மறுதலிக்கப்படும் மலையக சிறார்களின் உரிமைகள் | தினகரன் வாரமஞ்சரி

மறுதலிக்கப்படும் மலையக சிறார்களின் உரிமைகள்

பன்-. பாலா

"இலங்கையால் ஏற்றுக் 
கொள்ளப்பட்டுள்ள ஐ.நா. சிறுவர் 
உரிமைக்கான சாசன  வரப்பிரசாதங்கள் பொருந்தோட்டச் 
சிறார்களுக்கும் 
கிடைப்பதை 

 

அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்"

வருடந்தோறும் அக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒன்றாகவே அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு வகையில் பொருத்தமானதே. ஏனெனில் சிறுவர் முதியோர் இரு சாராருமே சமூக மட்டத்தில் புறக்கணிப்புக்குள்ளாகி வருகின்றவர்களாக இருக்கின்றார்கள். வருடத்துக்கு ஒரு தடவையாவது இவர்கள் பற்றிய கவனயீர்ப்புக்கு இத்தினம் உதவவே செய்கிறது. தாய், தந்தை முதியோரின் அன்பு பாசப்பிணைப்புக்கூடாக சிறுவர்களை அதிசயமிக்க உலகிற்கு கொண்டு செல்வோம் எனும் தொனிப்பொருளிலேயே இவ்வருட சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஐ.நா.சிறுவர் உரிமை பாதுகாப்புப் பற்றிய சாசனத்தை வெளியிட்டது. இதன்படி 18 வயதுக்குட்பட்ட அமைவருமே சிறுவர்கள் என்று வரையறை செய்துள்ளது. சிறுவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று கல்விக்கான வாய்ப்பு. இதனோடு போஷாக்கான உணவு, சுகாதாரம் என்பனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஐ.நா. சிறுவர் சாசனத்தை 1991 ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுக்கொண்டது. 1998 ஆம் ஆண்டு சிறுவர் சாசனம் ஒன்றை உருவாக்கி பாரளுமன்றத்தில் அது அங்கீகாரம் பெற்று நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அத்துடன் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனம் கண்டு தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளமை தெற்காசிய நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியான அம்சம் என்பதே ஆய்வாளர்களது பதிவு. ஆனால் இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் எதுவுமே மலையக சிறார்கள் பக்கம் திரும்புவதாக இல்லை. சிறுவர்களின் ஆளுமையை விருத்தி செய்ய வழிவகுக்கும் முன்பள்ளிக் கல்வி இங்கு முறையாக கிடைப்பது இல்லை.

இன்று சிறுவர்களின் உள, உடலியல் ரீதியான வளர்ச்சியில் முன்பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி மனித ஆளுமையிலும் சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கினை வளர்ப்பதிலும் முன்பள்ளிக் கல்வி என்பது பெறும் முக்கியத்துவமும் தேசிய -சர்வதேசிய ரீதியில் உணரப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. நாட்டின் பிற சமுக சிறார்களுக்கான முன்பள்ளி ஏற்பாடுகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வரும் நிலையில் மலையகத்தில் முன்பள்ளி நிலை மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது கவலைக்குரியது. இவை முன்பு மொன்டிசோரி, நர்சரி, பாலர் பாடசாலை என்றெல்லாம் வழங்கப்பட்டு தற்போது முன்பள்ளிகளாக தொடர்கின்றது.

மலையகத்தில் முன்பள்ளி முன்னெடுப்புக்கான கருதுகோள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே உதயமாகி யிருந்தது. குறிப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அடியொற்றியே இதனை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நிர்வாக மட்டத்தில் சாதக பாதகமான நிலைப்பாடுகள் தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 1992 இல் முன்பள்ளிகள் உருவாக்கம் பெற்றன. டிரஸ்ட் போன்ற சமூகநல நிறுவனங்கள் இதற்கு உதவியிருந்தன.

இன்றைய நிலையில் தோட்ட நிர்வாகங்களால் நடத்தப்படும் சிறுவர் நிலையங்களே அதிகமாக காணப்படுகின்றன. 5 வயதுக்கு குறைந்த தோட்டக் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என்ற போதும் 20- முதல் 40 வீதமானோரே பிள்ளைக் காப்பகத்துக்குச் செல்லும் நிலைமையே உள்ளது. இவ்வாறான காப்பகத்தில் தமிழ்த் தெரியாதோரே பணியாற்றும் சூழ்நிலையில் தாய் மொழியிலான அடிப்படை அறிவினைப்பெற முடிவதில்லை. இங்கு முறையான கல்வித் திட்டங்கள் ஏதுமில்லை.

