கிந்தோட்டையில் நிலைமை கட்டுப்பாட்டில் | தினகரன் வாரமஞ்சரி

கிந்தோட்டையில் நிலைமை கட்டுப்பாட்டில்

5 கிராமசேவகர் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்கு இனவாதத்தைத் தூண்டினால் தண்டனை

கிந்தோட்டைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதற்கு உரிய நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் இதற்கான நடவடிக்ைககள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவிக்கும் வரையிலும் விசேட அதிரடிப்படையினர் பிரதேசப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (18) மாலை ஆறு மணி முதல் இன்று (19) காலை ஆறு மணிவரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரதேசத்தில் இனவாதத்தைத்தூண்டும் வகையில் செயற்பட்டால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த உடைமைகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியை உறுதிபடுத்துவதற்காக சமாதானக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிந்தோட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்து ஒன்றையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதலில் சிங்கள, முஸ்லிம் தரப்பில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியாதவாறு காலி பதில் நீதவானால் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மதவாத, இனவாத மோதல்களை எற்படுத்தும் நோக்கில் பிரசாரங்களை மேற்கொள்ளும் அனைவரையும் தகுதி தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல இரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சில இனவாத, மதவாத கும்பல்கள் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக போலி வீடியோக்களைப் பதிவுசெய்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படாவிட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்க விடுத்துள்ளார்.

நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் கிந்தோட்டை கிழக்கு, மேற்கு, குருந்துவத்தை, உக்குவத்தை, மஹா ஹப்புகல, இயதிகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

சேதமடைந்த 30 வீடுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வீட்டுரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சேத விபரம் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிய வேண்டிய அவசியம் இல்லை.

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று கிந்தோட்டை உட்பட பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடி விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.

இதேவேளை அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

அதேநேரம், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துமாறும் இரு அமைச்சர்களும் கேட்டுக்ெகாண்டனர். அமைச்சர் ஹக்கீம் நேற்று பிற்பகல் வரை அந்தப் பிரதேசத்தில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்ந்தார்.அமைச்சர் றிசாட் பதியுதீனும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தங்கியிருந்து பாதுகாப்பை பலப்படுத்துவதில் ஈடுபட்டார்.

றிஷாத் ஸ்தலத்திற்கு விரைவு

காலி, கிந்தோட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறைச்சம்பவங்களையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பவம் நடைபெற்ற தினம் நள்ளிரவு (நேற்று முன்தினம்) உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார்.

அதிகாலை 1.15 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்த அமைச்சர், வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்த பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வியாபாரத்தளங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் குடியிருப்புக்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுடனும் உரையாடினார்.

இனவாதிகள் கலவரத்தைத் தூண்டும் வகையில் திட்டமிட்டு, இவ்வாறான அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும், எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு இரையாகாமல் பொறுமை காக்குமாறும், அந்தப் பிரதேச மக்களிடம் அமைச்சர் வேண்டிக்கொண்டார். அச்சத்தினால் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருந்த மக்களையும் அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று மாலை (17) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசரத் தொடர்பை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாட், நிலைமை மோசமடைந்து வருவதை எடுத்துக் கூறியதுடன், விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் ஆகியவற்றை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும், வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமருடன் தொடர்புகொள்வதற்கு முன்னர் பொலிஸ் மாஅதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் அழகக்கோன் மற்றும் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன ஆகியோருடன் தொடர்புகொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டியிருந்தார். காலி பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர், கிந்தோட்டை, விதானகொட, குருந்துவத்த, மகாசபுகல, எலபட, எம்பிட்டிய போன்ற பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

இதன் போது அமைச்சர் பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பௌசுல் நியாஸ் ஆகியோரும் அங்கு சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமது பங்களிப்புக்களை நல்கி இருந்தனர்.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்பு பட்ட சூத்திரதாரிகள் அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் நேற்று காலை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஹெட்டி ரம்ஸி, ஹினிதும விசேட, காலி வடக்கு குறூப் நிருபர்கள் 

Comments