புலமைப் பரிசு | தினகரன் வாரமஞ்சரி

புலமைப் பரிசு

இஸ்லாமியச் செல்வி 
கண்டி...
 

‘வை திஸ்.... கொல வெறி....

கொல வெறி.... கொல வெறி...டீ...

டின்ஸ்டன்ஸுல ...... தூரம்.... தூரம்....’

ரபீக் நானாவின் டீக் கடையிலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நிஜமாகவே ஸல்மானுக்கு கொலை வெறி... டிஸ்டன்ஸில் தூரமாகவே போச்சி.

நடைப் பிணமாக வீட்டை அடைந்தவன் இருண்டு கிடக்கும் வீட்டுக்குள் சுயிட்சை அழுத்த மறந்துவிட்டான். அவனுக்கு இப்போது இருளும் ஒளியும் ஒன்றாகவே தோன்றியது.

“ச்சே.... என்ன மடத்தனம் உன்புத்தி எங்க போச்சு... பானு நீ ஏன் இப்புடி நடந்துகிட்டாய்.... மனைவி பானுவை எதிரே பார்த்தவன் போல உன்னய... உன்னய... பற்களை நரநரவென்று கடித்தவனாக மேசையிலே ஓங்கி ஒரு குத்துவிட்டான். கண்ணாடிப் பூச்சாடி ‘சலார்’ என்ற ஓசையோடு தூள் தூளாகிப் போனது. ஸல்மானுடைய உள்ளத்தைப் போலவே நொறுக்குண்டு உடைந்து போய்விட்டது.

கட்டாரிலிருந்து கொண்டு வந்த பெகேஜ் திறக்கப்படாமலே போட்டது போட்டபடி மேசை மீதிருந்த இனிப்புப் பொட்டலங்களை வரிசையாக எறும்புகள் வந்து உண்டு களித்து எடுத்துச் சென்று கொண்டிருந்தன.

பாவம் சின்னவன் ரோஷன், “டெடா நீங்க எனக்கு லெப்டாப். கேம்ஸ் பிளேயர், நிஸாம்டது போல சைக்கிளு என்று எதுவெல்லாமோ கேட்டான். பிரிக்கப்படாத பெக்கிங்கோடு பொருட்கள் அப்படி அப்படியே. ரோஷன் இதையும் பாவித்ததற்கான அடையாளமே இல்லை.

வீடு முழுவதும் பயிற்சிப் புத்தகங்களும், வினாவிடைப் பத்திரங்களுமாக... யுனிவாஸிட்டி ஸ்டுடன்ஸ் கூட இப்புடி கஷ்டப்பட்டு இவ்வளவு நோட்ஸ், புக்ஸ் எக்ஸ்ட்ரா, எக்ஸட்ரா....

ஸல்மானுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை முழுவதுமாக ஊகித்துக் கொள்ள முடியவில்லை. மனைவி ஷம்லா புத்திசாலி... படித்தவள்... உத்தியோகம் வேறு பார்க்கிறாள்.... இவளுக்கு என்ன பிடித்துவிட்டது.

ஐந்து மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள். கடிகார முட்கள் கடிகாரமாக அவனை வேகப்படுத்தியது. இரும்பு கேட்டை இழுத்து மூடிக்கொண்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டான்.

ஷம்லா அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் பேச்சற்றுப் போய்... மூச்சு முழுமையாக இருக்கத்தான் செய்தது. திறந்த விழிகள் திறந்தபடி... உடல் அசைவற்றுப் போய் ஷம்லாவின் உதடுகள் அசைய மறுத்த போதும் உள்ளத்தில் கடத்தி வந்த காலச்சுவடுகள் வடுக்களாக உணர்வுகள் கொந்தளித்தன.

அலாரத்தின் அலரல் ரோஷனை அதிரவைத்து அதிகாலை நான்கு மணிவரை பாடங்களை மனனமிட வேண்டும் என்பது ஷம்லாவின் கடுமையான கட்டளை.

தலையணைக்குள் பஞ்சு திணப்பது போல அவசரமாக அவதி அவதியாய் ரோஷனின் வாய்க்குள் உணவுக் கவலங்களை அள்ளித் திணிப்பாள் தாயார் ஷம்லா.

ஆறு பத்தாகும்போது ஸ்கூல் பஸ் வந்து ஹோர்ன் அடிக்கும்.

“ராஜா ரோஷன், ஸ்கூல் போய் சேருமட்டும் இந்த லெசன படிச்சு முடிச்சுடனும் பஸ்ல தூங்கக்கூடாது. ‘கட்டளை பிறப்பித்து அனுப்பி விட்டாள்.

