ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண சேதி தெரியுமோ?”

“ஏதும் வில்லங்கமா இருந்தாத்தான ஓடி வருவனீ”

“வில்லங்கமோ இல்லையோ என்டு நீங்க தானன்னே சொல்ல வேணும”

“முதலில விசயத்த சொல்லன்”

“வைத்தி முருகேசுவின்ட கிணறு நல்லாதானண்ண கிடந்தது உதில ஈக்கோலி கிடக்குது எண்டு சுகாதார அதிகாரியள் கிணற்ற மூடிப்போட்டினமன்னே உது என்னன்ன ஈக்கோலி”

“ஈக்கோலி எண்டு சொல்லுறது ஒருவகை தொற்று. உந்த கிருமி நீரில காய்கறியில இருக்கும் மனிதரின்ட உடலுக்கு புகுந்ததெண்டா வயிற்று வருத்தம், வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். யாழ்ப்பாணத்தில குருநகர் பாசையூர் மாதிரி கரையூர் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில ஈக்கோலி கிருமியள் இருக்கிறதால உந்த பிரதேசத்தில உள்ளவை கிணற்றில இருந்து நீர் எடுக்கிறத நிறுத்திப் போட்டினம். உதாலதான் சுகாதார அதிகாரிகள் உந்தப் பிரதேச கிணறுகள மூடிப்போடுகினம்”.

“இத்தினநாள் நல்லாதானே கிடந்துது”.

“கழிவறைக்கும் கிணற்றுக்கும் இடையில 15–20 மீற்றர் இடைவெளி இருக்க வேணும். ஆனா யாழ்ப்பாண நகரத்தில உந்த இடைவெளி குறைவாக்கிடக்குது யாழ். பிரதேசத்தில கிடக்கிறது சுண்ணாம்புக்கல் மண் உது நல்ல வடிகட்டியில்ல எண்டபடியால கழிவு நீரோட கிணத்து நீர் சேருது உதால நிலத்தடிநீர் மாசடையிது. கிணத்துநீரும்தான்” “உதுதான் விசயம் என்ன”

“உது முடியேல்ல இன்னும் கிடக்குது கேளன; கிணத்து நீரை பாவிக்க முடியாததால யாழ்ப்பாணத்து மக்கள் குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிக்கிடக்கு”.

“போத்தல் தண்ணியத்தான் வாங்க வேணும் என்ன?”

“இங்க பாரு சின்னராசு யாழ்ப்பாணத்தில உள்ளவைக்கு 50 ஆயிரம் கன மீற்றர் குடிதண்ணீர் தேவையாக்கிடக்குது. ஆனா மாரிகாலத்தில 34.960 கன மீற்றர் குடிநீரையும் கோடையில 13,100 கன மீற்றர் குடிதண்ணீரையும்தான் பெற முடியுது என்டபடியா போத்தல் தண்ணீரைத்தான் வாங்க வேண்டியிருக்குது. இப்பிடி போத்தல் தண்ணீர வாங்கிற குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில அதிகரிச்சுக் கொண்டு வருகுது. 20 லீற்றர் தண்ணி போத்தில் ஒன்று 200 ரூபாவுக்கு விக்கிது. இப்பிடி பாத்தமென்டா ஒரு மாசத்திற்கு 6000 ரூபா குடிதண்ணீருக்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செலவாகுது சரியே. குறைஞ்சிவார நீர்வளத்தைப் பாதுகாத்து சிறந்த முறையில நிர்வகிக்க வேண்டும் என்ற கரிசணை இப்ப அரசாங்கத்திற்கு வந்து கிடக்கு”

“கரிசனையோ உதென்ன புதுக்கதை?”

“புதுக்கதைதான் மொத்தமா நாட்டில உள்ள நிலத்தடி நீரைக் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்போகினம் எண்டு நீர்விநியோக சபையிண்ட தலைவர் சொன்னவராம் உதுக்கு 3.2 பில்லியன் ரூபா செலவாகும் என்டும் நெதர்லாந்து அரசாங்கம் உந்த நிதியை இலகுகடனாக் கொடுக்க சம்மதித்துக்கிடக்கென்டும் தெரிய வருகுது”

“உதை எப்ப ஆரம்பிச்சு எப்ப முடிக்கப்போகினம”.

