பழையதும் புதியதும் | தினகரன் வாரமஞ்சரி

பழையதும் புதியதும்

ஏ.எஸ்.உபைத்துல்லா

பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கிடக்கும் ஒட்டுப்புல் வட்டை வயலைப் பார்த்தவாறு மருதவயல் கிராமம் அமைந்திருக்கின்றது. திட்டியில் அமைந்துள்ள குடிசைகளுக்குப் பின்னால் தென்னை மரங்களும், மாமரங்களும் தோப்பாக காணப்பட்டது.

பரந்த வயல்வெளி எங்கும் நெற் கதிர்கள் பால் வெற்றி, பசுமையும் மஞ்சளும் கலந்து, செங்காயாக மாறி அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. சோளகக் காற்று பெயர்ந்து வாடைக் காற்றுக்கு நெற்கதிர்கள் ஒன்றோடு ஒன்று உரசி கலகலவென்று அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து இலேசான மணம் வீசிக் கொண்டிருந்தது.

கண்ணுக்கெட்டிய தொலைவில் பரந்து கிடக்கும் அந்த வயல் வெளியின் மகரந்தப் பசுமையைப் பார்த்து கண்ணும் மனமும் குளிர்ந்தன.

அறுபத்தி நாலாம் மைல் கல்லிலிருந்து சிறிது தூரம் உள்நோக்கி வளைந்து, நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதை காலடி பட்டுப் புற்கள் அழிந்து மணற்கோடாக இருக்கும். இருமருங்கிலும் பற்றைக் காடுகளும், மஞ்சட் கோரைப் புற்களும் வறண்டு மண்டிப் போய் கிடக்கும் பாதை வழியே சென்றால் அந்த அழகிய வயல்வெளியைக் காணலாம். சலிப்பே தட்டாது.

ஆங்காங்கே வயல் வெளிக்குள் இருக்கும் வெல்லம் பற்றைகளை அண்டியதாகக் காளான் குடையைப் போல விரிந்து, குவிந்திருக்கும் பறண்கள் வரிச்சுத்தடிகளாலும், வைக்கோலினாலும் கட்டப்பட்டிருந்தன.

பெரும்பாலும் காலை வேளையில் கோவிந்தன் வீட்டில் இருக்க மாட்டான். கோவில் மணியோசை கேட்டவுடனேயே வயலுக்குப் போய்விடுவான். அது அவனது நித்திய கடமைகளில் ஒன்றாகும்.

ஓட்டுப்புல்வட்டை வயல்வெளியை அண்டியதாக செல்லாச்சிப்பள்ளம், பட்டியடிப்பள்ளம், மொட்டைமலைப் பெரும்பத்து, பாலையடிக்கொம்பான், போன்ற வயல் கண்டங்கள் காணப்படுகின்றன.

வயல்வெளியின் தரையும், வானமும் ஒன்றை ஒன்று தொட்டுத் தழுவுவது போல அந்தத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. அடிவானச் சரிவிலிருந்து சூரியன் மூன்றாம் கட்டை மலைக் குன்றுக்கு மேலாகத் தலையைக் காட்ட ஆரம்பித்தது.

மூதூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் கடந்த பல மாதங்களாக அடங்கிப் போய்க் கிடந்த பாரூக் நானாவுடைய தேனீர்க்கடை பரபரப்புடன் காணப்பட்டது. கடைக்கு முன்னால் கிளை பரப்பி வளர்ந்து குடையாய்க் கவிந்து நிழல் வாகை மரத்தடியில் விவசாயிகள் வந்து கூடி தமது தொழில் முறை தொடர்பாக சிலாகித்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

காட்சிகள் பல கண்ட இந்த நிழல் வாகை மரம் இயற்கையை நம்பி உயிர் வாழ்கின்றது. அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. அப்பறவைகள் கானமிசைப்பதைக் கேட்டும், அந்த நீண்ட சாலையில் விவசாயிகளும் பொதுமக்களும் பேசிக் கொண்டும், மாட்டு வண்டிகளும் மோட்டார் வாகனங்களும் விரைந்து செல்லும் சப்தத்தை கேட்டும் மகிழ்ச்சியடைந்தது.

நிலச் சுவாந்தரான சுபைர் ஹாஜியார் மூதூரிலிருந்து பஸ்ஸில் வந்து அம்மரத்தடியில் இறங்கி வயல் வழியை நோக்கி சென்றார். நெடிய உருவமும் கட்டுமஸ்தான உடல்வாகும் கொண்ட அவர் அதிகம் படிக்கவில்லையாயினும் உலக விவகாரங்கள் நன்கு தெரிந்தவர். கணக்கு வழக்குகளில் எல்லாம் புலி.

