தவறவிட்ட தீர்வுகளை விடவும் குறைவான தீர்வே கிடைக்கப்போகிறது | தினகரன் வாரமஞ்சரி

தவறவிட்ட தீர்வுகளை விடவும் குறைவான தீர்வே கிடைக்கப்போகிறது

கடந்த வாரத் தொடர்...

"நம்பிக்ைக என்மீது இருக்கின்றது. தன்னம்பிக்ைகதான் உள்ளதே தவிர, எவர் மீதும் எனக்கு நம்பிக்ைக இல்லை. அப்படி நம்புவதற்கு நான் தயாராக இல்லை. ஏனென்றால் வரலாற்றில் நிறைய சந்தர்ப்பங்களை நாம் இழந்திருக்கின்றோம். இதுதான் தமிழர் வரலாறு. 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு தீர்வை வழங்கியபோது நாம் அதனை நிராகரித்து விட்டோம். இந்தியா நேர்மையில்லாத; ராஜீவ் காந்தி ஒரு மோசமானவர் என்று கூறி நாம் அதை நிராகரித்தோம். இந்தியா ஒரு வல்லரசு. அவர்களுக்குச் சொந்த நலன்கள் இருக்கின்றன. அந்த அடிப்படையில்தான் அவர்கள் பிரச்சினைகளை அணுகுவார்கள். தமிழர் நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அணுகமாட்டார்கள். ஆனால், அவர்கள் நலனும் எங்கள் நலனும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும்போது நாம் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டது. அதே காலத்தில் அப்போதைய பாரதப் பிரதமராகவிருந்த திருமதி இந்திரா காந்தி அம்மையாருக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் சர்வதேச அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு இருந்தது. இந்த இரண்டு தேவைகளும் சந்திக்கின்றபோது இந்தியா தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சியை வழங்கியது. இதுதான் உண்மை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை! அதற்காக இந்தியா தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்று நினைப்போமானால், அது முட்டாள்தனம். அவ்வாறு சிந்தித்ததால்தான் அப்போது கிடைத்த வாய்ப்பையும் இழந்தது மட்டுமல்லாது ராஜீவ் காந்தியையும் இழந்துவிட்டோம்.

2000ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டுவந்த தீர்வுத் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி தீயிட்டுக் கொளுத்தியது. அவர்கள் எரித்ததற்கான காரணம் வேறு. அதிகாரங்கள் அதிகம் என்று அவர்கள் கொளுத்தினார்கள். ஆனால், அன்று பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஏழெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களும் எதிர்த்ததாலும் அதைப்பற்றிப் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.

சம்பந்தனும் அப்போது இருந்தார். அதிகாரம் போதாது என்று அவர் ஆதரிக்கவில்லை. ஒரு முறை சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்தபோது கூறினார், அன்று ஐக்கிய தேசிய கட்சியினர் எதிர்த்ததைப்பற்றி நான் புரிந்துகொண்டிருக்கின்றேன். சுதந்திரக் கட்சி ஏதாவது யோசனையைக் கொண்டு வந்தால், ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பதும், ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வரும் யோசனைகளை சுதந்திரக் கட்சி எதிர்ப்பதும்தான் அன்றைய அரசியல். ஆனால், அந்த அரசியல் தீர்வுத்திட்டத்திற்குப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஐந்து உறுப்பினர்களே தேவைப்பட்டார்கள். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரிக்கவில்லை, என்று கவலையுடன் சொன்னார்.

2005 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு இருந்தது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணை த்தலைமை நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒஸ்லோ மாநாட்டில் சமஷ்டிக்குச் சமமான ஒரு தீர்வைப் பெறக்கூடிய நிலை இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றிபெறச் செய்யத் தவறிவிட்டோம்.

மக்கள் வாக்களிக்க தயாராக இருந்தாலும் தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தினால், வாக்களிக்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. அதனால், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததும் அதற்குப் பின் நடந்தவையும் எம் கண்முன்னே இருக்கின்ற வரலாறு. அவ்வாறு முக்கியமான மூன்று சந்தரப்பங்களை இழந்துவிட்டோம்.

இப்போது 2017ஆம் ஆண்டில் இருந்துகொண்டு வழிநடத்தல் குழுவின் அங்கத்தவர் என்ற முறையில் கூறுகின்றேன், இதுவரை இழந்த சந்தர்ப்பங்களில் வரவிருந்த தீர்வுத் திட்டங்களைவிடக் குறைவான தீர்வே வரவிருக்கின்றது. இதுதான் எமது வரலாற்றுக் கோலம்! இன்றைய தினத்தில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோமானால், இன்னும் மூன்று வருடங்களின் பின்னர் அதாவது 2020இல், ஐயகோ 2017 ஐத் தவறவிட்டுவிட்டோமே! என்று புலம்ப வேண்டியிருக்கும். 1987, 2000, 2005, 2017 எனக் கணக்குப் பார்த்துக்ெகாண்டு இருக்க வேண்டியதுதான்.