அவள் வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தில், தனது லஞ்ச் இன்ட்ரவலை பி.ப. ஒன்று முப்பதிலிருந்து இரண்டு மணிவரை கேட்டுப் பெற்றுக் கொண்டாள். பாடசாலைக்கு அருகாமையிலேயே காரியாலம் என்பதால் ஷம்லாவுக்கு, ரோஷான் கவனிக்க வசதியாக போய்விட்டது.

பாடசாலை மணி அடித்து ஓய்வதற்கிடையில், அம்மாக்கள் கேட்டருகே உள்ள மாமரத்தின் கீழ் கூடி நிற்பார்கள். தத்தமது பிள்ளைகளது பிரத்தியேக வகுப்புகள் பற்றியும், பாடங்களது விமர்சனங்களையும், பிள்ளைகளது பிரதாபங்களையும் ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள்.

மாலை நான்கு மணி வரை பாடசாலை மாலை நேர வகுப்பு, அது முடிய இரவு எட்டு மணிவரை கலா டீச்சரின் கிலாஸ்... சனி ஞாயிறு தினங்களில் பிரபா சேரோட இங்கிலிஸ்கிலாஸ்..... சோமா டீச்சரொட சிங்கள கிலாஸ்... அர்கம் சேரோட பேப்பர் கிலாஸ்....

ஹோம் வேக்... டைம் டேபல்படி பதினொரு மணிவரை பாஸ்பேப்பர் புக் செய்து முடிக்க வேண்டும். ஷம்லாவ இவற்றை எல்லாம் செய்து முடித்திருக்கலாம். பாடங்கள் யாவும் அவருக்கு தண்ணிபட்டபாடு.

வானொலி, தொலைக்காட்சி, கணனி எல்லாவற்றுக்கும் மூடுவிழா, ரோஷன் வாரத்தில் முழுநாளும் படிக்கும் உழைப்பாளி. வாய்ப்பாட்டை மனனமிட்டவாறே நித்திரை கொண்டு விடுவான்.

“மம்மி, நான் கொஞ்சம் வெளிய போய் விளையாடிட்டு வரவா... என்னோட பிரன்ஸ் தான் கூப்பிடுறாங்க,

‘ம்... எங்கவும் போகத் தேவல்ல.’

“ஏண்டா, பாவிங்களா பாடைல போவ பேதிலே போவ... என் புள்ளயோட வௌயாட்ட வச்சிக்க வேணாம். அவன் உங்களப் போல ரஸ்தியாதுப் பொடியனல்ல அவனுக்கு நெரய படிக்க இருக்கு”.

’ரோஷன் இனிமே அந்தப் படியாத தருதலப் புள்ளயளோட சேரக்கூடா. இனனும் மூனு மாசம் முழுமையா படிக்கனும...”

ரொஷான் ஆசையோடு கேட்டு டெடா அன்போடு அனுப்பிய விளையாட்டுப் பொருட்கள் உபயோகப்படுத்தமலே தூங்கிக் கொண்டிருந்தன.

உறவினர் எவரது வருகையுமில்லை. பயணங்களுமில்லை. எல்லாம் ஆகஸ்டுக்குப் பிறகுதான். ரோஷனோட எல்லாப் பொடியனும் ஓல ஐலண்ட்ல அவன் பெஸ்ட் ரிஷல்ட்ஸ் எடுப்பான். எல்லாமே நல்ல மனப்பாடம்.

டீவில, பேப்பர்ல... எல்லா மீடியாவுலேம் ரொஷானோட போட்டோ வரும்.

டீச்சர்ஸும் சொன்னாங்க. ரொஷான் பெஸ்டா மாக்ஸ் வாங்குவான்னு. பலரிடம் மார்தட்டிப் பேசிக் கொண்டாள்.

விடுமுறைக் கால வகுப்பில், டியூசன் டீச்சரின் கிலாஸில் அம்மாக்கிளல் அம்மாவாக பின் வாங்கில் அமர்ந்து நோட்ஸ் எடுப்பாள்.

“இதெல்லாம் நம்மகிட்டயும் இருந்தாதான் நல்லா வீட்லயும் செய்ய வைக்கலாம். நல்லா பாஸ் பண்ணினா பெரிய கொலேஜ்ல சேர்க்கலாம். வெளிநாட்ல படிக்கலாம். டொக்டராக இல்லாட்டி எஞ்சினியராக ஆகலாம். கைநெறய உழைக்கலாம்”.

பாஸ் பண்ணிட்டா பொரினுக்கு trip கூட்டிப் போவம். இப்படி அவனது பிஞ்சு மனசில் பாரிய ஆசை வித்துக்களை விதைத்து விட்டாள்.

