சவூதி அரேபியா: உண்மைகளை உலகறிய வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சவூதி அரேபியா: உண்மைகளை உலகறிய வேண்டும்

பேட்டி கண்டவர் மர்லின் மரிக்கார்

 

இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஹஜ்ஜும் ஒன்றாகும். இக்கடமையை செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்க்கையில் ஒரு தடவை நிறைவேற்றியாக வேண்டும். அதுவும் சவூதி அரேபியாவிலுள்ள மக்கா, மதீனா நகர்களுக்கு சென்று தான் இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.

அந்த வகையில் வருடா வருடம் இருபது இலட்சத்திற்கும் நாற்பது இலட்சத்திற்கும் இடைப்பட்ட முஸ்லிம்கள் உலகின் நாலாபுறங்களில் இருந்தும் வந்து மக்கா மதீனாவில் கூடி இக்கடமையை நிறைவேற்றுகின்றனர். இதன் அடிப்டையில் சுமார் 24 இலட்சம் முஸ்லிம்கள் இவ்வருடம் (2017) இக்கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

எனினும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தும் அதற்கான வாய்ப்பின்றி நிறையப் பேர் சமூகத்தில் உள்ளனர். இவ்வாறானவர்கள் தொடர்பில் இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கவனம் செலுத்திய அன்றைய சவூதி அரேபிய மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இதன் நிமித்தம் விஷேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தினார். அதுவே 'இரு புனித மஸ்ஜித்களின் காவலரது விருந்தினருக்காக ஹஜ் - உம்றா' என்ற வேலைத்திட்டமாகும்.

1997 முதல் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் வருடா வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் உம்றாவுக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்கின்றனர். அந்தவகையில் இவ்வருடம் இத்திட்டத்தின் கீழ் 3300 பேர் ஹஜ் உம்றாவுக்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டனர். அவர்களில் ஆயிரம் பேர் பலஸ்தீனர்கள். மற்றொரு 1000 பேர் எகிப்தியர்கள். ஏனைய 1300 பேரும் இலங்கை உள்ளிட்ட 80 நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் 30 பேர் இலங்கையர் ஆவர். பரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா அமைப்பின் சிபாரின் பேரில் இந்த முப்பது பேரில் ஒருவராக ஹஜ் உம்றா கடமையை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவனாவேன்.

'இரு புனித மஸ்ஜித்களின் காவலரது விருந்தினருக்காக ஹஜ் உம்றா' என்ற இவ்வேலைத்திட்டம் மிகப் பாரியது. வியக்கத்தக்கது. சவூதி அரேபிய மன்னரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரம், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் ஊடாக தனியான ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப்பாரிய திட்டத்திற்கென தனியான பத்திரிகையொன்றும் கூட வெளியிடப்பட்டு வருகின்றது.

அதனால் இவ்வேலைத்திட்டம் தொடர்பில் தமிழ் பேசும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இத்திட்டத்திற்கென அரபு - ஆங்கில மொழியில் வெளியிடப்படும் 'இஸ்திதாபா' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சஹ்பான் அத் தவாரியுடன் நேர்காணலொன்றை நடாத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. மக்கா, உம்முல் குரா வீதியில் அமைந்துள்ள அல் மர்ஜான் குரோம் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நேர்காணலை இங்கு தருகின்றேன்.

கேள்வி : இரு புனித மஸ்ஜித்களின் காவலரது விருந்தினருக்காக ஹஜ் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பம், அதன் நோக்கம் என்பன குறித்து சுருக்கமாக குறிப்பிட முடியுமா?

பதில்: ஆம். சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் மர்ஹும் பஹ்த் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் தான் இந்த விஷேட ஹஜ் திட்டத்தை 20 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக் கொண்டவர்களுக்கும், அக்காலப் பகுதியில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் ஹஜ், உம்றா செய்ய வாய்ப்பளிக்கும் நோக்குடன் தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இத்திட்டம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் 2006 ஆம் ஆண்டில் மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸ் மரணமடைந்தன் காரணத்தினால் இத்திட்டம் அவ்வருடம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. என்றாலும் அதன் பின் வந்த மன்னர் அப்துல்லாஹ்வும், தற்போதய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸும் இத்திட்டத்தைத் தம் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வருகின்றனர். சுமார் 20 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் மூலம் இற்றை வரையும் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த 42,000 பேர் ஹஜ், உம்றா செய்யும் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர்.

கேள்வி : இத்திட்டம் ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாகக் குறிப்பிடுங்கள்?

பதில் : இந்த ஹஜ் விஷேட திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் 1997 முதல் மூன்று வருடங்களும் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களும், சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பயனடைந்தனர். இதன் மூலம் வருடமொன்றுக்கு 1100 பேர் ஹஜ், உம்றா கடமையை நிறைவேற்றினர்.