ஒரு காலத்தில் சாதாரண விவசாயியாக இருந்து வயலை ஆத்மார்த்தமாக நேசித்தவர். குன்றாக உழைப்பும் குறையா முயற்சியும் என்றும் எதையும் சாதிக்கும் என்பதிற்கொப்ப முன்னேறியவர்.

விவசாயிகள் மீது அவருக்கு எப்போதுமே அலாதியான பிரியம் உதவி செய்ய வேண்டும் என்ற தாராள மனப்பாங்கு கொண்டவர்.

வெள்ளாமைச் செய்கையில் ஈடுபடும் முதலீடு குறைந்த விவசாயிகளுக்கு முற்பணம் கொடுப்பார். அறுவடை முடிவடைந்ததும் பெற்றுக் கொண்ட பணத்துக்கு விவசாயிகள் தமது நெல்லை சுபைர் ஹாஜியாருக்கு அளந்து கொடுப்பார்கள்.

குடிமை என்ற உழைப்புத்தான் நடைமுறையில் இருந்தது. செய்த வேலைக்குக் கூலியாக நெல்லை அளந்து கொடுப்பதும் அந்தக் காலத்தில் காணப்பட்டது.

ஒட்டுப்புல் வட்டையிலுள்ள தனது வெள்ளையடிப் பணிவு வயலுக்குச் சென்ற போது அங்கே வழி நெடுகிலும் நின்றிருந்த விவசாயிகளிடம் வயல்வெளியின் நிலவரம் பற்றி விசாரித்துக் கொண்ட போது உதடுகளில் உடைந்த சிரிப்பில் இசைவான கனிவும், பரவசமும் அவரிடம் காணப்பட்டன.

வயலில் இணைந்து, பிணைந்து இரண்டறக் கலந்து சதா வயல் நிலத்தோடு கிடந்து போராடி உழைத்து உரமேறியவன் கோவிந்தன். சுபைர் ஹாஜியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கமக்காரனான அவனிடமே சகல பொறுப்புக்களையும் ஒப்படைத்திருந்தார். அவனுக்குத் திருமணம் செய்து வைத்து முதல் வீடு கட்டி கொடுக்கும் வரையிலான எல்லா விடயங்களையும் அவரே கவனித்து கொண்டார். கோவிந்தனுக்கு என்னுமொரு தந்தையாக வாழ்ந்தவர் சுபைர் ஹாஜியார்.

அவர் அணிந்திருந்த தனது தடித்த காக்கி சட்டையின் உட்புறமாக உள்ள பொக்கட்டுக்குள் கையை விட்டு கசங்காத நோட்டுக்களை எடுத்து மிகவும் பௌவியமாக அங்கு நின்றிருந்த விவசாயிகளுக்கு கோவிந்தன் மூலமாக எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலை வேளையில் வயல் வெட்டை முழுவதும் மூடியிருந்த பனிமூட்டம் சற்று நேரத்துக்கெல்லாம் ‘சுள்’ என்றடிக்கும் சூரியக் கதிர்கள் பட்டு விலக நெற்றிப் பொட்டியில் கைகளை விரித்து வைத்துக் கொண்டு வெள்ளையடிப் பணிவு வயலின் கிழக்கு எல்லையில் எப்போதோ யாரோ சாப்பிட்டு விட்டு போடப்பட்ட பனங்கொட்டை மழை வெள்ளத்தில் மிதந்து வந்து முளைவிட்டு தளிர் விட்டு, மனித உதவியின்றி வளர்ந்த அந்தப் பனை மரத்தடியில் நின்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, கண்களைச் சுழட்டியவாறு வயல்வெளியை சுபைர் ஹாஜியார் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் மகிழ்ச்சி, ஆறுதல் பெருமிதம் ஏற்பட அந்த நினைப்பில் அவர் உள்ளத்தில் இன்பகரமான நினைவுகள் எல்லாம் வந்தன.

அவருடைய வெள்ளையடிப் பணிவு வயல் இரு போகமும் நன்றாக விளையக்கூடிய நிலங்களில் ஒன்று, அதற்குப் பக்கத்தில்தான் கொய்யா அடி முடக்கு. அதனைச் சுற்றிக் கொண்டு மகாவலி கங்கையின் ஒரு கிளையான மாவில் ஆற்றில் இருந்து இத்தியடி வாய்க்கால் ஊடாக ஓடிவரும் நீர் ஒட்டுப்புல்வட்டையை நிறைத்து பொன்னாவரந்திடலால் வழிந்தோடி மாமிஞ்சான் ஆற்றில் வந்து சங்கமிக்கும்.

