சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்கள்

சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இப் பத்தியில் கடந்த வாரம் கூறியிருந்தோம். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

அரசாங்கம் முன்வைத்துள்ள சுற்றுலா பெருந்திட்டம் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம் கூறியிருந்தார். இத்திட்டத்தின் கீழ் 50 இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரம் ஏக்கரில் சுற்றுலா பயணிகளுக்கான விருந்தோம்பல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக நான்கு மாத டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டமொன்று இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இரண்டு வருட விளம்பரத் திட்டம் செயற்படுத்தப்படும். இதே நேரம் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை இரண்டு மடங்காக 7 பில்லியன் ரூபாவாக உயர்த்துவதற்கும் சுற்றுலாத்துறை மூலம் 6 இலட்சம் தொழில் வாய்ப்புகளை அடுத்த மூன்று வருட காலத்தில் உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் கூறியுள்ளது.

இது மட்டுமன்றி கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான கடற்கரையில் 86 ஹெக்டெயார் பரப்பளவில் பாரிய பொழுதுபோக்கு கடற்கரைப் பூங்காவொன்று அமைக்கப்படவுள்ளது.

200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த கடற்கரைப்பூங்கா கொழும்பு நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் அதேநேரம் இலங்கைவரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும்.

தற்போது கொள்ளுப்பிட்டியில் இருந்து தெஹிவளை வரைசெல்லும் கரையோர ரயில் பாதைகளுடன் இணைந்ததாக இந்தக்கரையோரப் பூங்கா அமையவுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட பிரதேசத்தின் கடல் அரிப்பைத்தடுத்து இப்போதுள்ள 14 கழிவுக்கால்வாய்களை விஸ்தரித்து கடல்பிரதேசத்தை அழகுபடுத்துவதும் இத்திட்டத்தின் ஏனைய நோக்கங்களாகும்.

கொழும்பு துறைமுக நகர நிர்மாண விதிகளின்படி துறைமுக நகர திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அந்தத் திட்டத்தில் உள்ளடங்கும் கடற்படுகை பிரதேசத்தில் சீராக்க விஸ்தரிப்பு ஒன்றை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது முதலீட்டுக்கான வர்த்தகப் பெறுமதியைத் திரும்பிப் பெறும்வகையில் இந்த கரையோரப் பூங்கா அமைகிறது. துறைமுக நகரத்திட்டத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் கூட்டாக இந்தத்திட்டத்தில் சம்பந்தப்படலாம். இந்த நீண்டகால திட்டத்திற்கு கொழும்பு பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு கேள்விகளைக் கோரியுள்ளது.

இக்கரையோரப் பூங்காத்திட்டம் முழுமைபெற குறைந்தபட்சம் இன்னும் ஐந்து வருடங்கள் செல்லும் என்று மதிக்கப்பட்டுள்ளது.

2017 முதல் 2020 வரையிலான மூன்றாண்டு காலத்துக்கு சுற்றுலா சபை வகுத்துள்ள ‘சுற்றுலா நோக்கு’ ஆவணத்தின்படி அவ்வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்களென்றும் இதன் மூலம் 3 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் 35 மில்லியன் டொலர் வருமானம் நாட்டுக்கு கிடைக்கு மென்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது.

இலங்கையில் தற்போது 22 ஆயிரம் ஹோட்டல் துறைகள் முதல்தர வசதிகளுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று வருடங்களில் மேலும் 6500 அறைகள் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் என்று ஹோட்டல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளின் நோக்கத்தை செயற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. இதில் ஒன்று சுற்றுலா பயணிகளின் வருகை திடீரென்று குறைத்து விடுவதாகும். குறிப்பிட்டுச் சொல்வதானால் இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் 3.6 சதவீத அதிகரிப்பை காட்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜுலை மாதம் 1.8 சதவீதத்தால் திடீரென குறைந்து விட்டது. எனினும் இலங்கையை ஒரு சுற்றுலா தளமாக சந்தைப்படுத்தும் போது இவ்வாறான திடீர் சரிவுகள் ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெற்காசியா சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரியாகும். இங்குள்ள ஒவ்வொரு நாடும் சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்கு இழுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

சுற்றுலாத்துறை விடயத்தில் ஒவ்வொரு தெற்காசிய நாடும் போட்டித் தன்மையுடன் தான் செயற்படுகிறது. மலேஷியா வருடாந்தம் 27 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை கொண்டுள்ளது. தாய்லாந்து 35 மில்லியன். சிறிய நாடான பூட்டான் கூட குறிப்பிட்ட அளவு சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கைக்கு அதிகளவில் வரும் சுற்றுலாப்பயணிகள் (கடந்த மாதம் 31,220) இந்தியாவில் இருந்தே வருகின்றனர். சீனாவில் இருந்து கடந்த மாதம் 26,507 சுற்றுலாப்பயணிகளும் பிரிட்டனில் இருந்து 21,903 சுற்றுலாப் பயணிக்கும் ஜெர்மனியில் இருந்து 10,993 சுற்றுலாப் பயணிகளும் பிரான்சில் இருந்து 10,730 சுற்றுலாப் பயணிகளும் கடந்த மாதம் இலங்கை வந்தனர்.

நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுலா சந்தையை கொண்டுள்ள பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே அதிக அளவில் பணத்தை செலவழிப்பவர்களாக உள்ளனர்.

இலங்கை சுற்றுலாத் துறையை பொறுத்தவரையில் அதிக சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகின்றனர். இலங்கை சுற்றுலாத்துறையில் கிட்டத்தட்ட 18 சதவீதம் இந்திய சுற்றுலாப் பயணிகள் ஆவர். கடந்த வருடம் 3,56,000 இந்திய சுற்றுப்பயணிகள் இலங்கை வந்தனர். 2017 இல் 25 இலட்சம் சுற்றுலா பயணிகளை மும்பாய். ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகிய 6 இந்திய மையங்களில் இருந்து கட்டுப்பாடற்ற ரீதியில் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இலங்கை விமான சேவைகளுக்கு திறந்த வான் உடன்படிக்கைகளை இலங்கை செய்து கொண்டுள்ளது.

அதேநேரம் சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்தில் தரித்து நிற்பது மிகவும் குறைவு. எந்த நேரமும் பயணம் செய்வதையே அவர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதற்கு அருகில் உள்ள இடங்களுக்கும் செல்வதுண்டு. அவர்களில் பலர் இலங்கைக்கும் வர விரும்பினார்கள். எனவே இந்தியாவுடன் இணைந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கும் வரவழைக்கும் முயற்சிகளை இலங்கை சுற்றுலா சபை மேற்கொள்ளவுள்ளது. அதே நேரம் தாய்லாந்துடனும் இதேபோன்ற உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் நோக்கமும் உள்ளது. 

Comments