நிலையான தர்மம் | தினகரன் வாரமஞ்சரி

நிலையான தர்மம்

எச். எம். 
அப்துல் ஹமீட்
நாவலப்பிட்டி

ன்றொரு வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை, வானமெங்கும் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டதுடன் இளம் காற்றோடு கூடிய மழையும் இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது

நஸ்ரினா, ஸுபஹ் தொழுகையை முடித்துவிட்டு திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களையும் ஓதியதன் பின்னால் வழமை போல் தனது வேலைகளை கவனிப்பதற்காக சமையல் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

அச்சமயம், தோட்டத்து தக்கியா பள்ளியிலிருந்து ஒலிபெருக்கியில் ஜனாஸா அறிவித்தலொன்று ஒலித்துக் கொண்டிருந்தது.

“அல்ஹாஜ் உபைதுல்லாஹ் அவர்கள் காலமாகிவிட்டார். இன்னாலிலாவி வஇன்னா இலைஹி ராஜிஊன், அன்னார் ஹாஜியானி ஆமினாவின் அன்புக் கணவரும், பாயிஸ், பயாஸ், பஸ்மிலா ஆகியோரின் அருமைத் தந்தையும், காலிதீனின் சகோதரரும், முஹம்மது கியாஸ் ஸாலிஹீன் ஆகி யோரின் மைத்துனருமாவார். அன்னாரின் ஜனாஸா இன்று காலை பத்து முப்பது மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தக்கியா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்" என்று அவ்வறிவித்தல் நிறைவுறவே சமையலறை ஜன்னலினூடாக இதனை செவியுற்றுக் கொண்டிருந்த நஸ்ரினாவின் கண்களிலிருந்து மளமள வென்று கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

சென்ற வருடம் இதே தினத்தில்தான் நஸ்ரினாவின் தன்தை யூசுப் ஹாஜியார் திடீர் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களின் பின் இறையடி சேர்ந்தார்.

அப்பகுதி மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த யூசுப் ஹாஜியாரின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் சில வேளைகளில் நஸ்ரினா, தன்னையறியாமலேயே தேம்பி தேம்பி அழுவாள்.

அன்றும் தனது முந்தானையை சுருட்டியவாறு முகத்தை புதைத்துக் கொண்டு அழும் சப்தம் தாயார் ருக்கியா பீவியின் காதில் விழவே, மகளை நெருங்கி வந்து “இந்தாம்மா ஒன் வாப்பா மவுத்தாகி ஒரு வருஷமாகும், அத நெனச்சி நெனச்சி இப்படியெல்லாம் நீ அழுதுகிட்டு இருந்தா எனக்கும் மனசுல கவல கூடிவிட்டே வருகுதம்மா, கொஞ்ச நாளா நானும் நோயாளியாகிவிட்டேன். அதனாலதான் வாப்பாவும் ஹயாத்தோடு இருக்கும் போதே ஒனக்கு ஒரு நல்ல எடுத்து மாப்பிளயா பாத்து கலியாணத்த முடிச்சி வெச்சிட வேணும்னு முழு முயற்சி எடுத்தாரும்மா. அது மட்டுமா என்றோ ஒரு நாள் ஒனக்கு வரப்றே மாப்பிள்ளக்கி அற ஏக்கர் காணியோட வீடொன்றையும் கொடுப்பதாக முடிவு செஞ்சிருந்தாரும்மா!”

ஏதோ அல்லாஹ்ட நாட்டப்படி அவர் இந்த ஒலகத்த விட்டு மறஞ்சட்டாரு. ஒன் கலியாணத்த பாக்க அவருக்கு குடுத்து வெக்கல்ல அந்த ஒன்னு மட்டும் தாம்மா என மனச வாட்டிகிடடே இருக்கு. அவர் நமக்கு எந்த கொறைவுமே வெச்சிட்டு போகல்ல, அதனால மனசில கவல வரும்போதெல்லாம் வாப்பாவுக்காக அல்லாஹ் எடத்துல துவா கேட்டுக்கம்மா!” என்று கூறிக் கொண்டே அவ்விடத்தை விட்டும் நகன்று சென்றாள் தாயார் ருக்கியா பீவி.

நாவல் – நகரிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரெயில் பாதை வழியாக சிறிது தூரம் சென்றால் ‘மகாவலி கங்கை தென்படும் மலையகத்தின் மகிமையையும் சிறப்பையும் கொண்ட அந்நதியின் மேலாலுள்ள ரெயில் பாலத்தை கடந்து செல்லும் போது மறுபக்கமாக உள்ள இடம்தான் ஹெப்பி லென்ட் என்ற பெயரால் அழைக்கப்படும் பழ மரங்கள் நிறைந்த அழகிய தோட்டம்.

