புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, 13+ அதிகாரங்கள் | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, 13+ அதிகாரங்கள்

ஜயம்பதி விக்ரமரத்ன எம்.பி

ஷம்ஸ் பாஹிம்

 

புதிய அரசியலமைப்பினூடாக சமஷ்டி மற்றும் 13 பிளஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐ. தே. க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

இவற்றை நேரடியாக இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டால் தென்பகுதி இனவாத குழுக்களுக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும் என்று குறிப்பிட்ட அவர், சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தை நேரடியாக பயன்படுத்தினால் தெற்கில் அதனை ஏற்க மாட்டார்கள். மாகாணங்களின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்துவதானது சுயநிர்ணய உரிமைக்கே சமனாக அமைகின்றது என்றும் கூறினார்.

புதிய யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை போன்று நீண்ட கால கோரிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து வினவிய ​போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒற்றையாட்சி என்பதை விட ஒருமித்த நாடு என்ற சொற்பிரயோகமே பொருத்தமானது என்று தெரிவித்த அவர்,இதனை விட உகந்த மாற்று சொல் முன்வைக்கப்படுமானால் அது குறித்து பரிசீலிக்கத் தயார் எனவும் அவர் கூறினார். மேலும் தெரிவித்த அவர்,

13ஆவது திருத்தச்சட்டத்தில் இருப்பதை விட கூடுதலாக மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்தப்படும். நிச்சயமாக அது 13 பிளஸ் தான். தேசியகொள்கைகளை உருவாக்குகின்றபோது மாகாணங்கள் தொடர்புபடவேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களின் பிரகாரம் சுற்றறிக்கைகள் ஊடாக எதிர்காலத்தில் தேசிய கொள்கைகளை உருவாக்க முடியாது.

அதிகாரங்கள் பகிர்வு தொடர்பாக பாராளுமன்றம் சட்டத்தினை இயற்றினால் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாகாணசபைகளுக்கே காணப்படும். இரண்டாம் சபைக்கும் மாகாண சபைகளில் இருந்து தலா 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி,சுயநிர்ணய உரிமை போன்ற சொற்பிரயோகங்களில் தொங்கியிருப்பது உகந்ததல்ல. சுயநிர்ணய உரிமை என்ற சொற்பத்தினை நேரடியாக பயன்படுத்தினால் தெற்கில் அதனை ஏற்க மாட்டார்கள்.

மாகாணங்களின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்துவதானது சுயநிர்ண உரிமைக்கே சமனாக அமைகின்றது. இதனைவிடுத்து நேரடியாக சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தினை பயன்படுத்தினால் பிரிந்து சென்று வேறு இராஜ்ஜியம் உருவாகப்போகின்ற கருத்தையே தோற்றுவிக்கும்.

சிங்களத்தில் 'ஏகிய ராஜ்ய' என்ற சொற்பதத்தினை ஒற்றை ஆட்சி என்று தமிழ்படுத்துவதால் அதன் உண்மையான அர்த்தம் பிழைக்கும். 'ஏகிய ராஜ்ய' என்ற சொல் ஒருமித்த நாடு என்ற அர்தத்தையே குறிக்கிறது. ஒற்றை ஆட்சி என்பது நாட்டையல்ல அரசை தான் குறிக்கிறது. ஒற்றை ஆட்சி என்பதில் ஒரு நாடு என்ற பொருள் கொள்ள முடியாது. அதனாலே தான் ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன் அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக பாராளுமன்றத்தாலும் இலங்கை மக்களாலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது பிரிந்து செல்லுதலை தடுக்கும் வகையிலேயே விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Comments