தவிர முறையான முன்பள்ளி பற்றிய தெளிவின்மையால் குழந்தைகள் காப்பகத்தில் பிள்ளைகளை விடுவதிலேயே பெருந்தோட்ட பெற்றோர் கவனம் செலுத்துகிறார்கள். இதைவிட்டால் இவர்களுக்கு பிள்ளைகளை விட்டு விட்டுச் செல்ல வேறு வழியுமில்லை. இங்கு காலனித்துவ ஆட்சியில் பிள்ளை மடுவங்கள் ஆரம்பிக்கப்பட எவை காரணமாக கொள்ளப்பட்டதோ அதே எதிர்பார்ப்புகளே இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. அன்று தோட்டக் குழந்தைகளால் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதும், இளம் தாய்மார் பிள்ளைகளை பராமரிக்கும் கவலையின்றி வேலைக்குச் செல்ல உதவுவதுமே முக்கிய தேவையாக கருதப்பட்டது. இன்றும் கூட அதே கொள்கையே பின்பற்றப்படுகின்றது.

உடல், உள ரீதியிலான சிறுவர் வளாச்சி பற்றி கரிசனை காட்டப்படாமையால் அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. தொழிலாளர் மீதான ஆதிக்கத்தை தொடர்வதற்கு இது அவசியமானதாக உள்ளது. இங்கு உடல், உள ரீதியான வளர்ச்சிக்கு அவசியமான ஆரம்பக் கல்வி, விளையாட்டு போன்றவை வழங்கப்படுவது இல்லை. இதன் மூலம் ஐ.நா. சிறுவர் சாசனம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படவே செய்கின்றன.

இன்றைய நிவையில் இங்கு 2000 முன் பள்ளிகளுக்கான தேவைகள் இருக்கும் நிலையில் 300 பள்ளிகள் வரையில் இயங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவை தாய் மொழி மூலமான போதனை, மதம் சார்ந்த அணுகுமுறைகள் குறைவாகவே இருப்பதால் உரிய பலன் கிடைப்பதில்லை என்பதே பதிவாக இருக்கின்றது.

ஆய்வாளர் சிவலிங்கம் சதீஷின் பதிவுப்படி மலையகத்தில் சுமார் 84,000 பிள்ளைகளுக்கு முன்பள்ளி வாய்ப்பு இல்லை என்பது புலனாகின்றது. இதுவே மலையக பிள்ளைகளின் பிற்கால கல்வி பெறுபேறுகளில் பின்னடைவுகளை உண்டாக்க காரணமாக இருக்கின்றது என்கிறார் ஆய்வாளர் சிவலிங்கம் சதீஷ்.

இதேபோல வளரும் நிலையிலான கல்வியை உரிய வகையில் பெறக்கூடிய வாய்ப்புகள் பல்வேறு காரணிகளின் நிமித்தம் கைக்கூடாமல் போகின்றன. குறிப்பாக ஆரம்பக்கல்வி, இடை நிலைக்கல்வி, உயர்கல்வி என்பன முறை சார்ந்த கல்வியின் முக்கிய அம்சங்களாக விளங்குகின்ற போதும் அது மலையக சிறார்கள் விடயத்தில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. கல்வித்துறை சார்ந்த எந்தவொரு திட்டமும் தோட்டப்புற சிறுவர்களின் கற்றல் உரிமைக்கு சாதகமானதாக அமையவில்லை என்பதே அவதானிகளின் கருதுகோள். மலையக சிறார்கள் கல்வியில் அபிவிருத்தியடைவது என்பது தமது தோட்ட கட்டமைப்பு நிர்வாகத்துக்கு குந்தகமாக மாறிவிடலாம் என்பதே காலனித்துவ ஆட்சியினரின் எண்ணமாக இருந்தது.

காலனித்துவ ஆட்சி முடிவுற்று சுதேச ஆட்சி உதயமாகிய பின்னரும் 1972 வரையில் அந்நிய கம்பனிகளிடமே பெருந்தோட்டங்கள் இருந்தன. அப்பொழுதும் இந்த எண்ணக்கரு மாறவில்லை.

பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதிலிருந்து இற்றைவரை அதில் பெரிய மாற்றமேதும் காணமுடியவில்லை. மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் கூட இதே மனப்பான்மையோடு செயற்பட்டதாலேயே மிக மோசமான பின்னடைவு ஏற்பட்டது என்று குறை காண்பவர்களும் உண்டு. இவ்வாறான சக்திகள் தோட்டத் தொழிலில் ஆளணிப் பற்றாக்குறை ஏற்படுவதை விரும்பாததே இதற்கு காரணம். கல்வியில் ஏற்படும் வளர்ச்சி தேயிலைத் தொழிலைப் பாதிக்கும் எதிர்கால அச்சுறுத்தலாகவே இருக்குமென அவர்கள் கணக்குப் போட்டார்கள்.

20 ஆம் நூற்றாண்டிலேயே தோட்டப்புற கல்வி குறித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. தோட்டப்புற சிறார்களுக்கு தாய்மொழி போதனையின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இக்காலக் கட்டத்திலேயே பொருதோட்டப் பகுதிகளில் பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. மதம் பிரசார நோக்கோடு கிறிஸ்தவ அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டின. இந்து சமய மற்றும் மதம் சாரா தனியார் நிறுவனங்களும் பாடசாலைகளை அமைத்தன.

(16 ஆம் பக்கம் பார்க்க)

Comments