அவ்விடத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள தென்னந் தோட்டத்து மத்தியில்தான் யூசுப் ஹாஜியாரின் பழங்காலத்து அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய விசாலமான வீடும் அ​ைமந்துள்ளது.

அவ்வீட்டை அண்மிக்கும் போது முன்னால் பாலர் பாடசாலையும் அதற்கடுத்தாற் போல் சிறுவர் பூங்காவும் வீட்டின் பின்புறமாக சலசலவென ஓடிக் கொண்டிருக்கும் சிற்சிறு நீரோடைகளும் தூரத்தே பச்சை பசேலென கண்களை குளிரச் செய்திடும் விதத்தில் அமையப் பெற்றுள்ள தேயிலைச் செடிகளும் இயற்கைக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தன.

யூசுப் ஹாஜியார் பிற நலம் பேணும் நல்மனம் கொண்டவர், அவர் வாழும் காலத்தில் தனது காணியின் ஒரு பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றை அமைத்திருந்தார். அதில் பக்கத்து கிராமவாசிகள் பலருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியிருந்தார். அதன் பயனாக அப்பகுதியிலுள்ள பல குடும்பங்கள் தமது ஜீவியத்தை எவ்விதக் குறைபாடுகளுமின்றி கொண்டு செல்ல பேருதவியாக இருந்தது.

என்றாலும் யூசுப் ஹாஜியாரின் மறைவுக்குப் பின்னால் தொழிற்சாலையின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித நிலையை அடைந்துவிடவே அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் மனோ நிலையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, யூசுப் ஹாஜியாரின் பிள்ளைகள் மூவரில் மத்தவன் முஸாதிக், இரண்டாமவன் சித்தீக், இளையவள்தான் நஸ்ரினா.

முஸாதிக் திருமணமாகி மனைவி பிள்ளைகளுடன் கொழும்பில் வசிக்கின்றான்.

தலைநகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் காசாளராக பணியாற்றும் முஸாதிக், மாதம் ஓரிரு முறை விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து தாயார் மற்றும் குடும்பத்தினரின் சேமநலன்களை கேட்டு விசாரித்து விட்டுச் செல்வான்.

இரண்டாமவன் சித்தீக் தந்தையின் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகவும் பொறுப்பாளராகவும் கடமையாற்றி வந்தான். தங்கை நஸ்ரினாவின் திருமணம் முடிந்ததன் பின்னால் தான் மணம் முடிப்பதாக முடிவு செய்திருந்தான்.

நஸ்ரினா சிறு வயதிலேயெ இஸ்லாமிய மார்க்கக் கல்வியை சீராகக் கற்றிருந்தாள். அதேபோன்று பாடசாலை கல்வியையும் மிக்க ஆசையோடும் ஆர்வத்தோடும் கற்று நல்ல பெறுபேறுகளைப் பெற்று விளங்கினாள்.

தன் மகளை கண் போன்று பேணி பாதுகாத்து வளர்த்த தாயார் ருக்கியா பீவி மகள் நஸ்ரினாவுக்கு தேனையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருந்தாள்.

நஸ்ரினா எல்லா நிலைமைகளிலும் தன் நாவை பேணி வந்தாள். அதேபோன்று பிற ஆண்களின் பார்வையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதில மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்கினாள்.

அதனால், அப்பகுதியில் உள்ளவர்கள் பலரும் அவள் மீது பேரன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். அது அவளது எதிர்கால நல்வாழ்வுக்கு ஒரு உந்து சக்தியாகவும் உயர் நிலையை அடைவதற்கும் காரணமாகவும் இருந்தது.

இந்நிலையில், நஸ்ரினாவுக்கு பொருத்தமானதொரு மாப்பிள்ளையை தேடுவதில் சகோதரர்களான முஸாதிக்கும், சித்தீக்கும் மிகுந்த கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள், என்றாலும் அவர்களது முயற்சி வீண் போகவில்லை.

