மீண்டும் பாக். மண்ணில் சர்வதேச போட்டிகள் | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் பாக். மண்ணில் சர்வதேச போட்டிகள்

சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச வீரர்கள் பங்குகொள்ளும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு லாகூர் மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியினரை மைதானம் நோக்கி ஏற்றிச் சென்ற பஸ் வண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதன் பின் அங்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டி வருகின்றன. இடைக்கிடை அங்கு போட்டிகள் நடாத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சர்வதேச அணிகளுடனும். ஐ. சி. சி. யுடன் பல முறை பேச்சுவார்த்தை நடாத்தியும் பாகிஸ்தான் சென்று போட்டிகளில் பங்குகொள்ள வீரர்கள் தயக்கம் காட்டினர். கடைசியாக சிம்பாப்வே அணி பாகிஸ்தான் மண்ணில் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அதன் பின் இந்த வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதியாட்டம் பல இழுபறிகளுக்கு மத்தியில் லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒரு சில சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்குகொண்டிருந்தனர்.

அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஐ. சி. சி. சம்பியன் கிண்ணத் தொடரில் சிறப்பாகச் செயற்பட்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அவ்வெற்றியின் பின் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் பத்திரிகையாளர் மாநாட்டில் எங்கள் நாட்டிலும் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள் என்று உருக்கமான ஒரு வேண்டுகோளை சர்வதேசத்துக்கு விடுததார்..

அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஐ.சி.சி.யுடன் பேச்சுவார்த்தைகயில் ஈடுபட்டது. ஐ. சி. சி. நிர்வாக அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தது. லாகூரில் நிலைகள் சாதகமாக உள்ளதால் அங்கு விளையாடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன் பின்னர் முதலில் உலக பதினொருவர் அணியை அங்கு சென்று விளையாட ஐ. சி. சி. அனுமதியளித்துள்ளது. அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் விளையாட தென்னாபிரிக்க வீரர் பெப் டு பிளஸி தலைமயில் 15 வீரர்கள் கொண்ட அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 12ம் திகதி பகலிரவுப் போட்டியாக லாகூர் கடாபி கிரிக்கெட் மைதானம்தில் நடைபெறவுள்ளது.

உலக அணி வீரர்கள்- பெப் டு பிளஸி, டேவிட் மில்லர், மொனி மோர்க்கல், இம்ரான் தாஹிர், ஹஸிம் அம்லா (தென்னாபிரிக்கா) திஸர பெரேரா (இலங்கை) போல் கொலிங்வூட், பென் கட்டிங் (இங்கிலாந்து), சாமுவேல் பத்ரி, டெரன் சமி (மேற்கிந்தியா), கிராண்ட் எலியட், டிம் பெயின் (நியூசிலாந்து) ஜோர்ஜ் பெய்லி (அவுஸ்திரேலியா), தமீம் இக்பால் (பங்களாதேஷ்).

போட்டி அட்டவணை

2017-.09-.12 1வது போட்டி லாகூர் இரவு 8.30

2017-.09-.13 2வது போட்டி லாகூர் இரவு 8.00

2017-.09-.15 3வது போட்டி லாகூர் இரவு 8.00

ஹில்மி சுஹைல் 

Comments