'மேட் இன் சைனா என்றால் வேண்டாம்...' | தினகரன் வாரமஞ்சரி

'மேட் இன் சைனா என்றால் வேண்டாம்...'

செஞ்சீன  நினைவுகள்- 1

லக்ஷ்மி பரசுராமன்

இலங்கையைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே 'சீன தயாரிப்பு' (made in China) என்ற பதம் நம் மக்களிடையே மிகவும் பிரபல்யமானது. ஆனால் இப்போது இலங்கையில் வாழும் சிறு பிள்ளைகளுக்குக்கூட சீனாவைப் பற்றி நன்கு தெரிகிறது என்றால் அதற்கு காரணம் அந்நாடு இலங்கையில் செலுத்தி வரும் செல்வாக்கேயாகும்.

அறுபதுகளில் சீன, ஹொங்கொங் பொருட்கள் இலங்கையில் கிடைத்தன.விலை மலிவு என்றாலும் வாடிக்கையாளர்கள் தரம் நன்றாக இருக்காது என்பதற்காக வாங்க யோசிப்பார்கள். சீனப் பொருட்கள் என்றால் மலிவானது என்ற ஒரு கருத்தியல் நம்மிடம் ஏற்பட்டு நிலைத்திருந்தது. அது மாவோவின் காலம். மேற்குலகினால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், தீவிர கம்யூனிஸ சித்தாந்தங்களின் பிரயோகங்களினாலும் சீனா அல்லாடிக் கொண்டிருந்த காலமாக 50, 60களைச் சொல்லலாம். அமெரிக்கா சீனாவை ஓரங்கட்டியதால் ரஷ்யாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சீனாவை அரவணைத்தன.எனினும் செஞ்சீனா உயிர்த்துக் கொண்டிருந்தது.தன்னால் முடிந்த எல்லா வழிகளாலும் எழும்பி நிற்க முனைந்து கொண்டிருந்தது.இந்தியாவை சண்டைக்கு இழுத்து தோல்வியடையச் செய்தது. உள்நாட்டில் பஞ்ச நிலைமை காணப்பட்டபோதிலும் இலங்கையுடன் அரிசி - இறப்பர் ஒப்பந்தம் செய்து கொண்டு நமது றப்பரை வாங்கி பதிலாக அரிசியை வழங்கியது.அக்காலத்தில் நமக்கோ அரிசி பஞ்சம்!

அதெல்லாம் ஒரு காலமே.மாவோவின் ஆட்சி அவரது மரணத்தோடு முடிவுக்கு வர, புதிய சீனா பொருளாதார சீர்திருத்தத்துடன் மலர்ந்தது.அப்போது ஆரம்பித்த சீன மறுமலர்ச்சி, அது தந்த பொருளாதார உயர்ச்சி இன்றைக்கு அமெரிக்காவை பொருளாதார போட்டியில் சவாலுக்கு இழுக்கும் அளவுக்கு இந்நாட்டை முன்னேற்றியிருக்கிறது. இதனால்தான்,

எமது நாட்டில் தற்போது வானுயர்ந்த கட்டங்கள், மண்டபங்கள், நெடுஞ்சாலைகள்,விமானநிலையம், துறைமுகம், துறைமுக நகரம், கோபுரங்கள் மற்றும் ஹோட்டல்களென எங்கு பார்த்தாலும் சீன நிர்மாணத்தின் கைவண்ணங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இலங்கை - சீன இராஜதந்திர உறவு 60 வருடங்களை எட்டியிருக்கிறது. இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவு நிதியுதவியுடன் மட்டுமன்றி கல்வி, கலாசாரம் என பல்வேறு துறைகளிலும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது.

சீனா குறுகிய காலத்தில் பாரிய அபிவிருத்தியை எட்டிய நாடாகும்.இதன் அபிவிருத்தியை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டும் நோக்கில் வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள் வருடாந்தம் ஆயிரக்கணக்கான வெளி நாட்டவர்களுக்கு இலவசமான சீன சுற்றுலாவை வழங்குகின்றன.

அந்தவகையில் இலங்கையிலுள்ள சீனத்தூதரகமும் வருடாந்தம் நூற்றுக்கணக்கான இலங்கையர்களுக்கு இலவசமாக சீனா செல்வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. அரசாங்க உத்தியோகத்தர்கள், மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்களென ஒவ்வொரு வருடமும் கட்டம் கட்டமாக பலருக்கு இந்த வாய்ப்பு கிட்டுகிறது.

வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஊடகவியலாளர்கள் சீனா சென்று வருகின்றனர். ஆனால் இம்முறை தனியே தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் சீனா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் தினகரன் பத்திரிகை சார்பாக என் பெயர் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் நானும் சீனா பார்க்கப் போகின்றேன் என்றதும் எனக்கே என்னை நம்பமுடியாமல் தான் இருந்தது. ஆனாலும் உண்மையைச் சொல்வதாக இருந்தால் அட, சீனா தானே! என்பதால் பெரியதொரு அங்கலாய்ப்பு எனக்குள் இருக்கவில்லை. விசா மற்றும் விமானப் பயணச்சீட்டு என் கைகளில் கிடைக்கும் வரை நான் இந்தப் பயணத்துக்கு ஆயத்தமாகியிருக்கவில்லை.

