கிராமசக்தி: உற்பத்தி புரட்சி 2030 இல் வறுமையற்ற நாடு | தினகரன் வாரமஞ்சரி

கிராமசக்தி: உற்பத்தி புரட்சி 2030 இல் வறுமையற்ற நாடு

யாழ்ப்பாணத்தில் பயிர்ச்செய்கையை  பார்வையிடும் ஜனாதிபதி மைத்திரி....

லோரன்ஸ் செல்வநாயகம்    

நாட்டிலிருந்து வறுமையை முற்றாக ஒழிக்கும் தேசிய திட்டமாக “கிராமசக்தி” திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு உற்பத்திப் புரட்சியாக முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் தொடர்ந்து நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் வறுமையை ஒழிப்பதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இவற்றில் சில சாத்தியமானதாகவும் சில சாத்தியமற்றதாகவும் நிறைவடைந்துள்ளன.

நாட்டைப் பொறுத்தவரை 100க்கு 7.8 வீத மக்கள் வறுமையிலேயே உள்ளனர். இந்த நிலையில் மொத்தமாகப் பார்க்கும் போது நாட்டின் வறுமை நிலை குறைவடையாது அதே நிலையிலேயே உள்ளது என்பதே ஜனாதிபதியின் கருத்தாகவுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டலில் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான வறுமை ஒழிப்பு திட்டம் கிராமசக்தி எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முழுமையாக இல்லாதொழிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதற்கான திட்டம் கடந்த சில மாதங்களாகவே தயாரிக்கப்பட்டு வருவதுடன் கடந்த 20 ஆம் திகதி அது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டு பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தும் திட்டங்களுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் முழு நாட்டையும் எடுத்துக்கொண்டால் 40--_50 வீதமான மக்கள் கூடிய அல்லது குறைந்த வறுமை நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றனர். இவர்களை நாட்டின் உற்பத்திச் சந்தையிலிருந்து அகற்றப்பட்டவர்களாகவே பார்க்க முடிகிறது. அவர்களுக்கு கொள்வனவு செய்யக்கூடிய பலம் இல்லை. கடன் சுமை அதிகம். இதனாலேயே அவர்கள் அதே இடத்தில் தரித்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இந்த வறுமை நிலைக்கு நாடு பல தசாப்தங்களாக முகங்கொடுத்து வருகிறது. இதில் பெரும்பாலும் கிராமங்களே அகப்பட்டுள்ளன. இதனால் கிராமங்களை அபிவிருத்தி செய்வதுடன் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு கிராமசக்தி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொழில் முயற்சியாளர்களை அங்கு உருவாக்கி பொருளாதாரத்தில் அனைத்துக் கிராமங்களையும் முன்னேற்றுவதற்கு பல்வேறு தரப்பினரதும் உதவியுடன் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

332 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு கிராமங்களிலிருந்து வறுமையை ஒழிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பொருளாதார யுத்தத்தை வென்றெடுப்பதற்கான சாதகமான யுக்திகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனசவிய மற்றும் சமுர்த்தி செயற்திட்டங்கள் தனியே அரசாங்கத்தின் செயற்திட்டங்களாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வறுமை நிலை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதையே அத்திட்டங்கள் முன்னெடுக்கின்றன. கிராமசக்தி அதிலிருந்து வேறுபட்டு சகல துறை பங்களிப்போடு வறுமையிலிருந்து கிராமங்கள் மீள்வதற்கும் கிராமிய மக்களும் பொருளாதாரத்தில் முன்னேறவும் வழிவகுக்கும் நேரடி கருத்திட்டமாக அமையும்.

கடந்த வெள்ளிக்கிழமை சுகததாஸ உள்ளரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்காக 2500 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தொழில் முயற்சிகளுக்காக 25 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

கிராம சக்தி வேலைத்திட்டத்தில் பல தனியார் துறை நிறுவனங்களும் இணைந்துகொண்டுள்ளன. எயார்டெல் நிறுவனம் மற்றும் இயற்கை எரிசக்தி நிறுவனம் ஆகியன ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளன. இதற்கிணங்க கல்பிட்டி மற்றும் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்த செலவில் விவசாயிகள் பெரும் பயனை அடைவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கருவாடு உலர்த்துவதற்கு வெய்யிலைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவசியம் கிடையாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ட்ரயர்’ இயந்திரங்கள் அரசாங்கத்திடம் கைவசம் உள்ளன. தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையில் இவற்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உற்பத்திப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிரூட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவற்றையும் உற்பத்தியாளர்களுக்கு எதிர்காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

விவசாய உற்பத்திகளைப் பொறுத்தவரையில் 100 க்கு 40 வீதமான உற்பத்திப் பொருட்களை விலங்குகளினால் சேதப்படுத்தப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். அனில், குரங்கு, பன்றி போன்றவற்றை கட்டுப்படுத்துவது அவசியமாகும். எதிர்காலத்தில் இதற்கென சில அமைப்புகள் உருவாக்கப்படலாம்.

