மடையர்களும் முட்டாள்களும்! | தினகரன் வாரமஞ்சரி

மடையர்களும் முட்டாள்களும்!

மடையர்கள் வேறு முட்டாள்கள் வேறா? என்னடா கேள்வி இது என்று யோசிக்கிறீங்களா? வேறுதான். மடையர்கள் பரப்பும் வதந்திகளை முட்டாள்கள் அப்படியே ஏற்றுக்ெகாள்வார்களாம்!

அறிவீனமாக நடந்துகொள்பவர்கள் மடையர்கள், அறிவே இல்லாதவர்கள் முட்டாள்கள் என்றால் ஒத்துக்ெகாள்வீர்களா? வேறு வழியில்லை, அதுதான் உண்மை!

வதந்தியொன்று பரவினால், அதுபற்றி ஆற தீர ஆராய்ந்து அறிந்துகொள்வதைவிடுத்து அப்பிடியே அதை ஏற்றுக்ெகாண்டால், நாம் முட்டாள்கள்தானே!

அதனால்தான்,

"எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய் சிந்தித் தேதெளிவாய்" என்றார் வேதாத்திரி மகரிஷி.

வதந்தியைப் பரப்பிய கதைகளில் விதானையார் காக்கா வாந்தி எடுத்த கதை முதல் பல்வேறு கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

அண்மைக்காலமாக கல்கிஸையில் தங்கியிருந்த ரோஹிங்கிய அகதிகள் பற்றிய வதந்தி, காலியில் சிங்கிள கொத்து ரொட்டி கொடுத்ததாக பரவிய வதந்தி ஆகியவற்றைக் குறிப்பிலாம்.

நல்லா மப்பு ஏத்திக்ெகாண்ட ஒருவர் காலியில் உள்ள ஒரு கொத்து ரொட்டிக் கடைக்குப் போய் இருக்கிறார். அது தமிழ் பேசும் இனத்தவருக்குச் சொந்தமான கடை. சென்றவர் கொத்து ரொட்டி கேட்டதும், உடனே கடைச்சிப்பந்தி, "சிங்கிள் கொத்து" என ரொட்டி தயாரிப்பவருக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.

சிங்கிள் கொத்து என்றது 'நம்மாளுக்கு' சிங்களக் கொத்து எனக் ​கேட்டிருக்கிறது. உடனே கடையில் ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். "அதெப்படி நீ சிங்களக் கொத்து தருவாய்? உங்கள் ஆட்களுக்கு ஒரு கொத்து... எங்களுக்கு வேறொரு கொத்தா?" என்று ஒரே குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு வெளியில் வந்து அந்தத் தகவலை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவவிட்டிருக்கிறார். விளைவு? கடையை நடத்த முடியாத நிலை. எல்லாவற்றையும் சுருட்டிக்ெகாண்டு ஓடிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் கடைக்காரர். இதனால், சிலருக்குத் தொழில் இழப்பு. கடைக்காரருக்குப் பொருளாதார இழப்பு. இத்தனைக்கும் காரணம், ஒரு கொத்து ரொட்டி!

அடுத்தது, ரோஹிங்கிய அகதிகள்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு இலங்கை வந்தவர்கள். காங்கேசன்துறை கடலில் தத்தளித்தபோது இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டவர்கள். நீதிமன்றத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள். அந்த அடிப்படையிலேயே கல்கிசையில் மூன்று மாடிக் கட்டடமொன்றில் தங்க வைக்கப்பட்டார்கள். இது நடந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலேயே வதந்தி பரவுகிறது. ரோஹிங்கிய அகதிகளுக்கு அரசாங்கம் அடைக்கலம் கொடுத்துள்ளதாம். அப்படி செய்யேலுமா? என்று பிக்குகள் குழுவொன்று எதிர்ப்பலையைப் பீறிட்டுக்காட்டுகிறது. அதனைத் தொடர்ந்து அகதிகள் பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களும் பின்னர் கைது செய்யப்படுகிறார்கள்.

கொத்து ரொட்டிக் கடையிலிருந்து பரவிய வதந்தி வேறு. அந்தளவிற்குக் கூர் உணர்வு மிக்கது என்று சொல்ல முடியாது. ஆனால், ரோஹிங்கிய அகதிகள் விவகாரம் பாரதூரமானது. இந்த நாட்டில் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே அகதிகள் உருவாகியிருக்கிறார்கள். 1915ஆம் ஆண்டின் சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சுதந்திரமடைந்ததிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நாடு அகதிகளை உருவாக்கியிருக்கிறது. அஃது இயற்கை பேரழிவாக இருக்கட்டும் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளாக இருக்கட்டும், மக்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

சர்வதேசம் உணர்ந்துகொள்ளும் அளவிற்கு அகதிகளாக மக்கள் சிதறடிக்கப்பட்டது 1983 இல் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும். 2009இலை நடந்தது அடுத்த கதை.

என்னவாக இருந்தாலும், நமது நாடு சிறிய நாடோ பெரிய நாடோ என்னவோ, அகதிகள் என்று வந்துவிட்டால், அவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. அதற்குச் சர்வதேச ரீதியிலான சமவாயத்திற்கு உட்பட்டிருக்கின்றோம். அதனால, அகதிகள் எந்த நாட்டிலிருந்து எப்படி வந்தாலும் அவர்களைப் பராமரிக்க நாம் கட்டுப்பட்டிருக்கின்றோம். அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை கொடுக்க முடியுமா, இல்லையா என்பது வேறு விடயம். அப்படி முடியாவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் அமைப்பிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

அவர்களை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்தும் பொறுப்பினை ஏற்றுக்ெகாள்வார்கள். அதற்கான காலம் கனியும் வரை, ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் குறித்த நாடு அந்த மக்களைப் பராமரிக்க வேண்டும். இவை எதுவுமே தெரியாமல், வதந்தியாகப் பரவிய தகவலின் அடிப்படையில் செயற்பட்டால், அவர்களைத்தான் வதந்திகளை ஏற்றுக்ெகாள்ளும் முட்டாள்கள் என்கிறார்கள்.

எண்பத்து மூன்று வன்முறையின்போது ஒரு பக்கம் சிங்களத் தரப்பினர் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியபோது மறுபுறத்தில் மற்றொரு சிங்களத்தரப்பு தமிழ் மக்களைப் பாதுகாத்ததை இந்த நாட்டு வரலாற்றில் மறைத்து விட முடியாது. அந்த நன்றி உணர்வு எப்போதும் பேணப்பட்டே வருகிறது.

எனவே, இருப்பைத் தொலைத்து விட்டு உயிர் காத்துக்ெகாள்ளும் எதிர்பார்ப்புடன் நம்பிக்ைகயுடன் வரும் எவரையும் இலங்கை புறந்தள்ளக்கூடாது. வதந்தியைப் புறக்கணிக்கும் புத்திசாலிகளாக மாறுவோம்!

Comments