ஜெயலலிதா: பெருங்கொள்ளையின் ஊற்றுக்கண்! | தினகரன் வாரமஞ்சரி

ஜெயலலிதா: பெருங்கொள்ளையின் ஊற்றுக்கண்!

கடந்தவாரம் தமிழக அரசியலில் மூன்று முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. முதலாவது, சசிகலா குடும்பத்தினர், அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், சொத்துகள் மீது நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள்.இரண்டாவது, புதிய தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக அரசிடம் அனுமதிபெறாமல் தன்னிச்சையாக அரச நிறுவனங்களில் ஆய்வு செய்வதையும், அதிகாரிகளை அழைத்து கலந்தாய்வு செய்வதையும் கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது. மூன்றாவது, ஆடம்பரக்கார் இறக்குமதியில் ஒரு கோடிக்கும் அதிகமான தொகையை வரிமோசடி செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜனின் மீது தொடரப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டில் நடராஜன் மீதான இரண்டாண்டு சிறைத் தண்டனை மீளுறுதி செய்யப்பட்டிருப்பது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த சென்னை மேல் நீதி மன்ற தீர்பின் பிரகாரம், வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வருக்கும் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் தீர்ப்பையடுத்து சசிகலாவின் அக்காள் மகள் சீதளா, மறுமகன் பாஸ்கரன் ஆகியோர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளியான நடராஜன் உடனடியாக சரணடைய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவருக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதால் அவகாசம் தரும்படி நடராஜன் தரப்பு நீதிமன்றத்தில் வேண்டிக்கொண்டது. ஆனால் நீதிமன்றம் அக் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்துவிட்டது

ஏற்கனவே பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் நான்காண்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். தற்போது மேலும் நால்வருக்கு – சசிகலாவின் கணவர் உட்பட இரண்டாண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. இதேசமயம், சசிகலா குடும்பம் தொடர்புடைய ஏறக்குறைய இருநூறு இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நிகழ்த்தி, பணம், நகைகள் மற்றும் ஆவணங்களை அள்ளிச் சென்றிருக்கிறது.

ஜெயலிதா இருந்தபோது இக்குடும்பத்தின் மீது எவருமே கை வைக்க முன்வரவில்லை. எனவே, தமிழகமே இக் குடும்பத்தின் வேட்டைக் காடாகிக் கிடந்தது. இந்த வீடு பிடித்திருக்கிறதா, இந்தத் தோட்டம் வேண்டுமா? உடனடியாக வாங்கிவிட வேண்டியதுதான்! ஒரு வீடு பிடித்திருந்தால் பொலிஸ் துணையோடு பத்திரப் பதிவாளரையும் அமைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் புகுந்து விடுவார்களாம். அவர்கள் வெளியே வரும்போது வீடு கைமாறி இருக்கும். அவர்கள் பேசியதுதான் விலை, கொடுக்கப்பட்டதுதான் தொகை! தொண்ணூறுகளில் இப்படி சசிகலா வேட்டை தமிழகமெங்கும் அமோகமாக நடந்தேறியது. பையனூர் வீட்டின் முன்னாள் உரிமையாளர் இசையமைப்பாளர் கங்கை அமரன். அவரது வீட்மையும் காணியையும் இப்படித்தான் அதிரடியாக சசிகலா வாங்கியபோதுதான், ஜெ – சசிகலாவினரின் சொத்து வேட்டை வெளிச்சத்துக்கு வந்தது.

யானைக்கொரு காலம் என்றால் பூனைக்கொரு காலம் வரத்தானே செய்யும்! மத யானையாக விளங்கிய சசிகலா குடும்பம் தற்போது பூனையாகி நிற்கிறது. அக்குடும்பத்துக்கு எல்லா பக்கங்களிலும் இடி, உதை!

இந்த ஊழல்களில் எல்லாம் பங்கு தாரர்களாகவும், சாட்சிகளாகவும், ஏன் எடுபிடிகளாகவும் விளங்கிய பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்து கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும் என்பார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சசிகலா என்ற கோழிமுட்டை மலைகளையே தவிடு பொடியாக்கியது! தற்போது பா.ஜ.கவின் மோடி அரசில் எடப்பாடி – பன்னீர் என்ற இரட்டைக் கரு கோழிமுட்டை சசிகலா சாம்பராஜ்யத்தைத் தகர்க்கத் தொடங்கியிருப்பதாகவே, இந்த அதிரடி சோதனைகளை நாம் கருத வேண்டியிருக்கிறது.

இவற்றின் நோக்கம், அ.தி.மு.கவில் இருக்கக் கூடிய சசிகலா செல்வாக்கை முற்றாக அகற்றுவதுதான். சசிகலா செல்வாக்கை அகற்றிவிட்டு அங்கே பா.ஜ.க.வின் செல்வாக்கை புகுத்துவது டெல்லி பாதுஷாமாரின் திட்டமாக இருக்கலாம்.

இவை இப்படி நிகழ்ந்து கொண்டிருக்க, அத்தனையையும் எப்படி தமக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வாய்ப்புகளுக்காக தி.மு.க. காத்துக் கொண்டிருக்கும் போதுதான் புதிய தமிழக ஆளுநரின் அதிரடி செயல்கள், ஸ்டாலின் மடியில் கனிகளாக வந்து விழுந்திருக்கின்றன.

தி.மு.க தன் ஆரம்ப காலத்தில் ஆளுநர் பதவியையே ஏற்கவில்லை. அது அவசியமற்ற பதவி என்றே கருதி வந்தது. ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் கவர்னர்? என்று மேடைகளில் அண்ணாத்துரை முழங்கினார்.

ஆளுநர் என்பவர் மாநிலங்களுக்கான மத்திய அரசின் பிரதிநிதி மாநில அரசு பதவியேற்பு, அமைச்சர்களின் பதவியேற்பு அல்லது நீக்கம், அவசியமானால் மாநில அரசுக்கு பதிலாக ஆளுநர் ஆட்சியை பிரகடனப்படுத்துவது என்பன ஆளுநருக்கான அதிகாரங்களில் சிலவாகும். ஆனால் அவர் ஒரு மாநில அரசு நிர்வாகத்தில் நேரடித் தலையீடு செய்ய முடியாது. எதுவானாலும் அவர் முதலமைச்சருக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். ஆனால் இந்த வழிமுறையை மீறியவராக தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் செயற்பட்டு வருவதே சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. (மிகுதி அடுத்த வாரம்)

அருள் சத்தியநாதன் 

 

Comments