சிட்டகாங் டெஸ்டில் 13 விக்கெட் வீழ்த்தி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார் நாதன் | தினகரன் வாரமஞ்சரி

சிட்டகாங் டெஸ்டில் 13 விக்கெட் வீழ்த்தி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார் நாதன்

சிட்டகாங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நாதன் லயன் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்.

தற்போது சிட்டகாங்கில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்திய நாதன் லயன், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டும், இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 22 விக்கெட்டுக்களும் வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

2-வது டெஸ்டில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கண்டத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லயன். இதற்கு முன், கடந்த பெப்ரவரி மாதம் புனே மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது சாதனையாக இருந்தது.

அவுஸ்திரேலிய வீரர் புருஷ் ரெய்ட் கடைசியாக 1990-ல் இங்கிலாந்துக்கு எதிராக 13 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார். அதன்பின் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை லயன் பெற்றுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லயன். ஹெராத் பாகிஸ்தானுக்கு எதிராக 23 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். முத்தையா முரளீதரன் தென்ஆபிரிக்காவிற்கு எதிராக 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

அத்துடன இந்த வருடத்தில் 45 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் லயன் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 44 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர். 

Comments