என் பிள்ளை பாஸாகிட்டான்! | தினகரன் வாரமஞ்சரி

என் பிள்ளை பாஸாகிட்டான்!

ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறெல்லாம் வந்து இப்ப வீடுகள்ல கொண்டாட்டங்கள் நடக்கும். சில வீடுகள்ல மங்களமும் நடக்கும். றிசல்ட்டைப் பார்த்தால், எல்லாம் வெளிமாவட்ட பிள்ளைகள்தான் திறமா பாஸ் பண்ணி இருக்கிறார்கள். கொழும்பு மாவட்டத்தில்கூட எவரும் இல்லை. அதுவும் முதன்மையாக வந்திருக்கிற 16 பிள்ளைகள்ல தமிழ் மொழி மூலம் எவருமே கிடையாது!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில பிள்ளைகள விட அம்மாமார்தான் கூடுதல் கவனம் எடுத்துப் படிப்பாங்க; படிக்கச் சொல்லுவாங்க. தங்கடப் பிள்ளை பாஸ் பண்ணாம விட்டிட்டால், அம்மாவுக்குத்தான் வெட்கம்! ஸ்கூல் போகும்போது எல்லாரும் கேட்பாங்க; சொந்தக் காரங்கள் கேட்டுத் துளைத்து எடுத்திடுவாங்க. அதனாலை, பிள்ளையை எப்பிடியாச்சும் பாஸ் பண்ண வைக்கணும் என்றதிலை அம்மா உறுதியாத்தான் இருப்பா! அப்பா அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு அதுக்ெகல்லாம் ஏது நேரம்? அவருக்குத் தெரியும் பாஸ் பண்ணினாலும், பண்ணாட்டாலும் அது எங்கட பிள்ளை. என்ர பிள்ளை. என்னைப்போலத்தானே படிக்கும் என்று! அம்மா இதெல்லாம் தெரியாமல் கிடந்து மினக் ெகடுவா!அப்பத்தானே என் பிள்ளை பாஸாகிட்டான் என்று நாளைக்கு எல்லோரிடமும் சொல்லி மகிழ முடியும்!

கொழும்பிலை பார்த்தீங்க எண்டால், பிள்ளைக்கு மூன்றாம் வகுப்பிலை இருந்தே புலமைப்பரிசில் பரீட்சைக்கான படிப்புதான். மூன்றாம் வகுப்பு படிப்பெல்லாம் படிச்சு நேரத்தை வீணாக்க அம்மா விடமாட்டார். டியூசனுக்கும் போக வேணும். அப்பிடி படிச்ச பிள்ளைகளும் பெரிசா பாஸ் பண்ணியதா தெரியேல்ல.

முதல் மூண்டு இடங்கள கம்பகா பிள்ளையள்தான் எடுத்திருக்கு. இதிலிருந்து கிராமம் மெல்ல மெல்ல நகர் இகத்துள் சங்கமித்து வருகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நகரிகம் வெறும் நாகரிகத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்ெகாண்டிருக்கின்றது. வசதிவாய்ப்புகள் அதிகம். பெற்றோர்ச் சொல் கேளாத தன்மை. பெற்றோரும் பிள்ளைகள்ட விருப்பத்தைப் பார்க்காமல் தங்கட விருப்பத்திற்குப் பிள்ளைகள மாற்றப்பார்க்கிறது. இப்படி பல பிரச்சினைகள் இந்த நரகத்திற்குள்ள கிடக்குது. ஆனால், ஒண்டு பிள்ளைகள் பிள்ளைகளாகத்தான் இருக்குது.

பெற்றாரைவிடப் பிள்ளைகள் நல்ல அறிவோடத்தான் இருக்குது. அதுவும் கிராமத்துப் பிள்ளைகள். அதற்கு ஒரு சின்ன உதாரணம். கடந்த முதலாந்திகதி சிறுவர் தினத்தண்டைக்கு ஹொரவப்பொத்தானை பொலிசுக்கு ஒரு பிள்ளை கடிதம் எழுதியிருக்கு.

