வெற்றியின் நாயகன் ரங்கன ஹேரத் | தினகரன் வாரமஞ்சரி

வெற்றியின் நாயகன் ரங்கன ஹேரத்

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் துல்லியமான பந்து வீச்சினால் இலங்கை அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போட்டியின் போது டெஸ்ட் போட்டிகளில் அவர் 400 விக்கெட்டுகளைப் பெற்று பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார்.

இதுவரை 84 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1999ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி காலியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான டெஸ்டில் அறிமுகமானார். சுமார் 18 வருட காலமாக விளையாடிவரும் இவர் வெறும் 84 போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். இவர் அறிமுகமான ஆரம்ப காலத்தில் முத்தையா முரளிதரன் சுழற் பந்து வீச்சின் உச்சத்தில் இருந்ததால் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சு பெரிதாக எடுபடாததற்கு முக்கிய காரணமாகும். முரளியின் ஓய்வுக்குப் பின்னரே ரங்கன ஹேரத்தின் சேவை இலங்கை அணிக்கு முழுமையாகத் தேவைப்பட்டது. இவர் முரளியின் ஓய்வுக்குப் பின்னரே கூடுதலான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த ஆரம்பித்ததை புள்ளி விபரங்களைப் பார்த்தால் புரியும். இவர் விளையாடிய முதல் 50 போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளையே கைப்பற்றியிருந்தார். ஆனால் இறுதி 200 விக்கெட்டுகளையும் 35 போட்டிகளிலேயே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் முரளியின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணி பெற்ற எல்லா டெஸ்ட் வெற்றிகளுக்கும் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சே முக்கிய காரணமாயமைந்துள்ளது.

* அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான முதலாவது போட்டியின் போது ரங்கன ஹேரத் 400 வது விக்கெட் என்ற மைக்கல்லை எட்டினார். இது இடது கை சுழற்பந்து வீச்சாளர் பெற்ற முதலாவதுt 400 விக்கெட் சாதனையாகும். இதற்கு முன் இடது கை பந்துவீச்சாளரான பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஸிம் அக்ரம் மாத்திரமே 400 விக்கெட்டுகளை வீ்ழ்த்தியிருந்தார்.

* பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ரங்கனஹேரத் ஆவார். இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர் கபில் தேவ் 99 விக்கெட்டுகனையும், அவுஸ்திரேலிய வீரர் ஷேன்வோன் பெற்ற 90 விக்கெட்டுகளுமே அவ்வணிக்கு எதிராகப் பெற்ற கூடிய விக்கெட் எண்ணிக்கையாகும்.

* குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் நான்காவது வீ;ரராக ரங்கன ஹேரத் இச்சாதனைப் படைத்துள்ளார். முதலாவதாக 72 போட்டிகளில் முத்தையா முரளிதரனும், அடுத்து நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட ஹாட்லி 80 போட்டிகளிலும் இவ்விலக்கை அடைந்துள்ளனர்.

* மேலும் 400 விக்கெட் வீழ்த்தியவர்களுள் வயது கூடியவராக இருந்த நியூசிலாந்து அணி வீரர் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையையும் ரங்கன ஹேரத் முறியடித்துள்ளார்.

* ஒரு இன்னிஸ்சில் 5 விக்கெட் வீழ்தியோர் வரிசையில் ஐந்தாவதாக ஹேரத் 33 தடவைகள் வீழ்த்தியுள்ளார். இவ்வரிசையில் 67 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்தையா முரளீதரனே முன்னிலையில் உள்ளார். ஷேன் வோர்ன் 37, ரிச்சர்ட் ஹெட்லி 36, அனில் கும்லே 35 அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்.

* ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியோர் வரிசையிலும் ரங்கன ஹேரத் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் 9 முறை இச்சாதனையைச் செய்துள்ளார். 22 முறை இச்சாதனையைச் செய்த முத்தையா முரளிதரன் முதலிடத்திலும் 10 முறை கைப்பற்றிய ஷேன் வோர்ன் முன்றாமிடத்திலும் உள்ளனர்.

* பாகிஸ்தானுக்கு எதிராக 12 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் பெற்றுள்ள ஒரே வீரரும், இரு முறை ஒரு போடடியில் 10 விக்கெட்டு மேல் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் இவரே புரிந்துள்ளார்.

* இவர் டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்சில் 100 விககெட்டுகள் வீ்ழ்த்திய 4வது வீரராவார். ஷேன் வோர்ன் 133 விக்கெட்களை வீழ்த்தி இவ்வரிசையில் முதலிடத்திலும் முத்தையா முரளிதரன் 106, கிளேன் மெக்ராத் 103 விக்கெட்டுகளை வீழ்த்தி 2ம், 3ம் இடங்களில் உள்ளனர்.

* டெஸ்ட் போட்டி்யின் போது நான்காவது இன்னிங்ல் 5 விக்கெட்டுக்கு மேல் 10 முறை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Comments