சில விடயங்களைச் சொல்ல நினைத்தாலும் சிலவற்றைத் தவிர்த்துக் ெகாள்கிறேன். 1948 இற்கு முன்னர் சோல்பரி ஆணைக்குழுவின் முன்னிலையில் சிங்களவர்கள் சமஷ்டிக் கோரிக்ைகயை முன்வைத்தார்கள். அந்தச் சமயத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து போயிருந்தால், பிரிட்டிஷார் செல்வதற்கு முன்னரே சமஷ்டித் தீர்வொன்றைப் பெற்றுக்ெகாண்டிருக்கலாம். இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அன்று தென்னிலங்கை முழுவதும் அரச உயர் பதவிகளில் எல்லாம் தமிழர்கள்தான் இருந்தார்கள். எங்கே சமஷ்டி கிடைத்துவிட்டால், அவர்கள் பதவிகளைத் துறந்துவிட்டுச் செல்ல வேண்டிவருமோ என்று அஞ்சியிருப்பார்கள் போலும். அதனைவிட அன்றைய பெரும்பாலான தலைவர்களுக்குக் கொழும்பு கறுவாத் தோட்டத்தில்தான் சொத்து இருந்தது. இன்றும் இருந்துகொண்டு இருக்கின்றது.

அன்று இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது மொகமட் அலி ஜின்னா தனிநாடு கோரினார். அப்போது பிரிவினையைக் கைவிடுங்கள், உங்களுக்குப் பிரதமர் பதவி வழங்குகிறோம் என்று இந்தியத் தலைவர்கள் சொன்னார்கள். நேரு கண்ணீர்விட்டுச் சொன்னார். ஜின்னா கேட்கவில்லை. நீங்களே பதவியில் இருந்துகொள்ளுங்கள் எனக்கு நாட்டைத் தாருங்கள் என்று கேட்டு வாங்கிக்ெகாண்டு சென்றுவிட்டார். அந்த சாணக்கியம் தமிழ்த் தலைவர்களுக்கு இருக்கவில்லை.

திரு.இரா.சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறீர்கள். இப்போது சம்பந்தனை அரசு அவ்வாறு அனுப்பிவிடுமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் வந்துவிட்டது. சிங்கள மக்களைப்போலவே தமிழ் மக்கள் மத்தியிலும் கூட்டமைப்பு அந்நியப்படும் ஒரு நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. இந்த அரசியலை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இந்த விடயத்தைக் கூடுதலாகச் சிங்கள மொழியில் வலியுறுத்திக் கூறினேன். ஏனெனில், சம்பந்தனை இந்த அரசு அப்படி அனுப்பிவிடுமோ என்ற ஓர் அச்சம் எனக்கிருக்கிறது. அவ்வாறு அனுப்புமானால். இந்த நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன். தமிழர்களைக் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா சொன்னதற்கும் ஒருபடி மேலே சென்று முழு நாட்டையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்று சொன்னேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு தமிழன் என்ற வகையில் சொல்லும் கூற்று இது. ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு மாற்று இல்லை. அதேபோல், சிங்களவர்களுக்கும் ஒரு மாற்று இல்லை. இந்த முறையும் தமிழர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் சிங்கள மேலாண்மையை முன்னெடுப்பார்களேயானால், அவர்கள் பெருந்தவறு செய்கிறார்கள் என்றே சொல்வேன். தவறுக்கான பின் விளைவுகளைச் சிங்களத் தலைவர்கள் சந்திக்க வேண்டி வரும். இஃது எச்சரிக்ைகயல்ல. ஓர் இலங்கையன் என்ற வகையில் அதையும் கவலையுடன் கூறிவைக்கின்றேன். அரசியலமைப்பு விடயத்தில் முழு இறாத்தல் இறைச்சியும் எனக்ேக தர வேண்டும் என்று அடம்பிடிக்கும் வர்த்தகர்களைப்போல் செயற்பட முடியாது. விட்டுக்ெகாடுத்துச் செயற்படும் நிலையில் இருக்கின்றோம்.

சிங்கள மக்களைப்பொறுத்த வரை தமிழ் மக்கள் தனி நாட்டை அமைத்துவிடுவார்களோ மீண்டும் ஓர் யுத்த நிலைக்குச் சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கின்றது. அதேபோல், முழு நாட்டையும் சிங்களமயப்படுத்தி, அதிகாரப் பகிர்வினை வழங்க மாட்டார்களோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. இந்தச் சந்தேகங்கள் நியாயமானவை என்பதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பக்குவமாக, படிப்படியாக தீர்வை நோக்கி நகர வேண்டும்.

அத்தகைய தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கான பக்குவம், தைரியம், துணிச்சல், ஆளுமை, தூரநோக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் என்னைப்போன்ற அமைச்சர்களுக்கும் இருப்பதாக நம்புகின்றேன். ஆகவே, எவ்வளவுதான் துயரம், கஷ்டம், தடைகள், சவால்கள் தோன்றிக்ெகாண்டு இருந்தாலும்கூட அவற்றையெல்லாம் மீறி நல்லது நடக்கும் என்ற நம்பிக்ைக எனக்கிருக்கிறது. நல்லதே நடக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, இழந்தபோதும் சரி நாட்டின் அனைத்து மூலை முடுக்கில் எல்லாம் உச்சரிக்கப்பட்ட பெயர் மனோ கணேசன். அந்த மனோ கணேசன்தான் இன்னமும் இருக்கிறாரா, இல்லை மாறியிருக்கிறாரா? அமைச்சுப் பதவியைக் கொண்டு சிறந்த சேவையாற்ற முடிவதாகத் திருப்பதிகொள்கிறீர்களா?