அன்புள்ள பொலிஸ் மாமா,

நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருக்கிறேன். என்ர அம்மாவும் அப்பாவும் கூலி வேலைதான் செய்கிறார்கள். எங்களுக்குச் சரியான ஒரு வீடும் இல்லை. எனக்குச் சைக்கிள் ஓட்ட விருப்பம். ஆனால், எனக்குத்தான் சைக்கிள் இல்லையே!

கடிதத்தைப் படித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, உடனே இந்தப் பிள்ளையைத் தேடிக்கண்டுபிடிக்கும்படி சிறுவர் பிரிவு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தாராம்.அவங்க தேடு தேடெனத் தேடிப் பிள்ளையின் வீட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உண்மையில் அந்தப் பிள்ளையின் பெற்றோர் கூலி வேலைதான் செய்கிறார்கள். வீட்டின் நிலைமையும் பிள்ளை சொன்ன மாதிரியே இருந்திருக்கு. இந்த விசயத்தைப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சொன்னதும், அவர் ஏனைய உத்தியோகத்தர்ககைளயும் அழைத்துக்ெகாண்டு பிள்ளையின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சும்மா அல்ல, ஓர் அழகான சைக்கிளுடன். அந்தப் பிள்ளை துள்ளிக்குதித்து மகிழ்ந்திருக்கிறாள். அத்தோடு, பொலிஸ் நிலையத்தின் சார்பில் வீட்டை நிர்மாணித்துத் தருவதாகவும் உறுதி வழங்கியிருக்கிறார்கள். இந்தத் தகவலைப் பார்த்ததும் அந்தப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அவரது உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சபாஷ் போடவும் நன்றி சொல்லவும் தோன்றுகிறது இல்லையா? எனக்கு அப்படி தோன்றியதால்தான் உங்களுக்குச் சொல்கிறேன். இப்படி எத்தனையோ குழந்தைகள் தங்கள் ஏக்கங்களை மனத்துள் புதைத்து வைத்துக்ெகாண்டுதான் இந்தப் பாழாய்ப்போன பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். உண்மையில் இந்தப் பரீட்சை ஒரு வேண்டாத விபரீதமானது என்கிறார் ஓர் ஆசிரிய நண்பர்.

கொழும்பில் ஒரு சிங்களப் பாடசாலையில் ஒரு மாணவன் 161 புள்ளிகளைப் பெற்றும் சித்தியடையவில்லை என்று சொல்கிறார். அப்படியெனில் அவர் பெற்றது 80 புள்ளிகளுக்கும் அதிகம் அல்லவா! பின் ஏன் சித்திபெறவில்லை? எனவே, இந்தப் பரீட்சை ஒரு மோசமான வழிகாட்டலுக்கு உதாரணமாக இருக்கிறது என்பது ஆசிரிய நண்பரின் ஆதங்கம்.

மற்றொன்று பாருங்கள், இப்போது இந்தப் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பாராட்டு நடக்கும். ஒவ்வொரு பாடசாலையிலும் இதுக்குத் தனியாக நிகழ்ச்சி நடக்கும். சித்தி பெறாத பிள்ளைகள் கவலைகொள்ள மாட்டார்களா?

அதனாலதான் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைத் தயவுசெய்து திட்டாதீர்கள் என்று சிறுவர் உளநல மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பரீட்சைப் பெறுபேறு மாத்திரம் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை. தரம் ஐந்தில் கோட்டை விட்டவர்கள், உயர் கல்வியில் சிறந்து விளங்கி இலக்கை அடைந்திருக்கிறார்கள்.

எனவே, பிஞ்சுகளின் உள்ளத்தில் கீறல் ஏற்படுத்தாருக்க அவர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். சித்தியடைந்த, சித்தியடையாத பிள்ளைகள் என்று பாராமல் அனைவரையும் ஒன்றாகப் பாராட்டுவோம்! 

Comments