“நாளைக்கு வெள்ளாம வெட்டுற வேலயப் பார்க்க வேணும். ஆக்களுக்கு சொல்லிருக்கா?” என்று சபைர் ஹாஜியார் கோவிந்தனைப் பார்த்துக் கேட்டார்.

“ஒழுங்கு செய்திட்டேன் முதலாளி...” என்றான் கோவிந்தன்.

“பூமாலவட்ட பத்து ஏக்கருக்கு பசள எறிஞ்சாச்சா...?”

“நேத்து எறிஞ்சிட்டேன் ஹாஜியார்”

“மல்லிகைத்தீவு கிணத்தடி வயல் ஏழு ஏக்கருக்கு எண்ணெய் அடிச்சா கோவிந்தன்...?”

“போன சனிக்கிழம அடிச்சிட்டன்....”

“சந்தனவட்ட வயல எப்ப வெட்டலாம்...?”

“இன்னும் ரெண்டு கௌமயில வெட்டலாம் ஹாஜியார்...”

“எரிக்கலம்காட்டு வயல் பக்கம் நேத்து ஆன வந்து அழிச்சிட்டதாமே...? காவலுக்கு ஆள் போடனும் கோவிந்தன்...”

“ஆனக் காவலோட, பண்டிக் காவலுக்கும், குருவிக் காவலுக்கும் ஆள் போட்டிருக்கன் முதலாளி...”

பேச்சைச் சுருக்கி செயலைப் பெருக்குமாறு கோவிந்தனுக்கு சுபைர் ஹாஜியார் ஆலோசனை கூறிக் கொண்டிருந்த போது, நினைவுகள் பின்தள்ள நிஜங்கள் அவர் முன் வந்து நின்றது.

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பமாகிவிட்டது. இந்த வருடம்தான் மழை. கால நேரத்திற்கு முறையாகப் பெய்திருக்கின்றது. ஊரெல்லாம் ஒரே விளைச்சல். அதைக் கண்டு விவசாயிகள் எல்லோரும் பூரித்துப் போனார்கள்.

வயல் வெட்டுவதற்கு முன் ஏதாச்சும் நடந்திடக் கூடாது என்ற மன ஏக்கத்தினால் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள். காடு, மேடு வானம் பார்த்த பூமி எல்லாம் விளைந்து போய்க் கிடக்கின்றது. ஆனால் விளைந்த வயலை வெட்டுவதற்கு கூலியாட்கள் இல்லை. திருகோணமலை, கிண்ணியா ஆட்கள் ஒருவரும் மூதூர் பக்கம் வரவேயில்லை.

கந்தளாய்க் குளத்து நீரை வயலுக்குத் திறந்துவிட்ட பிற்பாடு தம்பலகாமம், கிண்ணியா பக்கமெல்லாம் வயலில் நல்ல விளைச்சல். அதனால அவங்கட ஊரிலே வெள்ளாம வெட்டுகிற கூலியாட்களுக்குத் தட்டுப்பாடு.

ஆனால் இன்று...? எல்லாவற்றுக்கும் முன் காசு கொடுக்க வேணும். வயல் செய்கையைப் பொறுத்த வரையில் காசை விதைச்சி காசை எடுக்க வேண்டி இருக்கிறது. வியாபாரத்துக்கு முதலீடு செய்வது போல நெற்செய்கைககும் முதலீடு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் வயலை செய்கை பண்ண குறைந்தது ஐம்பதாயிரம் வேணும்.

ஒரு காலத்தில் வயல் செய்கையில் ஈடுபட்ட முதலாளிமார்களெல்லாம் இன்று கடன்காரர்களாக மாறிவிட்டார்கள். செலவு அதிகரித்து விளைச்சல் குறைஞ்சிட்டுது. பழமைக்கும் புதுமைக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவரான சுபைர் ஹாஜியார் அந்தக் காலத்தும் இந்த காலத்தும் நெற் செய்கை, அறுவடை என்பவற்றை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்... நெருடலான நினைவுகள் அவரை விடுவதாயில்லை.