“என்னது என்னத்த கன்னையா மாதிரி பேசுறன. உந்த நிலத்தடிநீர் ஆய்வு வேலைய அடுத்த மாசமே ஆரம்பிக்கப் போகினம். உந்த கணக்கீட்டுக்குப் பிறகு நிலத்தடி நீர் கண்காணிப்பு முறையொன்டை ஆரம்பிக்கப்போகினம”

“சீக்கிரம் ஆரம்பிச்சவையெண்டா நல்லதுதான்”.

“நாடு முழுவதிலயும் உள்ள நிலத்தடிநீரில விவசாயத்திற்கு பாவித்த களைக்கொல்லி; பிளாஷ்டிக் துணிக்கை, தொழிற்சாலைகளில இருந்து வெளியேறுகிற இரசாயனக்கழிவு எல்லாம் சேர்ந்து இருக்குதாம். எண்டபடியால நாட்டிலுள்ள 103 ஆற்றுப்படுக்கைகளிலும் நீலத்தடி நீர் ஆய்வை நடத்தப்போகினம். உந்த இடங்களில நாளாந்தம் ஆய்வு நடத்தி தரவுகளை கொழும்புக்கு அனுப்புவினம் உந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை நெதர்லாந்து கம்பனி ஒன்றுடன் கடந்தவாரம் செய்திருக்கினம்”.

“ஏணண்ணே நெதர்லாந்து”

“ஏணென்டா உலகத்திலுள்ள சிறந்த நிலத்தடி நீர் கண்காணிப்பு விற்பன்னர்கள் நெதர்லாந்திலதான் இருக்கினமாம். அவையோட எங்கட ஆக்கள் வேலைசெய்து அனுபவம் பெற்றுக்கொண்ட பின்னால எங்கட ஆக்களே உந்த வேலைய செய்து போடுவினம் எண்டு நீர் விநியோகசபை தலைவர் சொன்னவராம்”

“உது நல்ல விஷயம் தான்”

“எங்கட பைப்பில வர்ற தண்ணீரும் போத்தலில விற்கிற தண்ணீரும் எந்தவித நச்சுத்தன்மையும் இல்லாமக் கிடக்குது என்டதுக்கு எந்த உத்தரவாதமும் இல்ல. போத்திலில அடைச்சி சந்தையில விற்கினம். அரசாங்கத்தால பரிசோதிச்சித்தான் சந்தைக்கு விடுவினம் என்ட நம்பிக்கையிலதான் சனம் உதை வாங்கிக் குடிக்கிது”

“உப்பிடித்தானன்ன எங்கட சனம் நம்புது”

“எங்கட நாட்டில சின்னராசு அடிக்கடி உந்த வரட்சி வருகுது ஏன் தெரியுமோ ?”

“மழையில்லாததால வருகுது:

“மழையில்லாததிலதான் வரட்சி வருதுகு என்பது சரிதான் ஆனா மணலத்தோன்றுரது காட்ட அழிக்கிறது என்டதுதான் இந்த வரட்சிக்கு முக்கிய காரணம் மத்தக்காரணம் பூமி வெப்பமயமாறது எங்கடநாட்டில ஆறுகளும் நீர்வளமும் நிறையக்கிடக்குது. என்டதால சமாளிக்க முடியுது. இல்லையெண்டா பிரச்சினைதான”;

“குடிக்கக்கூட தண்ணி கிடைக்காது என்ன”

“சரியாச்சொன்னனீ எங்கட குழாய்நீரை சரியா முகாமைத்துவம் செய்யிறதில்ல தெரியுமோ உதால குழாய்நீரில 20 சதவீதம் வீணாப்போகுது எண்டு கண்டு பிடிச்சிரிக்கினம் தண்ணீர விரயமாக்காம சரியா முகாமைத்துவம் செஞ்சமெண்டா எங்களுக்கு நீர் பஞ்சம் வராது தெரியுமோ இஸ்ரேல் தெரியுமோ இஸ்ரேல்”

“ஒரு நாடென்ன”

“அந்த நாட்டில 70 வருஷத்துக்கு முன்ன தண்ணீருக்கு பெரும் கஷ்டமா இருந்துதாம்.