அவுஸ்திரேலியாவில் கங்காரு அந்நாட்டின் தேசிய மிருகமாகும். எனினும் அந்த மிருகம் அதிகரிக்கும் காலங்களில் அந்த அரசாங்கத்தினாலேயே அவை அழிக்கப்படுகின்றன. அவற்றை இறைச்சியாக்கி ரின்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதுபோன்றே எதிர்காலத்தில் இலங்கையிலும் செயற்பாடுகள் இடம்பெறலாம்.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி செயற்திட்டத்திற்காக கடந்த சில மாதங்களில் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. அத்துடன் இதற்கு சமமான நிதியை தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முயற்சியாளர்கள் தனியார் துறையினருடன் இணைக்கப்பட்டு அவர்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளது. அதற்கென பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நாடளாவிய சகல கிராம மட்டங்களிலும் வர்த்தகம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கென பல பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புகள் பெறப்படவுள்ளன. இதுபோன்ற பல்வேறு செயற்திட்டங்கள் கிராமசக்தி கருத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை மகாவலி திட்டம் போன்றதொரு பாரிய முதலீட்டுத் திட்டமாகவும் கருதமுடியும்.

2030ல் வறுமையற்ற நாடாக இலங்கை நிகழ வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பாகும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவைப் போன்றே கிராமங்களின் எழுச்சியிலும் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் அவர் பல்வேறு திட்டங்களை தயாரித்து அவரது நேரடி வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. டெங்கு ஒழிப்பு, சிறு நீரகநோய் தடுப்பு, உணவு உற்பத்தி போன்ற செயற்திட்டங்களை காத்திரமாக முன்னெடுப்பதற்கென ஜனாதிபதி செயலணிகளை அமைத்து வெற்றிகரமாக செயற்படுத்தி வருபவர் அவர்.

அந்த வகையில் அவரது சிந்தனையில் உருவான ‘கிராம சக்தி’ கருத்திட்டம் நாட்டிற்கு மிகப் பொருத்தமானதும் கிராம மட்டத்தில் சாத்தியமானதாக முன்னெடுக்க முடியுமான ஒரு திட்டமாகவும் உள்ளது. இதற்கென ஜனாதிபதி செயலகத்தில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தி செயற்படுத்தப்பட்டு வருகின்றமையும் இதில் குறிப்பிடக்கூடிய ஒன்று.

‘கிராம சக்தி’ என்பது முழுமையான ஒரு மக்கள் செயற்றிட்டம். அரசியல், இன, மத, குல பேதமின்றி கிராமத்தின் அனைத்து குடும்பங்களும் இதில் இடம்பெறவும் அங்கத்துவம் பெறவும் முடியும்.

வறுமை நிலையிலுள்ள மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை, மக்கள் பங்களிப்பு பேரம் பேசாத கோட்பாடுடன் இத்திட்டம் அமைந்துள்ளது.

ஒற்றுமை, தன்னம்பிக்கை, பொறுப்புக் கூறல் நம்பிக்கை, சரியான இலக்கு, சிக்கனம், வெளிப்படைத்தன்மை, சமத்துவம், இணக்கப்பாடு, நேர்மை போன்றவை ஒன்றிணைந்த தீர்மானங்களுடன் மேற்கொள்ளப்பட்டு இத்தகைய முன்னுதாரணங்களோடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழிகாட்டப்படும்.

‘கிராம சக்தி’ செயற்றிட்டமானது கிராம மக்களை வறுமையிலிருந்து மீட்டும் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். பல்வேறு காரணங்களால் பிளவுபட்டுள்ள சமூகங்களின் மக்களை ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

நடைமுறையிலுள்ள டொலரின் பெறுமதியை வைத்துக் கணிப்பிடுகையில் இலங்கையிலுள்ள மொத்த சனத் தொகையில் 6.7வீதமானவர்களின் மாதாந்த வருமானம் 5700 ரூபாவாகவே காணப்படுகிறது. மேலும் 33 வீதமானவர்களின் மாதாந்த வருமானம் 11,400 ஆகும். மற்ற 52 வீதமானவர்களின் மாத வருமானம் 18,240.

இதன் மூலம் மிக மோசமான வறுமை இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதையே காணமுடிகிறது.

நாட்டின் சனத்தொகையில் மிக மோசமான வறுமையிள்ளோர் தொடர்பை 2012, 2013ம் வருடங்களில் 6.7 வீதமாக குறைக்க முடிந்துள்ளபோதும் வறுமை நிறைந்த பிரதேசங்களின் நிலவும் முரண்பாடுகள் 3வீதத்திலிருந்து 29 வீதமாக அதிகரித்துள்ளதையே காணமுடிகிறது. இது தனி நபர் அபிவிருத்தியில் சவாலான நிலையையே குறிப்பிடுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டமாக கிராம சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் தனி நபருக்கான முதலீடாக 8000 ரூபாவை அரசாங்கம் முதலிடுகிறது. இந்த வகையில் அரசாங்கத்தின் இந்த சிறந்த செயற்றிட்டம் வறுமையை ஒழித்து கிராமங்களையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் இலக்கில் ஒரு குறிப்பிடப்பட்டமைல்கள் என்றால் மிகையாகாது. 

Comments