வக்கிரங்கள் மூலதனமாகிவிட்டால் | தினகரன் வாரமஞ்சரி

வக்கிரங்கள் மூலதனமாகிவிட்டால்

 புன்னகை வேந்தன்,
 மருதமுனை

 மியான்மார் தேசத்தின் ரோஹிங்யா முஸ்லிம்கள்

மிலேச்சத்தனங்களினால் துயரங்களே கொண்டுள்ளார்

வியாகுலம் வெறியாட்டம் உச்சநிலை கொண்டதனால்

நியாயங்கள் நேர்மையெல்லாம் வறண்டுதான் போனதுவே

நோபல் பரிசு பெற்ற ஆங்காங் சூயி அம்மையாரும்

சாபக் கேட்டுக்கே ஆளாகி வருகின்றார்

பிரபஞ்சப் பெரும்பிரப்பில் கண்டனங்கள் ஏராளம்

சுரந்து வரும் கொடுமைகளும் கோரங்களும் ஏராளம்

பச்சைக் குழந்தைகள் நோயாளர் முதியோர்கள்

சச்சரவு, அராஜகங்கள் மேலோங்கி வருவதனால்

நிம்மதியிழந்தவராய் முடங்கிக் கிடக்கின்றார்

செம்மதியாளரைத்தான் காணவே முடியவில்லை

நோபல் பரிசு பெற்ற அம்மையரும் இதையெல்லாம்

நோக்காது கண்மூடி மௌனித்துப் போனாரே!

கோபமும் கொந்தளிப்பும் குவலயத்தில் பெருக் கெடுத்து

நோபல் பரிசு தனை மீளப் பெறச் சொல்லுகின்றார்

கடல் வழிமூலமாகப் புகலிடம் தேடிவரும்

கவலை கொண்ட மக்களெல்லாம் ஆழிப்பேரலையின்

இடர்தனில் மாண்டதையும் மறக்கத்தான் முடிந்திடுமோ?

இதயங்கள் இருட்டானால் இம்சைகளே நீடிக்கும்

வங்காய தேசமும்தான் வாரியணைத்தெடுக்காமல்

வெந்து நொந்த அகதிகளை விரட்டியடிக்கின்றார்

பொங்கி வரும் வேதனைக்குத் தீர்வு இல்லையானால்

பேரழிவும் இழப்புகளும் இமாலாயமாய் ஆகிடுமே

துருக்கி தேசத்தின் முதன்மைப் பெண்மணியாம்

தொடர் கதையாய்த தொடர்ந்து வரும் இடர்நிலையைக் கண்டதனால்

செருக்குடனே செய்து வரும் மியான்மாரின் துரோகத்தைச்

சீறிச் சினந்தபடி துள்ளி எழுந்தோடி வந்தார்

மானிட நேயத்தை இதயத்தில் சுமந்தபடி

மக்களை அரவணைத்துக் கண்ணீர் விட்டழுதாரே!

மாணிக்கப் புதையலென நிவாரண உதவிகளை

மலர்ச்சியான முகத்தோடு வாரித்தான் வழங்கினாரே!

தார்மீகம் காருண்யப் பண்புகளால் புத்தபிரான்

பார்மீதில் ஆன்மிகம் ஓங்கிடவே பாடுபட்டார்

நேர்மையும் நியாயங்களும் வேரூன்றிப் படர்ந்திடவே

நாவினிக்கும் வார்த்தைகளால் போதனையும் செய்திட்டார்

புத்தபிரான் கொண்டுவந்த பௌத்தமதம் மியான்மாரில்

புத்தி கெட்ட ஆட்சியினால் திசை மாறிப் போகின்றது

வக்கிரங்கள் வன்முறைகள் மூலதனமாகிவிட்டால்

வையகத்தில் அவலட்சணங்கள் மேலோங்கும் மெய்தானே! 

Comments