“மம்மி நான் பாஸ் பண்ணிட்டா கேம் பிளேயர் கெமராபோன், சுப்பர் மேன் சைக்கிள் எல்லாம் வாங்கி தருவீங்களா....?

“சரி சரி எல்லாம் படிச்சி, கூடமாக்ஸ் வாங்கினா கேட்கிறதெல்லாம் தரலாம்”

இது ஜப்னா பெப்பர்ஸ், இது பெட்டிகெலோ பேப்பர்ஸ்.... அது நெகம்பு பேப்பர்ஸ்.... இது அப்கன்றி பேப்பர்ஸ்.... இது இங்கிலிஸ் பேப்பர்ல ட்ரான்ஸ்லேட் பண்ணினது.... இத எல்லாத்தையும் செய்து முடிச்சா சுவராக பாஸ்தான்.

“மம்மி, நெறைய எழுதுற டைம்ல கைவலிக்குமே” என்ற ரோஷனிடம்.

“அதுக்குத்தான் இப்பவே பிரட்டிஸ் பண்ணனும். இரண்டு மணி நேரத்துல டைம் வச்சி கொஞ்சம் கொஞ்சமா செய்திடுங்க ஓகே” என்ற ஷம்லா.

“பாஸ் பண்ணினா உங்களுக்கு கண்டி அப்பா, கொழும்பு மாமி, லண்டன் பெரியப்பா, அவுஸ்திரேலியா மாமா, டுபாய் ஆண்டி.... இவங்கெல்லாம் நெறைய கிப்ட் தருவாங்க” என்றாள்.

‘ம்... கைவலிச்சாலும் பரவால்ல. பாஸ் மாக்ஸ் வாங்கினன் என்றால் நிறைய பரிசு கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் டாக்டராகலாம்.... இப்படி நிரல் நிரையாய் கலர் கலராய் கனவுகள் கண்டான்.

இன்னும் எண்ணி பத்து நாட்கள்....அந்த பிரிக்ஸுவலுக்கு ஒரு மண்ணும் விளங்குதில்ல....” பிள்ளைகள டியுசனுக்கு அனுப்பாதீங்க. இவங்க கொலேஜ்ல படிக்கிறவர்கள் ஆறாம் தரத்துப்பு பாஸ் பண்ணிட்டா அது போதும். வருத்தாதீங்க...” இப்படி ஒரு தரம் பேச்சுவாக்குல சொல்லிவிட்டாரு”

அந்த மனுசனுக்கு என்னா. பாஸ் பண்ணினா அவரும் கூட புள்ளயலோட நின்று போடடோ எடுத்து பெனர் போடறதுதானே. பேப்பர்லேம் வரும். இதுகூட தெரியாதா...! ‘எங்கட புள்ள படிக்குது நாம செலவளிக்கிறோம்’ மூனாம் வகுப்ல இருந்தே டியுட்டரில விட்டதாலதான் நெறய படிக்க கெடச்சிச்சி!

“இப்பதானே புடிச்சிக் கொள்ற வயசு”... இப்படி அஸ்கலாய்த்த தாய் மாருக்குள் ஷம்லாவும் ஒருத்தி.

தான் பரீட்சை எழுதுவது போல ஒரு நினைப்பு ஷம்லாவுக்கு. பதகளிப்பு.... ஆயிஸுக்கும் லீவு போட்டுவிட்டாள். டியுட்டரிகளும் ஒரு சில நாட்களில் விடுமுறை வழங்கவிட்டன.

ரோஷன் சாப்பிட்டானா.... குளித்தானா..... என்பதை விட படித்தானா பரீட்சை வினாத்தாள்களை செய்தானா என்பதிலேயே ஷம்லாவின் முழுக்கவனமும் இருந்தது.

விடிந்தால் பரீட்சை. பரீட்சைக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தாள். மீண்டும் பல தடவை சரிபார்த்தாள். ரோஷனுக்கும் சொல்லி விட்டாள். வெளிநாட்டு உறவினர்களுக்கெல்லாம் மெசேஜ் அனுப்பி வைத்தாள். பேஸ்புக், வாட்ஸ்சப் எல்லாவற்றிலும் ரோஷானது பரீட்சை பற்றி பதித்து விட்டாள்.

“ரோஷன் கடைசியாக எல்லா நோட்ஸையும் ஒருக்கா பாத்திடுங்க. கரீமா டீச்சர்ட டியுட்ஸ்.... பாஸ்கரன் சேரோட நோட்ஸ்.... விஜயா டீச்சர்ட வினா விடைத் தொகுப்பு.... எல்லாத்தையும் கொஞ்சம் பாத்திடுங்க”.

ஷம்லா பரீட்சை எழுதினால் ஒருவேளை பாஸ் பண்ணியிருப்பாளோ என்னவோ....

