தெளிவு | தினகரன் வாரமஞ்சரி

தெளிவு

- கலாபூஷணம் கறுவாக்கேணி முத்துமாதவன் 

“என்டீ...” மாலைக்குள்ள... கண்ணைக் கசக்கிட்டு நிற்கிறா.. கொப்பன் வார நேரமெலுவா... வந்து நிண்டு கொம்பப் போறாரு... போ... போ... ஊட்டக் கூட்டுடீ...

வாசல்ல... நிண்டு... வெப்பிசாரப்பட்டு... குலுங்கிய கண்களிலிருந்து ஊத்துப்பட்ட கண்ணீரை தாவணித்துண்டால் கசக்கித் துடைத்த மகளைப் பார்த்து அன்னம்மா கத்தினாள்.

கண்ணீரின் கசிவும் மன எரிவும்... கண்ணம்மா என்னும் கட்டழகியை கலங்கவைத்த போது தான் தாயின் அதட்டல் எரிச்சலூட்டிற்று...

எரிச்சல் இருக்காதா? அவளுக்கு பக்கத்து ஊரில காளியம்மன் கோயில் எவ்வளவு சிறப்பா நடக்குது... யானை ஊர்வலம் வாண வேடிக்கை, வண்ண விளக்குச் சோடினை... அட, இதைவிட... கடைத்தெரு காப்புச் சீப்பு, முட்டாசி, முறுக்கு கேள்விப்பட்டு நொந்து போனாள் கண்ணம்மா.

அவளும் நாலைஞ்சி நாளா கோயிலுக்குப் போக நினைத்தாலும் காதுல கழத்துல கையில போட என்ன இருக்கி,

ஏன்? அவளிட்ட இல்லையா? அழகான தோடு பூடுக் காப்பு மோதிரம் மல்லிகை மொட்டு மாலை சா கண்ணம்மா வெளிக்கிட்டாள் என்றால் தங்கத் தேவதைபோல பார்க்காத பயலுகளும் ஒரு தரம் திரும்பிப் பாத்திட்டுத்தான் போவனுகள் அப்படி ஒரு அழகு

அந்த நகை நட்டெல்லாத்தையும் கண்ணம்மாட தமையன் காரன் வெளிநாடு போகயாமென்று அவளிட்ட கெஞ்சிக்கூத்தாடி வாங்கி அடவு வைச்சிட்டுப் போனவன் போனவன் தான் இல்லாட்டி இவள் இப்பிடி குமுறிப் போய் நிற்பாளா.

ஊரில இருக்கிற குமருப் பொட்டயள் எல்லாம் சீவிச் சிங்காரிச்சிட்டுப் போகக்குள்ள இவள் மட்டும் அறுத்துக்களுவின மீன் மாதிரிப் போகலாமா?

“நகை போடாம கோயிலுக்கு எப்புடி போற என்ன? டிசைன்ல நகை போட்டிருக்காள் அந்தப் பட்டுச் சீலை சாக்கா இருக்கு இதைத்தானே பொம்புளையள் கோயில்ல பாக்குற”

பெருமூச்செறிந்தாள் கண்ணம்மா முன்பெல்லாம் கிராமப்புறங்கள் பத்தி நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பாட்டோடு தான் இருந்தது பய பக்தியோடு தான் கோயிலுக்குப் போனார்கள் ஆனால் இன்று நாகரீக மோகத்தால் நடமாடும் நகைக் கடைகளாக கிராமியப் பெண்களும் மாறிப் போனதற்கு கண்ணம்மா என்ன செய்வாள்.

பணமும் பொருளும் பகட்டும் தானே இன்றைய சமூகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது.

கோயிலுக்குப் போக முடியாத ஏக்கத்துடன் எழுந்த கண்ணம்மாவை “ஏய் கண்ணம்மா வாரியாடி கோயிலுக்குப் போவம்...” என்று கூப்பிட்டாள் தேவானை... அவளைச் சுற்றிலும் பல தோழிகள் பல வண்ண நகைகளின் அரசிகளாக.

தாயை எரித்து விடுவதைப் லே பார்க்கிறாள் கண்ணம்மா “தேவானை நீங்க போங்கடீ பிறகு வாரன்” என்று கூறியவளாக சட்டென்று உள்ளே போகிறாள் விசும்பலோடு

மகளின் கோபத்தையும் ஆவலையும் தீர்க்க முடியாதவளாக அன்னம்மா அசந்துபோய் நிற்கிறாள்.

“அன்னம் அடியேய் அன்னம்” வெளிக்கதவடியில் நின்று யாரோ? கூப்பிட்ட சத்தம் கேட்டதும் “ஓய்.... ஓய்... வாரன்” என்றபடி வெளியே ஓடி கதவைத் திறக்க அன்னம்மாட அண்ணனும், பொஞ்சாதியும் சிரித்தபடி.. “கூப்பிடுறம், கூப்பிடுறம் காது கேக்கலையா?...” என்ற அண்ணனை இடைமறித்து “சே... சே...” வாங்க வாங்க எனச் சிரிப்புடன் வரவேற்கிறாள் அன்னம்.

