கள் வழமைக்கு மாறாக ஒன்றுடன், ஒன்று பிணைந்து தும்பிக்கையை நீட்ட முடியாத நிலை காணப்பட்டமையால் இது ஒரு

அரிய வகை யானை இனமாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அபூர்வமான இந்த யானையின் தந்தங்களை திருடுவதற்காக தந்த வேட்டைக்காரர்கள் நீண்டகாலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதும் அது சாத்தியமாகவில்லை. அதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த யானை அதிலிருந்து தப்பித்துக்கொண்டது. 1970 ஆம் ஆண்டு தந்த வேட்டைக்காரர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இந்த யானை அதன் ஒரு பக்க கண்பார்வையை இழந்தது. கல்கமுவ பிரதேசம் தொடக்கம் கலாவெவ வரையான நூறு கிலோமீட்டர் பரப்பளவில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு ஊடாக இந்த யானை

சுற்றித் திரிந்தாலும் எந்தவித தொந்தரவும் செய்வதில்லையென பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பிரதேசவாசிகளின் செல்லப் பிள்ளையாகவே இந்த கொம்பன் யானை பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தான் சுமார் ஒரு மாதகாலமாக இந்த யானையின் நடமாட்டத்தைக் காணவில்லை என்று கிராம மட்டத்தில் செய்திகள் கசியத் தொடங்கின.

இதனையடுத்து விடயம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னரேயே வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் இதுதொடர்பில் கவனம் செலுத்தினர். வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார், கிராமவாசிகள் என பலரும் இணைந்து யானையை தேடும் பணியை மேற்கொண்டனர். இதனிடையே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் போது கடந்த 22 ஆம் திகதி யானைத் தந்தங்கள் இரண்டுடன், 6 கஜமுத்துகளையும் வயதான யானையின் நீண்ட தந்தங்களில் விளையும் முத்துகளே தந்த முத்துகள் அல்லது கஜமுத்துகள் என அழைக்கப்படுகின்றன. (வயதான எல்லா கொம்பன் யானைகளின் தந்தங்களிலும் இம் முத்துக்கள் காணப்படுவதில்லை. எனவே அபூர்வமான இம் முத்துகள் மிகவும் பெறுமதியானவை) இவற்றை வைத்திருந்த இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கல்கமுவ மற்றும் ஹேரத்கம பகுதிகளைச் சேர்ந்த கிராம சேவகர் உத்தியோகத்தர்களாகும். எனவே தலபூட்டுவா யானை காணாமால் போன சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பிருக்கக் கூடும், என்ற கோணத்தில் வடமேல் மாகாண வனஜீவராசிகள் வலயத்திற்கு உட்பட்ட பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளபபட்டன. எனினும் சந்தேகநபர்கள் இருவரும் எந்த சந்தர்ப்பத்திலும் வாய்திறக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதித்தனர்.

இந்நிலையில் தான் யானையயொன்றின் உடல் உருகுலைந்த நிலையில் கிடப்பது கடந்த 29 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. உடற் பாகங்கள் ஏனைய விலங்குகளுக்கு இரையாகியும், சிதைவடைந்தும் காணப்பட்டது. எனவே யானை சுமார் மூன்று வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் யானையின் சடலம் மீதான பிரேரத பரிசோதனைகள் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. யானை துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் அதனுடைய தந்தங்கள் இயந்திர வாளால் வெட்டி எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் இரண்டும் உயிரிழந்த கொம்பன் யானையுடையது என்பது தெளிவாக விளங்குவதால்

இச்சம்பவத்துடன் கல்கமுவ கிராமசேவகர் தலைமையிலான கும்பலொன்றுக்கு தொடர்புபட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யானையின் சடலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் பிரேரத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

யானைத் தந்தங்களுக்காக சாந்தமானதும் அபூர்வமானதுமான ஒரு தேசத்தின் சொத்தை கொன்றுவிட்டார்கள். பருத்த உடலமைப்பை கொண்ட வயதான இந்த யானையின் உயிர் பிரியும் போது எத்தனை வேதனைகளை அது அனுபவித்திருக்க கூடும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

இலங்கையில் முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினாலும், கடந்த 15 வருடங்களாக

அபிவிருத்தியின் பேரில் இடம்பெற்றுவரும் காடழிப்புகளினாலும் இலங்கைக்கே உரிய அரிய வகை யானை இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் அம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துரித அபிவிருத்தி திட்டங்களுக்காக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட காட்டுப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.