அனைத்து விடயங்களும் நிச்சயமானதன் பின்னர் அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வ அனுமதியுடன் ஒருவாறாக நானும் சீனாவுக்குச் செல்ல தயாரானேன்.

சீனாவில் புழக்கத்திலுள்ள நாணயம் யுவான். எனவே முதலில் இலங்கை ரூபாவை யுவானுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கினேன்.

அன்றைய தினம் 23 இலங்கை ரூபாய்கள் ஒரு யுவானுக்கும் 155 இலங்கை ரூபாய் ஒரு டொலருக்கும் விற்னைசெய்யப்பட்டன.

ஏற்கனவே அங்கு சென்று வந்த நண்பர்கள் நமது நாட்டிலேயே இலங்கை ரூபாவை யுவானாக மாற்றிச் செல்லுமாறும் சீனாவில் மாற்றுவதனைவிட அதுவே மிகவும் இலாபகரமான முறையென்றும் என்னிடம் கூறியிருந்தார்கள். அதன்படி நான் எனது தேவைக்கு ஏற்ப சில யுவான்களையும் சில டொலர்களையும் மாற்றி வைத்துக் கொண்டேன்.

எனது ஒரு வார கால பயணம் செப்டம்பர் 19 ஆம் திகதியன்று ஆரம்பமானது. அங்கே தங்கியிருக்கும் ஐந்து நாட்களுக்குள் நாம் செங்டு, பெய்ஜிங் மற்றும் டியான்ஜியேன் ஆகிய நகரங்களை பார்வையிடவுள்ளதாகவும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் எமக்கு அறிவுறுத்தியது.

தமிழ் ஊடகவியளாலர்கள் குழுவில் நாங்கள் எல்லாமாக பத்துப் பேர்.அனைத்து பிரபல தமிழ் ஊடகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இதில் இருவர் தேசிய தமிழ் தொலைக்காட்சி சேவைகளைச் சேர்ந்தவர்கள்.ஏனையோர் பத்திரிகையாளர்கள். அதில் இரண்டு பத்திரிகையாளர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள். பத்திரிகைத் துறையில் நீண்டகால அனுபவமும் ஆளுமையும் கொண்ட ஒரு மூத்த ஊடகவியலாளர் தலைமையில் எமது குழு சீனா செல்ல ஆயத்தமானது.

எங்களுக்கு ஒருவரை ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாத போதும் இந்த ஒருவார காலத்துக்குள் நாங்கள் மிகவும் நெருக்கமானதொரு குழுவாகவே மாறியிருந்தோம்.மேலும் சீனாவுக்கு பயணமான தமிழ் ஊடகவியலாளர் குழுவில் நான் மட்டுமே ஒரே பெண்! எனினும் அனைவரும் என்னை அவர்களின் உற்ற நண்பியாகவும் சகோதரியாகவும் நடத்தி எனக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

சுமார் ஒரு வார காலத்துக்கு நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்பதனை

எனது இரண்டு பிள்ளைகளுக்கும் பக்குவமாக எடுத்துக்கூறினேன். சற்றும்

தயங்காமல் தாராளமாக சம்மதம் வழங்கினார்கள். அப்படியே அவர்களுக்கு சீனாவிலிருந்து என்ன வாங்கி வரவேண்டுமென நான் கேட்டது தான் தாமதம் ஆறே வயதான எனது குட்டி மகன் மேட் இன் சைனா வேலையில்லை அம்மா.உடனேயே உடைந்து விடும். அங்கேயுள்ள கடைகளில் மேட் இன் யு.கே அல்லது மேட் இன் அமெரிக்கா என எழுதியிருந்தால் மட்டும் வாங்கிட்டு வாங்க என்றான். ஏற்கனவே மேட் இன் சைனா விளையாட்டுப் பொருட்கள் உடைந்ததாலோ என்னவோ அவனுக்குள் ஒரு கசப்பு உணர்வு!

ஆனாலும் இந்த சிறு வயதில் அவன் நாடுகள் மற்றும் அதன் உற்பத்தி பற்றி

கொண்டிருக்கும் எண்ணப்பாட்டை நினைக்கும்போது எனக்கே வியப்பாகத் தான் இருந்தது. மகன் மட்டும் என்ன நானும் புகைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே சீனாவைப் பார்த்திருந்ததால் சீனா எப்படியிருக்கப் போகின்றதோ என்ற ஆச்சரியக்குறியுடனேயே எனது பயணத்தை ஆரம்பித்தேன்.

(தொடரும்) 

Comments