“அடியேய் கண்ணம்மா இஞ்ச ஓடி வந்து பாரு.... ஆரு... வாறாங்கன்று...” என்று அன்னம்மா சத்தமிட உள்ளேயிருந்து ஓடி வந்த கண்ணம்மா “அடே மாமாவும், மாமியும்....” என்று சின்னப் பெண்போல கை தட்டிச் சிரித்து அவர்கள் கொண்டு வந்த பையை வாங்கிக் கொள்கிறாள். மாலைப் பொழுதின் மன்மதக் காற்று வீச

எல்லோரும் வாசலில் அமர்ந்து கொள்கிறார்கள் “நாங்க கொழும்புக்குப் போக பஸ்ஸில வந்த புள்ள இந்தா இயினக்கி வரக்குள்ள காத்துப்பொயித்து இனி எங்க போற தடைவந்திட்டு காலைல போவமெண்டு இஞ்ச வந்த” என்கிறார் அண்ணன். ஓமென்று அவயும் தலையாட்டுறா” கண்ணம்மா சீட்டுப்புட்டென்று சோத்தக்கறிய ஆக்குவம் புள்ள மாமாக்கும் மாமிக்கும் முட்டையப் பொரிப்பம் என்று சொன்ன அன்னம்மாவை “மச்சாள் பார்த்து வேணாம் வேணாம் புள்ள நாங்க மரக்கறிதான் கோயில் நடக்குதெனுவா?” என்கிறாள்.

“ஓம் மாமி இஞ்சயும் காளி கோயில் நடக்குது நாங்களும் மரக்கறி தான்” இது கண்ணம்மா

“ஆ... அப்பா ஏன்புள்ள கோயிலுக்குப் போகல்ல” மாமி கேட்க மௌனமாக தாயைப் பார்க்கிறாள் கண்ணம்மா “அது மச்சாள்” என்றபடி நகைக் கதையை நடந்தபடி கூறி “நானென்ன செய்யிற மத்தியானமெல்லாம் குளறிட்டு கிடக்கிறாள் இஞ்ச நாங்க ஒருவருட்டயும் கேட்டுப் போறதும் இல்ல” கவலையுடன் அன்னம்மா சொல்ல,

“ஓ... அது தான் புள்ளட முகம் ஒரு சாதியா இருக்கி புள்ள இந்தா மாலை காப்பு தோடு கைச்செயின் எல்லாத்தையும் போட்டுப் போம்மா” மாமி தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கழட்டுகிறார் “இல்ல... இல்ல வேணாம் மாமி” கண்ணம்மா நாணப்பட்டுத் தலை குனிகிறாள்.

“போட்டுப் போம்மா குமருப்புள்ளயள் வெறுமையாப் போறதா இந்தா” மாமி கொடுக்க,

கண்ணம்மா கோயிலுக்குப் போகும் ஆசையில் வாங்கினாள். அப்பாடா பெரிய கவலை தீர்ந்தது... மனது மகிழ்ச்சியால் அலைபாய்ந்தது.

“புள்ள நீ கண்ணம்மாவை தனியா விடாம நீயும் கூடப் போயிட்டுவா?” என்றார் அண்ணன்.

“உங்களை விட்டுட்டு நான் எப்புடிப் போற...” இது அன்னம்மா.

“இஞ்ச பாரு மச்சாள் பாவம் அந்தப்புள்ள நீ கூட்டிட்டுப் போ... இருக்கிறதை சாப்பிடுவம் அவரு அண்ணனும் வருவார் தானே நீங்க வெளிக்கிடுங்க பூசையைப் பார்த்திட்டு வாற தானே” என்ற மாமியை கட்டிக் கொஞ்ச வேணும் போலிந்தது கண்ணம்மாவிற்கு.

“ஆகா கண்ணம்மா எவ்வளவு கெதியாக வெளிக்கிட்டுவிட்டாள் “வடிவாக இருக்கிறாய் புள்ள...” என்று புகழ்ந்தாள் மாமி தாயும் மகளும் கோயிலுக்குப் போனார்கள்.

வெளியே பெருத்த சத்தமாய் ஒப்பாரி வைத்து கத்துகின்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டெழுந்த மாமாவும் மாமியும் பதறியடித்து வெளியே ஓடிவர தாயும் மகளும் ஒப்பாரி வைத்து குளற சுற்றிலும் சலசலத்தபடி சிறு கூட்டம் “மாமி நகைகளை யெல்லாம் கள்ளன்... பறிச்சிட்டான் மாமி....” மாமியை கட்டிப்பிடித்து ஓ... வென்று கத்தினாள் “பஞ்சமா பாதகன் வரக்குள்ள கத்தியைக் காட்டி...” அன்னம்மா பதறிப் போய்த் துடிக்கிறாள்.

இருவரது உடல்களும் நடுங்கிச் சோர்கின்றன. நாலைஞ்சு லெட்சம் பெறுமதியான நகைகள் என அங்கு நின்றவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

கணவனின் முகத்தை மனைவி பார்க்கிறார் “கண்ணம்மா அழாதே...” மிக நிதானமாக அன்பாக மருமகளை நிமிர்த்தி “இஞ்ச பாரம்மா நீங்க நினைத்து அழுகிறபடி அவைகள் ஒன்றும் தங்க நகைகள் இல்லை எல்லாம் கிலிட் நகை... நான் இரவில் கொழும்புக்குப் போவதென்றால் இதுகளைத் தான் போட்டுப் போற நான். கள்ளன் காவாலிகள் பொம்பிளையளை மடக்கி நகைகளை பறிச்சிட்டுப் போறது தெரிந்தும் நாம அப்படி போறது பிளையம்மா நீ கவலைப்படாத தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று...” என்று சிரித்த மாமியைப் பார்த்து அந்த அழுகையிலும் நாணத்தோடு தலைகுனிகிறாள் கண்ணம்மா. எல்லோரும் வியந்துபோய் நிற்கிறார்கள்....! கிழக்கே...! பொழுது... விடிந்து வரம் வெள்ளாப்பு தெரிகிறது...! 

Comments