உதாரணமாக மத்தள விமானநிலையம், ருகுணு சர்வதேச மகாநாடு மண்டபம், அதிகவேக நெடுஞ்சாலை போன்ற அபிவிருத்திதிட்டங்களுக்கு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்ட காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டன. இதன் விளைவாக யானைகளுக்கு மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்ததுடன், தந்த வேட்டைக்காரர்களினால் யானைகள் கொல்லப்பட்டும் வருகின்றன. இதுவரை 14ற்கு அதிகமான யானைகள் அம்பாந்தோட்டை பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானைகள் என்பது இலங்கையின் மத கலாசார ரீதியின் முக்கியத்துவம் பெற்றவை என்பதுடன் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தவை. எனவே இலங்கையின் தேசிய செல்வமான யானையை அழிவில் இருந்து பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் இந்து மத ரீதியாக யானைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதைப்போலவே இலங்கையிலும் யானைகளுக்கு பௌத்த மத ரீதியாக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

யானைகளை வளர்ப்பதற்கும், யானைக்குட்டிகளை பொறுப்பு எடுப்பதற்கும் பல சட்ட திட்டங்கள் உள்ளன. தலதா மாளிகை யானைக்கு ஒரு தனி கௌரவம் உள்ளது. இந் நாடு, யானைக் கதைகள் திரம்பிய நாடு. புத்தரின் பிறப்பு பற்றி கூறப்படுகையில், தாயார் யசோதராதேவி நித்திரையில் ஆழ்ந்திருந்த போது வெண்கொம்பன் யானையொன்று தன்னில் இறங்கியதுபோல கனவு கண்டதாகவும் அதன் பின்னரே அவள் கருவுற்றதாகவும் சொல்லப்படுகிறது. இலங்கையின் 400 யானைகள் வரை கொன்றொழித்த ஒரு ஆங்கிலேயே வேட்டைக்காரர் இடி விழுந்து இறந்ததாகவும் அச்சமயம் யானை பிளிறல் ஒலி கேட்டதாகவும் ஒரு கதை உண்டு. இதில் சுவாரசியமான பகுதி என்னவென்றால், அந்த வேட்டைக்காரரின் புதைகுழி மீது இதுவரை 25 தடவைகளுக்கும் மேல் இடி விழுந்திருக்கிறதாம்!.

இப்படி இலங்கை யானைக் கதைகள் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். சலிப்பு ஏற்படாது. ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த யானைகளுக்கு இங்கே கௌரவம் அளிக்கப்படுகிறதா? வனஜீவி திணைக்களத்தின் மீது பல புகார்கள் உள்ளன.

காட்டுயிர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக அவற்றை அழிக்கும் வேலைகளுக்கு அத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே துணை போகிறார்கள் என்று காட்டுயிர் தொடர்பான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்ற. தலபூட்டுவா காணாமல் போனதாக செய்தி வெளியானபோதும் இத்திணைக்கள அதிகாரிகள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுகளை இந்த அமைப்பினர் சுமத்தினர்.

ஒரு தரப்பு தாம் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுக்கு உள்ளான, ஒரு கண் பார்வையிழந்த, வயதான ஒரு கொம்பன் யானையை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள முடியாமற்போனமைக்கு வெட்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

கானகம் இருண்டது. பல இரகசியங்களை தன்னுள்ளே கொண்டது. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களமும் இருள் சூழ்ந்தது என்று சொல்லப்படுவதில் உண்மை கிடையாது என்பதை அத்திணைக்களம் நிரூபிக்க வேண்டும்.

Comments