வேதாளம் இன்னும் முருங்கையில்தான் | தினகரன் வாரமஞ்சரி

வேதாளம் இன்னும் முருங்கையில்தான்

கருணாகரன்

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன்பான இடைக்கால அறிக்கை பலத்த சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அரசியல் உரிமைகளுக்கும் இடமளிக்கப்படவில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்து. இதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறது. தமிழ் மக்கள் பேரவையில் அபிப்பிராயமும் இதுதான். கூட்டமைப்பிற்குள்ளும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதைக்குறித்து எதிர் முழக்கமே செய்து வருகிறார்.

முஸ்லிம்களிடத்திலும் இதைக் குறித்துத் திருப்திகரமான உணர்வு காணப்படவில்லை. வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்தும் முஸ்லிகளின் மத்தியில் இரு நிலைப்பட்ட கருத்துகள் உண்டு. ஒன்று வடக்குக் கிழக்கு இணைப்பை நிராகரிக்கின்ற போக்கு. அடுத்தது, கடந்த காலக் கசப்பான அனுபவங்களின் வழியாக இதைப் பார்க்காமல், எதிர்கால இருப்பின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைப்பு விடயங்களைப் பொறுப்போடு அணுக வேண்டும். அதற்கான சட்டவரைபுகளையும் அரசியல் உத்தரவாதங்களையும் பெற்றுக் கொண்டு வடக்குக் கிழக்கை இணைப்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற போக்கு. அரசாங்கத்தின் இணைப்பில் இருக்கும் முஸ்லிம் கட்சிகள் இவற்றைக்குறித்து எதையும் பேசப்போவதில்லை. அவை அங்காலும் இங்காலும் என்ற கலங்கலான அல்லது இழுபட்ட ஒரு நிலையைத் தந்திரோபாயமாகப் பின்பற்றிக் காலத்தைக் கடத்தி விடவே முயற்சிக்கின்றன.

மனோ கணேசனும் இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நம்பிக்கையீனத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஏனைய மலையகக் கட்சிகளுக்கும் இதில் பெரிய உடன்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், சிலர் இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான எதிர்மறையான கருத்துகளையும் குழப்பங்களையும் மறுக்கின்றனர். “இது ஒரு நல்வாய்ப்பு” என்பது இவர்களுடைய நம்பிக்கை. “இதை விட அதிகமாகச் சிங்களத்தரப்பிலிருந்து எதிர்பார்க்க முடியாது” என்பது இவர்களின் வாதம். “அப்படியென்றால், அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன?” என்பது இவர்களின் கேள்வி. “அப்படி அதிகமாக எதிர்ப்பார்ப்பதென்பது தேவையாகவும் நியாயமாகவும் இருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியப்படாமல், வீணான கால விரயத்தையே உண்டாக்குவதாக அமையும். மட்டுமல்ல, அது மேலும் கீழிறக்கப் படிகளைக் கொண்ட ஒரு தீர்வையும் அதிகாரத்தையுமே பெறவேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும்” எனவும் எச்சரிக்கின்றனர். “இதனால் இதற்கிடையிலான காலப்பகுதி, தமிழ் மக்களுடைய இருப்புக்கும் வளர்ச்சிக்கும் பாதகமான விளைவுகளையே உண்டாக்கும். ஆகவே இதை எதிர்ப்பதால் பாதகமான விளைவுகளே ஏற்படும்” என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இதற்கு இரண்டு காரணங்களை இவர்கள் முன்வைக்கின்றனர். ஒன்று, இலங்கையின் அரசியல் உணர்வும் ஆட்சிக் கட்டமைப்பும் இனவாத அரண்களுக்குள்ளேயே உள்ளமைந்துள்ளன. ஆட்சியானது சிங்கள பௌத்த முதன்மைவாதம், முழுமைவாதம் என்பதற்குள்ளேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மறுவளத்தில் இதை உடைக்கக்கூடிய அக – புற அரசியற் சூழல் இலங்கையில் எந்தச் சக்திகளிடத்திலும் தற்போது காணப்படவில்லை. தமிழ்த்தரப்பிலோ ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தேசிய இனங்களிடத்திலோ ஆளுமையும் தீர்க்கதரிசனமும் உறுதிப்பாடும் அர்ப்பணிப்புமுள்ள அரசியற் தலைமைத்துவமில்லாத நிலையே இன்றுள்ளது. இந்த நிலையில் விருப்பத்துக்குரிய – தேவைக்குரிய அரசியலமைப்பைக் குறித்து உறுதியான விவாதங்களை எப்படி எழுப்புவது? என்பது.

இரண்டாவது, இலங்கை அரசாங்கத்தை தீர்வை நோக்கியும் அதற்கான அரசியலமைப்பை நோக்கியும் நிர்ப்பந்திக்கக்கூடிய – அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய சர்வதேச அரசியற் சூழல் இன்றில்லை.

