புதிய ஒரு நிர்வாக மாவட்டத்தையே கோருகிறோம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய ஒரு நிர்வாக மாவட்டத்தையே கோருகிறோம்

அலி ஸாஹிர் மெளலானா

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் வேளையில் 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்த விவாதங்களும் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறவுள்ள நிலையில் அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இதனால் தாமதமடையும் வாய்ப்புள்ளதா?

இல்லை. வருடந்தோரும் நவம்பர் மாதத்திலேயே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. இது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான ஊக்குவிப்பாகவே அமையும். அரசியலமைப்பு பேரவையில் பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, உடன்பாடு காணப்பட்டுவரும் வேளையில் வரவு செலவுத் திட்டத்தினூடாகவும் பல முன்னெடுப்புக்கள் கூறப்பட்டிருப்பது புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணியை இன்னும் ஊக்கப்படுத்துவதாகவே அமைகிறது. இது தேசிய அரசாங்கத்தின் 3ஆவது வரவுசெலவுத் திட்டம். கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களும் நவம்பர் மாதத்திலேயே முன்வைக்கப்பட்டன. சம்பிரதாய அடிப்படையிலேயே இம்முறையும் இது முன்வைக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பிரேரணையில் முன்வைத்துள்ள விடயங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

இலங்கை அரசு ‘ஐக்கிய இலங்கை குடியரசு’ (United Republic of SriLanka) என அழைக்கப்பட வேண்டும், மக்கள் இறைமை தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 3ஆவது உறுப்புரை மாற்றமின்றி இருத்தல் வேண்டும், இறைமையும் பிரயோகமும் எனும் விடயத்தில் தற்போதுள்ள அரசியலமைப்பின் 4ஆம் உறுப்புரை மாற்றமின்றி இருத்தல் வேண்டும், புதிய அரசின் ஆள்புல எல்லை எனும் விடயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதில் அம்பாறை மாவட்டத்தில் புதிய நிர்வாக மாவட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கான வழிப்படுத்தல் குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் அவதானங்களும் கருத்துக்களும் என்னும் தலைப்பில் முன்வைத்த பிரேரணையில் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் சமூகப் பேரவைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் TPA கட்சியும் இணைந்து முன்வைத்த பத்திரத்தில் இந்தியத் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் அபிவிருத்தித் தேவைகளை முன்னெடுக்கும் வகையில் ஆள்புலத்தை மையப்படுத்தாது, வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே இந்தியத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான இரண்டு சமூகப் பேரவைகள் தாபிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளோம்.

புதிய நிர்வாக மாவட்டம் குறித்து லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பிரேரணையை சற்று குறிப்பிட முடியுமா?

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு புதிய நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தொடர்பான பாராளுமன்ற உரையிலும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைத்தேன். 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 652,980 ஆகும். இதில் 256,000 சிங்களவர்களும், 112,750 தமிழர்களும், 282,484 முஸ்லிம்களும் உள்ளனர். எனவே, தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து தமிழ் பேசும் நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளோம். 96 சதவீத மக்களின் நன்மை கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதனால் வினைத்திறன் மிக்க வளப்பயன்பாட்டுக்கு உதவியளிக்கும் வகையில் இது அமைய வேண்டும். 1978ஆம் ஆண்டு 88.3 வீத தமிழர்களை உள்ளடக்கி 6 பிரதேச செயலகங்களை மாத்திரம் கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் 14 பிரதேச செயலகங்களை உள்ளடக்கும் வகையில் அம்பாறையில் தமிழ் பேசும் நிர்வாக மாவட்டமொன்றை ஏன் உருவாக்க முடியாது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த பிரேரணையை அரசியலமைப்பு உருவாக்கச் சபையிடம் முன்வைத்துள்ள தருணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனி நிர்வாக மாவட்டக் கோரிக்கை எந்தளவுக்கு சாத்தியப்படும் என நம்புகிறீர்கள்?

