இலங்கைக்கு சொந்த மண்ணில் பாரிய தோல்வி | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு சொந்த மண்ணில் பாரிய தோல்வி

கடந்த வாரம் முடிவுற்ற 20 க்கு 20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியுற்று இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் சந்தித்திராத ஒரு பாரிய தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி 20 க்கு 20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த இலங்கை இரசிகர்களுக்கு அதிலும் ஏமாற்றமே கிடைத்தது.

இந்தத் தோல்வியுடன் இத் தொடரில் நடைபெற்ற 9 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றது. இது வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிபெற்ற சிறந்த வெற்றியாகும். இதற்கு முன் அவுஸ்திரேலிய அணி அவர்களின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியை தொல்வியுற்ச் செய்திருந்தது. மற்றைய போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் ஆரம்பம் சிறப்பாக அமைந்திருந்தாலும் நடுவரிசையில் வந்த அனுபவ வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் சொதப்பியிருந்தனர்.

முக்கியமாக நடு வரிசையில் வரும் அனைத்து அனுபவ வீரர்களும் இம்மூவகைப் போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக திட்டமிட்டுச் செயற்படவில்லை என்பதை போட்டியை உன்னிப்பாக அவதானித்திருந்தால் புரியும். சில் சந்தர்ப்பங்களில் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஆடுகிறார்களா என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.

ஒருநாள் போட்டிகளில் அனுபவ வீரர்கள் நிலைதத்திருந்து ஆடினாலும் அவர்கள் அரைச் சதம் கடக்கும் போது 40 ஓவர்கள் முடிந்திருக்கும். பொதுவாக எல்லாப் போட்டிகளிலும் இந்நிலையே. குறிப்பாக கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் ஒரு ஜோடி 147 பந்துகளைச் சந்தித்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தது. இது ஒருநாள் போட்டியில் ஒரு அணி வெல்லக் கூடிய இணைப்பாட்டமா? அதுவும் பலம்வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக போதுமான ஓட்டங்களா? அதன் பிறகாவது அடித்தாடுவார்கள் என்று ஆர்வத்துடன் போட்டியைக் காண வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மேலும் 45 பந்துகளை வீணடித்து வெறும் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருவரும் ஆட்டமிழந்து சென்றனார். இப்படியிருக்கும் போது இறுதி வரிசையில் வரும் துடுப்பாட்ட வீரர்களுக்கு அடித்தாடவும் முடியாமல் தடுத்தாடவும் முடியாமல் திணறியதைக் காணக் கூடியதாக இருந்தது. இது இப்போட்டியில் மட்டுமல்ல. இதே நிலை எல்லா ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்ததைக் காணலாம். ஆனால் அனுபவ வீரர்கள் தாங்கள் அரைச்சதம் அடித்ததாக திருப்தியடையலாம். இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய ஒரு போட்டியில் கூட 240 ஓட்டங்களைக் கடந்து பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணி ஒருநாள் தொடரில் 5 சதங்கள் பெற இலங்கை அணியினரால் ஒரு சதம் கூடப் பெறமுடியவில்லை. மேலும் பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தொடர் முழுவதும் பிரகாசித்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களான மத்தியூஸ் 2, மலிங்க 3, புதுமுக வீரர் விஷ்வ பெர்னாண்டோ 3 என விக்கெட்டுகளையே வீழித்தியிருந்தனர்.

இந்திய-இலங்கைத் தொடர் இந்திய அணியின் சாதனைக்கு களமமைத்ததாக அமைந்து விட்டது. விராட் கோலியின் குறைந்த போட்டிகளில் 30 சத சாதனை, விக்கெட் காப்பாளரின் கூடிய ஆட்டமிழப்பு சாதனை 476 ஆட்டமிழப்புக்கள. விராட்கோஹ்லியின் 20 க்கு 20 போட்டளில் கூடிய ஆட்ட நாயகன் விருது, இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது, * இலங்கை-இந்திய அணிகள் மோதிய 3வது போட்டியில் ஹர்திக் பாண்டியா இலங்கை சுழற்பந்து விச்சாளர் புஷ்பகுமார வீசிய ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை பெற்றார். டெஸ்ட்போட்டி வரலாற்றில் ஒரு ஓவருக்குப் பெறப்பட்ட கூடிய ஓட்ட சாதனை, என பல சாதனைகள் படைக்க இலங்கை அணியோ மூவகைப் போட்டிகளிலும் மோசமான பெறுபேறுகளையே பெறமுடிந்துள்ளது.

2வது ஒருநாள் போட்டியில் அகில தனஞ்சய கைப்பற்றிய ஆறு விக்கெட்டுகள் மற்றும் லசித் மலிக்க இந்த ஒருநாள் தொடரில் 4வது போட்டியின் போது 300 விக்கெட் மைல்கல்லைத் தாண்டியமை என்பதைத் தவிர இலங்கை ரசிகர்களால் திருப்திப்பட இத் தொடரில் ஒன்றுமேயில்லை. தனஞ்சய 6 விக்கெட் கைப்பற்றிய போட்டியில் இந்திய கடைநிலை ஆட்டக்காரரான ஒரு பந்து வீச்சாளர் வெளுத்து வாங்கினார். அந்தளவுககு ஏனைய பந்து விச்சாளர் பந்து வீசியிருந்தனர்.

அதேபோல் அடுத்த போட்டியிலும் முக்கிய 4 விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்னளுக்கு வீழ்த்தப்பட்டும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் இலங்கை அணி திணறியதைப் பார்க்கும் போது முன்னாள் இலங்கை அணித் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

Comments