வயல் வெளியில் முத்தி பழுத்த நெல்லை இனங்கண்டு ஒவ்வொரு வரவைக்குள்ளும் போய் பிடி பிடியாக வெட்டி கட்டாக் கட்டி வீட்டுக்குக் கொண்டு வந்து அதனைப் பக்குவமாக வெய்த்து நல்ல நாள் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்களை எல்லாம் கூட்டி வந்து விருந்து படைப்பார்கள். அதனை அந்த காலத்தில் ‘புதிர்’ எடுக்கிறது எண்டு சொல்வார்கள்.

அது மட்டுமா...? களத்து மேட்டில பாத்திஹா ஓதி, பால் சோறாக்கி, பூரண அட்டமி, நவமி என நல்ல நாள் பார்த்து வெள்ளாமையை வெட்ட ஆரம்பிப்பாங்க...

களமும், கதையும் இப்போ மாறி போச்சுது. அந்த பழக்கமெல்லாம் இன்று...? ஏன்...? எதற்கு...? என்று கேட்கும் நிலை நம் மத்தியல் வந்துடடுது!

சோத்துக் கடையில் வேங்கிய சோத்துப் பார்சல்கள் வயல்வெளிக்கு வருவுது. ஆனால் அதில உப்பு, புளி இருக்காது. கல்லும் மண்ணுமாக இருக்கும். உறைப்பு வாயில் வெயிக்க முடியாது.

வீட்டில சோறாக்கி வாளக் கருவாடு அல்லது பிரால் மீன் கறியோடு புளியாணமும் காய்ச்சி வட்டப் பெட்டியில் கட்டி வாழை இலையால மூடி சூடடிக்கிற களத்துக்கு வரும்.

சோறும் கறியும் கமகமவென்று நல்லா மணக்கும். களைச்சி போய் இருக்கின்ற கூலியாட்கள் ஒரு புடிபுடிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலம் மாறிப் போச்சுது...

வயல் வெதைக்க மெசின், வயல் வெட்ட மெசின், சூடு அடிக்க மெசின் எண்டு வந்திட்டுது. எருமை மாடுகளுக்கு வேலை இல்லாமல் போயிட்டுது. எருமைகள் எல்லாம் காடுகளிலும் மேடுகளிலும் அலஞ்சி திரியுது. இப்போதெல்லாம் மாட்டு வெசக்கட கூட கொடுக்கப்படுவதில்லை.

வயலை தாக்கத்தியால வெட்டறாப் போல இல்ல. மெசினினால் வயல் வெட்டும் போது மூலை முடுக்கெல்லாம் கதிர் தல நிமிந்து நிற்குது. ஒழுங்காக இல்ல. வேண்டா வெறுப்புக்கு வெட்டுறாப் போல இருக்குது...

ஊருக்குள்ள ஆமிக்கும் புலிக்கும் சண்டை வந்த பொறகு வயலுக்குள்ள பறிகதிர் பொறுக்க எவரும் வருவதாக இல்ல. சின்னஞ் சிறுசுகள் கூட வருவதாக இல்ல. பறவைகளும், மிருகங்களும் வந்து நெல்லைத் திண்டுட்டுப் போவுது.

முன்பெல்லாம் வெள்ளாமை வெட்டி, காய்ந்து கலடு தட்டிய திடலை பார்த்து வட்ட வட்டமாக சூடு வைப்பார்கள். சூடடிக்க நல்ல நாள் பார்ப்பார்கள். நடுக்களத்தில் வேளையார் கம்பால குத்தி வலச்சி போடுவார்கள். ரெண்டு தொடுவ எருமை மாடுகள் சூட்டைச் சுத்திச் சுத்தி வந்து கதிர்கள துவைச்சுக் கொண்டிருக்கும். அரக்கு மாட்டுக்குத்தான் பெரும் கக்கிசம்!

எப்படியும் பத்து ஏக்கர் வெட்டி, சூடு அடிக்க நாளஞ்சி நாள் செல்லும். சூட்டுக் களத்துக்கு துடக்கு ஆகாது. அதனால சூட்டுக் களத்தைச் சுத்தி வைக்கலால் பிரிகட்டி காவல் போடுவார்கள் சூட்டுக் களத்துக்கு ஊருக்குள்ள இருந்து பெண்டுகள் ஒலப் பொட்டியில தோசை, அப்பம், தயிர், வாழைப்பழம், மாம்பழம் எல்லாம் கொண்டு வந்து யாவாரம் செய்தார்கள். சாப்பிட்ட காசிக்கு கூலி நெல்ல அளந்து கொடுப்பார்கள்.