நாம் முன்வைத்துள்ள விடயம் சாத்தியப்படக் கூடியது. நாம் ஒரு புதிய நிர்வாக மாவட்டத்தையே வேண்டுகின்றோம். இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுள் மற்றுமொரு மாவட்டம் உருவாவது பிரச்சினைக்குரிய விடயமல்ல. இதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். ஆனால் நிர்வாக மாவட்டம் குறித்து ஒரு வர்த்தமானி அறிவித்தல் கொடுத்தால் மாத்திரம் போதுமானது. எனவே சாத்தியப்படக்கூடிய விடயங்களையே சாதிக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு தனியானதொரு பிரதேச சபையை கோருகின்றனர். மறுபுறத்தில் கல்முனை நகரசபையையும் நான்கு பிரதேச சபைகளாக உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்விழுபறி நிலையில் அடுத்தகட்டம் எவ்வகையில் அமையும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

வர்த்தமானி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு தடவை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சென்று தனியானதொரு பிரதேச சபை தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் அவ்விடயம் மேற்கொள்ளப்படாமலேயே வர்த்தமானியை அறிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் தேசிய அரசாங்கத்தில் 3 எம்.பிக்களை கொண்டதொரு மாவட்டம். அமைச்சர் பைசர் முஸ்தபா தேசிய அரசாங்கத்தில் உள்ளதொரு அமைச்சர். எனவே, அரசியல் கூட்டத்தில் சென்று வெறுமனே வாக்குறுதியளிக்காமல், கச்சேரியில் கூடி அப்பகுதி எம்.பிக்களை அழைத்து சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை குறித்தும் கல்முனை பிரதேச சபை உருவாக்கம் குறித்தும் பேசியிருக்க வேண்டும்.

இது குறித்து தமிழ் தரப்புக்களுடனும் பேச்சுவார்தை நடத்தி அதற்கான குழுவொன்றையும் நியமித்து அவர்களது சிபாரிசுகளையும் பெற்றதன் பின்னரே அவர் பிரதேச சபை தருவதாக வாக்குறுதியளித்து அதை வர்த்தமானியில் அறிவித்திருக்க வேண்டும். அதுவல்லாமல் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றை தருவதாக வாக்குறுதியளித்து அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வருவதல்ல தீர்வு. மக்களது தேவைகளையும், பிரச்சினைகளையும் மக்களுக்கு மத்தியில் சச்சரவில்லாமல் நல்லிணக்க அடிப்படையில் பேசிச்செய்வதே தேசிய அரசாங்கத்தின் பணி. எனவே ஒரு இணக்கப்பாடின்றி ஒரு பிரதேச சபை தருவதாக ஒரு அமைச்சருக்கு சொல்ல முடியாது. இவ்விடயத்தில் அவர் பொறுப்புவாய்ந்த அமைச்சராக செயற்படவில்லை. அவரது பிழையினாலேயே இப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

சாய்ந்தமருது விவகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனக் கருதுகின்றீர்கள்?

மக்கள் இதன் உண்மை நிலையை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தேசிய அரசாங்கத்தின் அந்தந்த அமைச்சிலுள்ளவர்களும், எம்.பிக்களும் இவ்விடயத்தை பொறுப்புணர்ச்சியுடன் மேற்கொண்டிருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது. இது முஸ்லிம் காங்கிரஸிற்கு சரிவை ஏற்படுத்த அவர்கள் செய்த சூழ்ச்சியென்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மிகவும் புரிந்துணர்வுடனும், அப்பகுதி மக்களது அபிலாஷைகளையும் கருத்திற்கொண்டு, ஒருங்கிணைந்த அடிப்படையில், பொறுப்புணர்ச்சியுடன் செய்ய வேண்டிய விடயங்களை அரசியல் இலாபங்களுக்காக செய்ய முனையும் போது அது பிரச்சினையிலேயே முடிகின்றது.

நேர்காணல் -
ஹெட்டி ரம்ஸி

Comments