அதே மனோ கணேசன்தான்! பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். பின்னர் தடுக்கப்பட்டேன். தொடர்ந்து மாகாண சபையில் இருந்தேன். என்னை அழித்துவிட என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீண்டும் சாம்பலில் இருந்து எழுந்து வந்திருக்கின்றேன்.

அதற்குக் காரணம் தன்னம்பிக் ைகதான். மாகாண சபை உறுப்பினராகவிருந்து பாராளுமன்றத்துக்குச் செல்வதுதான் வழமை. நான் நேரடியாக அமைச்சரவைக்குச் சென்றிருக்கின்றேன். அப்படி சென்றது நானாகத்தான் இருப்பேன் என நினைக்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் இல்லாதபோதும் எப்படி நாடு முழுக்க உச்சரிக்கப்பட்டேனோ அதேபோன்று தற்போது அமைச்சராக வந்தபோதும் உச்சரிக்கப்படும் நபராகவே இன்னமும் இருந்துகொண்டு இருக்கின்றேன் என நினைக்கின்றேன். எந்தக் குறையும் காணவில்லை. நான் என்னை எந்தக் கூண்டுக்குள்ளும் சிறைப்படுத்திக்ெகாள்ளவில்லை. கொழும்பு மாவட்ட மக்கள் என்னைத் தெரிவு செய்திருந்தாலும் வெளி மாவட்ட மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்து வருகின்றேன். வரையறைக்குள் சிறைப்பட்டிருக்கமாட்டேன்.

வடக்கிலோ, கிழக்கிலோ, மலையகத்திலோ, தெற்கிலே எங்கெல்லாம் தமிழ் மக்களுக்குக் குரல் கொடுக்க வேண்டுமோ அதனைச் செய்து வருகின்றேன். அங்கெல்லாம் துன்பம், துயரம் நேர்ந்தால் எனக்கு வலிக்கின்றது. நான் ஒரு மாகாணத்தையோ மாவட்டத்தையோ பிரதேசத்தையோ இனத்தையோ மதத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தும் குறுகிய நோக்கம் கொண்ட அரசியல்வாதியல்ல. இது மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் இதை ஏற்றுக்ெகாள்ளாவிட்டாலும் மக்கள் இதனை நன்கு அறிவார்கள். நாடு முழுவதும் வாழும் அனைத்துத் தமிழ் மக்கள் சார்பிலும் குரல் எழுப்பி ஒரு பொதுக் கருத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்று சிந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நான் முன்னணியில் இருப்பதாக நினைக்கின்றேன்.

சிலர் வடக்கிற்கு மட்டும் பேசுவார்கள். சிலர் மலையகத்திற்காக மட்டும் குரல் கொடுப்பார்கள். நான் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றேன். என் நண்பர்களான அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் வாய்மூடி மௌனிகளாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது நான் முன்னணியில் நின்று குரல் கொடுத்தேன்.

அது மாத்திரமன்றிச் சிங்கள மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்திருக்கின்றேன். கட்டுநாயக்கவில் சம்பள உயர்வு கேட்டுப் போராடிய சந்தர்ப்பத்திலும் புத்தளத்தில் தொழிலுக்குச் செல்வதற்கு எரிபொருள் கேட்டுப் போராடியபோது நான் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளேன். ரத்துப்பஸ்வெலயில் தண்ணீர் கேட்டுப் போராடியபோது மக்கள் சுட்டுக் ெகால்லப்பட்டபோதெல்லாம் நான் மக்களோடு முன்னணியில் இருந்துள்ளேன். ஊடகச் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளேன்.

எனக்கு வரையறை கிடையாது. எங்கு அநீதி நடந்தாலும் அங்கு நீதிக்காகப் போராடவும் அழுக்கு நிறைந்த இடத்தில் அதனைத் துடைத்தெறிவதற்கும் நான் பின்னிற்பவன் அல்லன். ஆனால், நான் ஒரு தமிழன். எங்கள் மக்கள் இந்த நாட்டில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகமான துன்பத்திற்கு ஆளானவர்கள் எனது மக்கள்தான்.

மக்களுக்காகக் குரல் கொடுப்பதில் எந்தத் தயவு தாட்சண்யமும் காட்டுவதில்லை. எதிரணியில் இருந்ததைப்போலவே இப்போதும் செயற்பட்டுக்ெகாண்டிருக்கின்றேன். இப்போதும் நான் எதனையாவது சாதித்திருந்தால், அது போராட்டத்தினால் கிடைத்த வெற்றியே தவிர வேறொன்றில்லை.

*

விசு கருணாநிதி 

Comments