திறைசேரி உட்பட அரச நிறுவனங்களில் ஊழல் செய்த அதிகாரிகளை நீக்க நடவடிக்கை | தினகரன் வாரமஞ்சரி

திறைசேரி உட்பட அரச நிறுவனங்களில் ஊழல் செய்த அதிகாரிகளை நீக்க நடவடிக்கை

முன்னைய ஆட்சியின் போது திறைசேரி உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழல் புரிந்த அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரால் செய்யப்பட்ட பாவங்களையே தாங்கள் தற்போது நீக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கேள்வியின் போது குறுக்கிட்டு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னைய ஆட்சியில் திறைசேரிக்கு கீழேயே பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதனை மாற்றியமைத்து திறைசேரியையும் மத்திய வங்கியையும் பாராளுமன்றத்திற்கு கீழ் கொண்டு வந்துள்ளோம். முன்னைய ஆட்சியின் போது திறைசேரி செயலாளரும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்தையே நாம் போக்கி வருகின்றோம். இதன்படி திறைசேரி, மத்திய வங்கி, வரவு செலவுத்திட்ட அலுவகம் ஆகியவற்றை பாராளுமன்றதத்திற்கு கீழ் கொண்டு வந்து சீரான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தி எமது காலத்திலேயே முழு கடனையும் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் தற்போது பாராளுமன்ற கோப் குழு உட்பட ஏனைய குழுக்களுக்கு எதிர்க்கட்சியினரையே நாம் தலைமை பதவிக்கு அமர்த்தியுள்ளோம். எனினும் முன்னைய ஆட்சியின் போது எந்த குழுவிலும் எதிர்க்கட்சிக்கு அங்கத்துவம் வழங்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 

 

Comments