எதிர்காலத்திலும் அப்படியான ஒன்று உருவாகக்கூடிய நிலை காணப்படவில்லை என்பது. அதாவது, இலங்கையின் இன ஒடுக்குமுறையைப் பற்றி நன்றாகவே அறிந்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலை தளர்வடைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக இந்தியா கூடத் தான் உருவாக்கிய மாகாணசபை முறைமையை இலங்கை அரசாங்கம் நலிவடையச் செய்வதையிட்டே அக்கறை கொள்ளவில்லை. பதிலாக இதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இலங்கையுடன் இனிப்பாக நட்புறவு கொள்வதையிட்டே அது அக்கறைப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஸ காலத்தில் காட்டப்பட்ட எதிர்ப்புத் தோற்றப்பாடுகளைக் கூட இன்றைய உலகம் கைவிட்டு விட்டது. உண்மையில் போர் முடிந்த கையோடு, யுத்தப்பாதிப்பைச் சந்தித்த சமூகத்தினரை ஆற்றுப்படுத்தவும் அவர்களுக்கான நியாயமாகவும் முறையான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வதேச சமூகம் நிர்ப்பந்தித்திருக்க வேணும். ஆனால், அதைச் சர்வதேச சமூகம் செய்யவேயில்லை.

பதிலாக இலங்கை அரசாங்கத்தைத் தமக்கிசைவாக்குவதற்கான நோக்கிலேயே அவை செயற்பட்டன. அதற்கான பொறிமுறைகளையும் அழுத்தத்தையும் நெருக்கடிகளையுமே அவை இலங்கைக்குக் கொடுத்தன. அதன் பயன் கிடைத்தவுடன் அதைக் கை விட்டு விட்டன. அல்லது பிடியைத் தளர்த்தி விட்டன. எனவே இப்படியான மண் குதிரைகளை நம்பி எப்படிப் பயணத்தைத் தொடர முடியும்?” என்பது இவர்களுடைய அழுத்தமான கேள்வி.

ஆகவே இன்றைய இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தற்போது முன்வைக்கப்படும் தீர்வினை முதற்கட்டமாக – முதற்படியாகக் கொண்டு, இதை ஆதரிக்க வேண்டும் - இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தத் தரப்பினால் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இது ஒரு பலவீனமான நிலைப்பாடு என்பதே இந்தப் பத்தியாளருடைய கருத்து. தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையில் உருப்படியான விடயங்கள் என்று கூறக்கூடியவை எதுவுமே இல்லை.

குறைந்த பட்சம் இலங்கை இந்திய உடன்படிக்கையில் எட்டப்பட்ட மாகாணசபைக்கான அதிகாரங்களையும் அதை நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தரவாதங்களும் தாராள மனதோடு முன்வைக்கப்படவில்லை. இதற்கப்பால் கோரப்படும் ஏனைய விடயங்களைக் குறித்த தெளிவான வரைபடங்களும் காணப்படவில்லை. இந்த நிலையிலேயே இதைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு போவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏகப்பட்ட பிம்ப எதிர்ப்புகளை அரசாங்கமும் ஏனைய சிங்களத் தரப்புகளும் காட்டிக் கொண்டிருக்கின்றன. இது அருவருப்பான ஒரு செயல்.

கோரப்படுகின்ற அதிகாரங்களைக் குறித்த வரைபுகளை முன்வைக்கும்போது அதையிட்ட எதிர்ப்புகள் வந்தால், அதை ஒருவகையில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அப்படி எதுவுமே நிகாழாதபோது காட்டப்படும் எதிர்ப்பென்பது, இந்த நாட்டின் பன்மைத்தன்மைக்கும் ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் மாண்புக்கும் அரசாட்சியின் அறத்துக்கும் விடப்படும் சவாலாகவும் இழைக்கப்படும் அநீதியாகவும் இழிவாகவுமே கொள்ள வேண்டும்.

இங்கே ஒரு சுவாரசியமான வேடிக்கையும் முரண் நகையும் என்னவென்றால், இவ்வாறு அநீதியை இழைக்கும் மனதைக் கொண்டிருப்போர், தமக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை எதிர்பார்த்திருப்பதாகும். இந்த அறிவீனத்தை என்னவென்று சொல்வது?

இதேவேளை, இந்த இடைக்கால அறிக்கையையும் வரையப்பட்டிருக்கும் புதிய அரசியல் யாப்பையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மென்னிலை நிபந்தனையுடன் அங்கீகரிப்பதற்குத் தயாராக உள்ளது. இதைக்குறித்து அதன் தலைவர் சம்பந்தன் எழுத்துமூல உத்தரவாதத்தின் கீழ் ஒப்பமிட்டிருக்கிறார். இது ஒருவகையில் வரலாற்று ஆவணமாகவே கொள்ளப்படக்கூடிய நிலையும் உண்டு.

குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான தமது ஒன்பது நியாயப்பாடுகளை - நிலைப்பாடுகளை இந்த ஆவணத்தில் கூட்டமைப்புப் பிரகடனப்படுத்தியுள்ளது.

(1) மாநிலங்களின் ஒன்றியமாக, சமஷ்டி அரசொன்றாகவே இலங்கை இருக்க வேண்டும் .

(2) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரே மாநிலமாக அமைய வேண்டும்.

(3) இலங்கை ஒரு மத சார்பற்ற அரசாகவே இருக்க வேண்டும்.

(4) தமக்கான நிதியைத் தாமே தேடிக்கொள்ளும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

(5) மாநிலத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக்கூடாது.

ஆகியவை உள்ளிட்ட மேலும் மூன்று முக்கியத்துவமற்ற விடயங்களையும் தமது நிலைப்பாடாக சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, குறித்த இடைக்கால அறிக்கையின் மூலக் கோட்பாட்டில் எந்த எந்த விடயங்களோடு தமிழர்கள் இணங்க மாட்டார்களோ, அந்த அந்த விடயங்கள் உட்பட எட்டு விடயங்களுக்கான தமது மாற்று நிலைப்பாடாக இந்தப் பிரகடனங்களைக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு பிரகடனப்படுத்தியதன் பின்னர், ஒன்பதாவதாக ஒரு நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலே, “இடைக்கால அறிக்கையின் மூலக் கோட்பாடுகளுக்குப் பதிலாக இவ்வாறான எட்டு நிலைப்பாடுகளையும் கொண்டுள்ள போதிலும், இடைக்கால அறிக்கையின் அந்த மூலக் கோட்பாடுகளோடு இரண்டு பெரிய கட்சிகளும் (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்) உடன்பட்டு வருமாக இருந்தால், மேற்கூறப்பட்டுள்ள தமது எட்டு நிலைப்பாடுகளையும் கைவிட்டுவிட்டு, இடைக்கால அறிக்கையின் மூலக் கோட்பட்டோடு தாமும் இணங்கிப்போவதைப் பரிசீலிக்கத் தயாராக” இருப்பதாக.

இது கடந்த எழுபது ஆண்டு கால தமிழ் அரசியல் முன்னெடுப்பு வரலாற்றில், தமிழர்களின் அதிகாரபூர்வப் பிரதிநிதிகளால், பகிரங்கமாக வழங்கப்பட்டுள்ள அதிமுக்கியத்துவம் மிக்க ஒரு வரலாற்று ஒப்புதல் ஆகும் என இதை விமர்சிப்போர் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலைமை என்பது நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பகத்தன்மையையும் அதற்கு ஆதரவளித்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களிடம் கேள்விக்குள்ளாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பு படிப்படியாக இறக்கம் கண்டே வருகிறது. கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையின் கதியும் அப்படித்தான். ஆகவே புதிய அரசியலமைப்பு, அரசியல் தீர்வு போன்றவற்றின் மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளது. ஆனால், இதை எதிர்த்துக் களத்தில் நின்று நெருக்கடிகளைக் கொடுக்கக் கூடிய அளவில் போராடுவதற்கு உருப்படியான சக்திகள் எதுவுமே இல்லை.

ஆகவே இப்போதுள்ள சூழலானது அரசியல் அநாதரவான நிலையையே கொண்டுள்ளது. இதற்குக் காரணம் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சிந்தனைக் குறைபாடுகளும் அதன் விளைவான அரசியல் தெரிவுகளும் அவற்றின் விளைவான தலைமைகளுமேயாகும். இதில் அரசியற் கட்சிகளைக் குற்றம் சாட்டுவதை விட, அதன் தலைமைகளைக் குறை கூறுவதை விட, ஒவ்வொருவரும் தங்கள் மீதே முதலில் விமர்சனங்களை முன்வைக்க வேணும். குற்றங்களைக் கண்டு களைய முன்வர வேண்டும்.

கட்சி நலன்களுக்கு அப்பால் சிந்திக்கக்கூடிய – உறுதியாக முடிவெடுக்கக்கூடிய, மக்கள் மீதான விசுவாசமும் நாட்டைக்குறித்த தீர்க்கதரிசனப் பார்வையும் உள்ள தலைமைத்துவமே இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு உதவும். அது இல்லாதபோது எல்லாமே வெறும் கானல்நீர்தான். எனவே இதுவும் ஒரு கால நீடிப்பு, கவனத்திசை திருப்பல் நடவடிக்கையே. 

Comments