அதிகாலையில் வழக்கம் போல எழுந்த ரோஷான்: “மம்மி எனக்கு நெஞ்சுக்குள்ள திக்குதிக்குனு என்னவோ பண்ணுது. நெனப்புல பாடம் பண்ணினது கொஞ்சத் மறக்குது”

“நோ ராஜா. ஒங்களுக்கு ஒன்னும் வராது. பயப்புடாதீங்க. என்ஸ் பீரியன்ஸ் டீச்சர்ஸ்கிட்ட படிச்சீக்றீங்க... நீங்கதான் ஸ்ரீலங்காவுலே வெஸ்ட் மாக்ஸ் வாங்குவீங்க. உங்கட எக்ஸாம் முடிய உடனே ஐஸ்கிரீம் பாலருக்கு போவம். பாக்... பீச்.... எல்லாம் பொயிட்டு வருவம். நல்லா எழுதுங்க.

அழுத்தம் கொடுத்து அனுப்பிவிட்டாள். அப்பாடா ஒரு நிம்மதிப் பெருமூச்சையும் விட்டுக் கொண்டாள்.

பரீட்சை முடிய சுதந்திரப் பறவைகளாக பிள்ளைகள் பெற்றாரை நோக்கி ஓடிவர எல்லோரும் கேட்ட கேள்வி “எப்படி பேப்பர் லேசா கஷ்டமா.... எல்லாம் செயததா?

“மம்மி நல்லா செய்தேன். எல்லா டீச்சர்ஸ்ட சோட் சோட்டா போட்டு எழுதினேன். ஒன்று விடாம செய்தேன்.” என்று பெருமிதமாக கூறினான் ரோஷன்.

“என் மகன் ‘ஹயஸ்ட்’ மாக்ஸ் போட்டுக் கொண்டாள் ஷம்லா. பூட்டப்பட்ட விலங்கு கலட்டப்பட்டு புதிய உலகில் நடமாட கால்வைத்தான். நண்பர்களோடு விளையாட ஆசைப்பட்டான்.

யாருமே அவனை சேர்த்துக் கொள்வதாக இல்லை.

“சரன், ரமீஸ் நானும் உங்க கூட விளையாட வரட்டா....” என்றவனிடம்

“வேண்டாம்பா வேண்டாம். அம்மா உங்காத்து சகவாசமே வேண்டாம். உன் கூட வௌயாட , உங்கம்மா திட்டித்தீர்ப்பாங்க. நாங்க சேரமாட்டம்.’

நண்பர்கள் இன்றி தனிமைப்படுத்தப்பட்டான். ‘டேய்... டேய்.... புத்தகப்பூச்சி வராண்டா.... ஓட்டம் பிடித்தனர் மற்ற சிறுவர்கள்.

தனக்காக டெடா அனுப்பிய விளையாட்டுப் பொருட்கள் அடுக்கப்பட்ட இடங்களில் இருந்து அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தன. “டேய் ரோஷன் இதுவெல்லாம் விளையாடும் வயதைக் கடந்துவிட்டாய்”

மிக மிக ஆவலோடு எதிர்பார்த்த அந்த நாள் ரிஸல்ட் அவுட்டாகியாச்சு. எத்துனை சீக்கிரம் ம்..... என்ன இது நோ... நோ.... இந்த ரிசல்ட்ஸ் வர முடியாதே. எங்கோ பிழ நடந்திருக்கு.

ரோஷன் நிச்சயமாகப் பாஸ் பண்ணித்தான் இருப்பான். அட மாமி கோல்’ பண்ணினார். ‘மகள் ஷம்லா புள்ளயோட ரிஸல்ட் என்ன?”

“மாமி எதுக்கும் இந்த நம்பர அடிச்சி ஒருக்கா ரிஸல்ட்ட பாருங்கோ’ என்ற ஷம்லாவுக்கு இருப்பு கொள்ளவில்லை.

மறுமுனையில் டெலிபோன் கிறிகிறுத்தது. மாமி குட் நியூஸ் சொல்லப் போறா என்ற எண்ணத்துடன் ரிஸிவரை காதில் வைத்தாள் ஷம்லா.

“என்ன புள்ள அது மூன்றாம் வகுப்புல இருந்தே கொலஷிப்.... கொலஷிப் என்று படிக்க வச்சித்திரிஞ்சியே. வெறுமனே நாற்பத்தெட்டு மாக்ஸ்தான். ஷம்லாவுக்கு உலகமே இருண்டு விட்டது. பேரிடி தலையில் விழுந்தது போல கண்களை இருள் சூழ்ந்து கொண்டது.

(தொடர் 22ஆம் பக்கம்) 

Comments