இனி அப்படியான காலமும், சூழலும் வருமா...? என்டா வெள்ளாம வெட்ட, சூடடிக்க ஆட்கள் முன்பு போல தேவல. எல்லாத்தையும் மெசின் செய்யுது கவலப்படத் தேவல. காசி இருந்தா போதும்... எல்லாம் தானாக நடக்கும்.

மனிசனுக்கும் சமூகத்துக்கும் தேவையான அன்றாட வேலைகளை மனித மெசின்கள் செய்து விடுகின்றன. அதனால வயலில் கூலி வேல செஞ்ச ஆக்களெல்லாம் வெள்ளாமத் தொழில உட்டுப்போட்டு வேற... வேற தொழிலுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. அத நெனைக்க நெனைக்க எனக்கு கவலயாக இருக்குது.

அரசாங்கமும் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்காததால இடையில இருக்கிற மொதலாளிமார்களெல்லாம் உழைச்சிட்டுப் போறாணுகள். வெள்ளாமையை அதிகமாக வௌய வெய்க்க வேணும் என்பதுக்காக விவசாயிகளின் வாய்க்குள் நுழைய முடியாத கடுமையான பெயர்களையுடைய கண்ட கண்ட மருந்து, பசள, எண்ணெய் எல்லாம் பாவிக்கிறாங்க. ஆனால் பெரிசா வௌச்சலில்ல. நஞ்சி கலந்த அரிசியை சாப்பிடுறதால இப்ப எல்லாருக்கும் வியாதி எல்லாம் வருவுதாம்.

அந்த காலத்தில நாங்க இதயெல்லாம் பெரிசாகப் பாவிக்கல்ல. ஆனா வயல் நல்லா வௌஞ்சிது. அல்லாஹ்ட பறக்கத்து இருந்து. சூடு அடிச்சா ஏழை எளியதுகள், பள்ளிவாசல் எல்லாத்துக்கும் சதக்கா, ஸகாத் நெல்லையெல்லாம் கொடுத்திட்டு கந்துமுறி, பதக்கடையோடு மிச்ச நெல்லை ஊட்டுக்குக் கொண்டு வருவோம்.

இப்ப அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் இல்ல. அது எங்கேயோ மூலைக்குள்ள கெடக்குது. மெசினப் பயன்படுத்தி வெள்ளாம வெட்டினா... ஒரு பக்கத்தால நெல்லு மூடை வருவுது. வீட்டில அடுக்கி வெச்சி அழகு பாத்த காலமெல்லாம் போச்சிது.

சூடடித்ததும் மாட்டு வண்டியில் நெல் மூடைகள் வீட்டுக்கு வரும். இப்ப அந்த நெல் இல்ல. அதுக்கு பதிலாக ரெக்டரிலும், லேன்மாஸ்டரிலும் ஒரு தரத்துல முப்பது நாப்பது மூடை என்று ஏத்தி வாரார்கள். முன்பு என்றால் ஒவ்வொரு தெருவிலயும் மாட்டு வண்டி இருக்கும். இப்போதெல்லாம் ஒரு அவசர தேவைக்கு சாமான்களை ஏத்தி இறக்க மாட்டு வண்டி ஊருக்குள்ள தேடுவது கஷ்டமாக இருக்குது. மாட்டு வண்டிக்கு தொழில் இல்லாததாலே அதிலிருந்து ஒதுங்கி கனபேர் கூலி வேலைக்கு போகிறார்கள்.

வயல உழும்போதும், வெள்ளாம வெட்டும் போதும், சூடடிக்கும் தேம் கேட்கும் “ஓ... ஓ... கோ... கோ... இந்தா... ஏய்... ஏய்... என்னம்மா... தாய்யே...” என்று மாடுகளை உசாராக்கப் பாடுகின்ற அந்த குரவப் பாட்டுச் சத்தமெல்லாம் இப்ப இல்ல, இளம் தலைமுறைக்கு இதெல்லாம் சொன்னால் எங்க புரியப்போவுது...? புரியிரதோ, புரியாமல் இருப்பதோ உங்க பாடு... என்று சுபைர் ஹாஜியாரின் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

புதுமையை நாம் வரவேற்கத்தான் வேணும் பழமையில் சந்தோசமும், சுகமும் இருக்கின்றது. வாழ்க்கையின் அருமை எல்லாம் எவ்வளவு அற்பமாகி விடுகிறது. இது சுபைர் ஹாஜியாருக்கு மட்டுமல்ல... நமக்குந் தான்!

Comments