எனினும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஹஜ் செய்யத் தகுதி பெற்றிருந்தும் அதற்கான வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு உதவும் வகையில் 2000 ஆம் ஆண்டில் தென் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும், 2001 ஆம் ஆண்டில் ஐரோப்பிய முஸ்லிம்களுக்கும், 2002 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் என்றபடி இத்திட்டத்தின் கீழ் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கோ அல்லது ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கோ இதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஆனால் 2003 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை மேலும் பரவலாக்கும் வகையில் உலகிலுள்ள 60 முதல் 70 வரையான நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டன. இத்திட்டம் 2006 ஆம் ஆண்டு தவிர்த்து 2007 வரையும் தொடராக முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும் 2008 ஆம் ஆண்டில் ஆசிய - ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் இத்திட்டத்தின் ஊடாக ஹஜ் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

அதன் பின்னர் உலகிலுள்ள எல்லா கண்டங்களையும் சேர்ந்த நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இத்திட்டத்தின் கீழ் ஹஜ், உம்றா செய்ய முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிப்பக்கப்படுகின்றது. அந்தவகையில் இவ்வருடம் இலங்கை உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாய்ப்பைப் பெற்று கொண்டனர்.

கேள்வி: இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அல்லது விஷேட இடமளித்தல் இடம்பெறுகின்றதா?

பதில்: நிச்சயமாக. 2012ஆம் ஆண்டு முதல் பலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் வருடமொன்றுக்கு 2000 பேர் படி ஹஜ் செய்யும் பாக்கியத்தை இத்திட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்டனர். இந்த வாய்ப்பு கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட்டது. இரண்டாவது ஐந்து வருடங்களில் வருடத்திற்கு ஆயிரம் பேர் படி ஹஜ் உம்றாவுக்கான வாய்ப்பு இத்திட்டத்தின் கீழ் பலஸ்தீனர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

கேள்வி : இத்திட்டத்தின் ஊடாக ஹஜ் உம்றாவுக்கென எவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்?

பதில்: ஹஜ் செய்யத் தகுதி இருந்தும் அதற்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிராதவர்கள் குறித்து இத்திட்டத்தின் கீழ் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அத்தோடு துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், உலமாக்கள் உட்பட சமூகத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குபவர்களுக்கும் இதற்கென வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் ஊடாக ஹஜ் உம்றா கடமைகளை நிறைவேற்றுவதற்காக சில நாடுகளில் அந்தந்த நாடுகளது அரசாங்கங்கள் ஊடாகவும், இன்னும் சில நாடுகளில் அந்நாடுகளில் மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் இஸ்லாமிய சமூக சேவை அமைப்புகள் ஊடாகவும் தெரிவுகள் இடம்பெறுகின்றன. அத்தோடு மக்கள் சேவையில் பிரபல்யம் பெற்று விளங்குபவர்களும் கூட இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள எமது நாட்டு தூதரகங்கள் ஒருங்கிணைப்பை மேற்கொள்கின்றது.

அதேநேரம் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை பலஸ்தீனில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஹஜ் உம்றாவுக்கான வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.

கேள்வி: இத்திட்டத்தின் கீழ் ஹஜ் உம்றாவுக்காகத் தெரிவு செய்யப்படுபவர்கள் பெற்றுக் கொள்ளும் வசதி, வாய்ப்புகள் தொடர்பில் குறிப்பிடுவதாயின்...

பதில்: இத்திட்டத்தின் கீழ் சவூதி அரேபியாவுக்கு வருகை தந்து உம்றா, ஹஜ் கடமையை நிறைவேற்றத் தேவையான சகல வசதிகளையும் சவூதி அரேபியாவே அளிக்கின்றது. குறிப்பாக உணவு, தங்குமிடம், விசா, விமான டிக்கட் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு உச்ச அளவில் சேவைகள் அளிக்கப்படுகின்றன. அதனால் தம் ஹஜ் மற்றும் உம்றாவை உரிய ஒழுங்கில் நிறைவேற்றிக் கொள்வது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதற்கு தேவையான வழிகாட்டல்கள் கூட வழங்கப்படும்.

இதற்கு மேலதிகமாக இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் உள்ள முக்கியத்துவம் மிக்க இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அவ்விடங்கள் அவர்களுக்கு காண்பிக்கப்படும். அந்தவகையில் இம்முறை மக்காவிலுள்ள கஃபா அரும்பொருட் காட்சியகத்தையும், கஃபாவுக்கான புடவை நெய்யப்படும் தொழிற்சாலையையும், மதீனாவில் உஹத் யுத்தம் இடம்பெற்ற மலைப் பிரதேசத்தையும், அந்த யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட 70 ஸஹாபாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தையும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது அமைத்த முதல் பள்ளிவாசலான குபா பள்ளிவாசலையும். மதீனாவிலுள்ள அல் குர்ஆன் அச்சகத்தையும் பார்வையிட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

கேள்வி: நிறைவாக, இந்த ஹஜ், உம்றா திட்டத்தின் ஊடாக சவூதி அரேபியா எதிர்பார்ப்பது என்ன?

பதில் : ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது பிரதான கடமை. இக்கடமையை நிறைவேற்றத் தகுதி பெற்றிருந்தும், அதற்கான வசதியைப் பெற்றிராதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை அளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். அதேநேரம் சவூதி அரேபியா எப்போதும் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டுவரும் ஒரு நாடாகும். அதனால் இஸ்லாம் குறித்தும், சவூதி அரேபியா குறித்தும், எமது மக்கள் தொடர்பாகவும் பரப்பட்டுள்ள தவறானதும் பிழையானதுமான செய்திகள் தொடர்பில் இத்திட்டத்தின் மூலம் தெளிவுகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இஸ்லாம் குறித்தும், சவூதி அரேபியா குறித்தும் மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயமும், நல்லபிப்பிராயமும் மேலும் வளர இத்திட்டம் பக்க துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

Comments