பின்ன என்ன செஞ்சினம்”

“இஸ்ரேல் காரர்கள் என்ன செஞ்சினம் தெரியுமோ கடல் நீரை சுத்திகரிச்சி குடிநீரா மாத்தினவை இப்ப அவையின்ட தேவைகளுக்கு மேலகிடக்கிற நீரை அண்டை நாடுகளுக்கு விற்கினம்”;

“எங்கள சுத்திக்கிடக்கிறது எல்லாம் கடல்தான அந்த நீரை விற்க ஏலுமோ?”

“அந்த நீரை சும்மா விக்கேலாது சின்னராசு அதிலிருந்து உப்ப பிரிச்சி நல்ல நீரைத்தான் விக்கேலும். அப்பிடியே விக்கேலாது இன்னொண்டு எங்கட நாட்டில குடிக்க மட்டுமில்ல விவசாயம் செய்யிரதுக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்யிரதுக்கும் தண்ணீர் தேவைப்படுகுது கண்டியோ

“ஓமண்ண”

எங்களுக்குத் தண்ணி வேணுமென்டா அது நிலத்தில இருந்து வரவேணும் இல்லையெண்டா மழையில இருந்து கிடைக்க வேணும் சரியே ஆனா ஒரு காலத்தில மழை சரியான நேரத்துக்கு வந்துது பருவப்பெயர்ச்சி மழை எண்டு உதைச் சொன்னவை ஆனா இப்ப எப்ப மழை வருகுது எண்டு சொல்லேலாமக் கிடக்குது. நிலவுக்கு மனிசர அனுப்புர அளவுக்கு நாங்க முன்னேறிப்போட்டம் ஆனா தேவையான நேரத்தில மழைய வரவழைக்க முடியாமக் கிடக்குது”.

“சரியாச சொன்னியள் மெத்த படிச்சு போட்டனாங்கள் ஆனா அரிச்சுவடி தெரியாமக் கிடக்கு. எண்ட கதைதான் என்ன?”

“உனக்குத் தெரியுமோ தெரியல்ல பழைய ஜனாதிபதி ஜே ஆரின்ட காலத்தில மழைபெய்யிறதுக்கு மேகத்தில இராசயன பவுடர் தூவிப் பாத்தவை ஆன உது சரியா வேலை செய்யேல்ல”.

“அப்ப செஞ்சி பாத்திரிக்கினம் என்ன”

“இப்பவும் சில இடங்களில மழை பெய்யுது. ஆனா பல இடங்களில வரட்சி தொடருது என்டுதான் பேப்பரில செய்தி போட்டிருக்கினம்”.

“உது மட்டுமில்ல எங்கட பைப்புக்களில இருந்து லீக்காகிற அதாவது ஒழுகிற நீர் எவ்வளவு என்டா அதிசயித்துப் போவனீ”

“ஏணன்ன அந்தளவோ”

“ஓமப்பா வீடுகளுக்கு வாற பைப்புக்களில ஏற்படுகிற நீர் ஒழுக்குகளால நீர் விநியோகசபைக்கு பில்லியன் ரூபா கணக்கில நட்டம் வருதுகுது எண்டு அதிகாரியொருவர் கூறியிருக்கிறார”;

“அந்தளவுக்கு தண்ணீரை நாசமாக்கிறவை என்ன?”

“நீர் விநியோகசபையில மொத்தம் 11 ஆயிரம் பேர் வேலை பார்க்கினம்; ஒரு கனமீற்றர் குழாய்நீரை வழங்க சபைக்கு 150 ரூபா முடியுது ஆனா உந்த ஒரு கன மீற்றர் குழாய் நீரை எத்தனை ரூபாவுக்கு பாவனையாளர்களுக்கு விற்கினம் எண்டு தெரியுமோ?”

“தெரியேல்ல அண்ண?”

“ஒரு கன மீற்றர் குழாய் நீரை 50 ரூபாவுக்குத்தான் பாவனையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிக்கிடக்கு”

“அப்படியெண்டா நட்டம் தானண்ண”

“நட்டம் தான் ஆனா என்ன செய்யிறது நட்டத்தோட சரி மக்களுக்கு குடிக்க குழாய் நீரை கொடுக்கத்தான வேண்டிக்கிடக்கு”. 

Comments