அக்காலத்திலிருந்தே யூசுப் ஹாஜியாரோடு நெருங்கி பழகி அங்கு வந்து போகும் கல்யாணத் தரகர் அமீர் கான், முஸாதிகை தொடர்பு கொண்டு கண்டி மாநகரில் தனக்கு மிகத் தெரிந்த மாப்பிள்ளை ஒருவர் இருப்பதாகவும் தனக்கு தெரிந்தளவில் நஸ்ரினாவுக்கு அவர் மிகப் பொருத்தமானவர் என்றும் கூறிடவே பிறிதொரு தினத்தில் இரு சாராரும் இணைந்து உரையாடி தத்தமது கருத்துக்களை பரிமாறியதில் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்லதொரு முடிவினை எட்டிய நிலையில் திருமணத்தை ஓரிரு மாதத்திற்குள் வைத்துக்கொள்ள தீர்மானித்தார்கள்.

அதேநேரம் மாப்பிள்ளைக்கு போதுமான அளவு சொத்துக்கள் இருப்பதால் பெண் வீட்டாரிமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் ‘மஹர்’ தொகையை செலுத்தி மணம் முடிப்பதாக உறுதியளித்தார்.

நாட்களும் பல நகர்ந்து செல்ல அன்றொரு நாள் நஸ்ரினா இஷா தொழுது விட்டு அறையிலிருந்து வெளியே வர வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அவ்வேளை, நிகழ்ச்சியை செவி மடுப்பதற்காக வானொலி பெட்டியருகே நெருங்கி வந்து அமர்ந்து கொண்டாள் நஸ்ரினா.

“நாம் வாழும் இப்பூமி நமக்கு தற்காலிகமானதே. இதனை நாம் ஒவ்வொருவரும அறிந்திருக்க வேண்டும். இது வருவோருக்கும் போவோருக்குமான ஒரு தரிப்பிடமாகும். நிரந்தரமாக எவரும் இங்கு வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.”

“மனிதனுக்கு மரணம் எந்த நேரத்திலும் வரலாம். அவனை படைப்பதற்கு முன்பே அல்லாஹுத்த ஆலாவால் முடிவு செய்யப்பட்ட விடயமாகும். எனவேதான் அல்லாஹுத்தஆலா தனது திருமறையிலே குல்லு நப்ஸின் தாஇதுல் மௌத் அதாவது அனைத்து உயிரினங்களும் ஒரு நாள் மரணத்தை அனுபவித்தே தீரும் என்பதே மேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்தின் கருத்தாகும்.

எனவே, எம்மை ஒரு நாள் தேடி வரக்கூடிய மவுத்தை எண்ணி நல் அமல் புரிந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக மாறுவதற்கு “நாம் அனைவரும் திட சங்கற்பம் கொள்வோமாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!”

திருக்குர்ஆன் விளக்கம் நிறைவுறவே அவ்வேளையில் வீட்டுத் தொலை பேசியில் ‘ரீங்... ரீங்... ரீ... ரீங்...’ என்று மணியோசை அலரியது. ரிஸீவரை கையிலெடுத்த நஸ்ரினா எதிர்முனையிலிருந்து தன் சகோதரர் முஸாதிக்கின் குரல் என்பதை அறிந்ததும்

“நாநா! உம்மாவும் நானும் நல்ல சுகமா இருக்கோம், நீங்க சொகமா இருக்கீங்களா நாநா? மதினிய கேட்டதா சொல்லுங்க, புள்ளகளயும் மிச்சம் மிச்சம் கேட்டதாகச் சொல்லுங்க, முடியுமுன்னா எல்லாருமா வந்துட்டுப் போக வாங்க, நாநா!”

“நான் ரொம்ப பிஸியா இருப்பதால திடீருன்னு வர முடியாம இருக்கு, நஸ்ரினா!”

“நல்லது நாநா, ரொம்ப தேங்ஸ்!”

“வன் மினிட் நஸ்ரினா! ஒரு முக்கியமான விஷயம்”

“அப்படி என்ன விஷயம் நாநா?”

“சொல்றேன் கேளு...! வாப்பா மவுத்தாவதற்கு முன்னால செல விஷயங்கள வஸிய்யத்தாக என்கிட்ட சொல்லியிருந்தாரு!”

“அப்படீன்னா?”

“அவரப்படாதேம்மா! என்றோ ஒரு நாள் ஒனக்கு வரப்போகும் மாப்பிள்ளக்கி அரை ஏக்கர் காணியோட வீடொன்றையும் சந்தோஷமாக கொடுத்துவிட சொன்னாரு.”

“வாப்பா அதப்பத்தி என்கிட்டயும் பல மொற சொல்லி இருக்காரு நாநா”

“இன்னுமொரு சந்தோஷமான விஷயம் நஸ்ரினா, ஒன்னய முடிக்கப் போற மாப்பிள ஸப்வான் தனக்கு போதுமமான வசதி வாய்ப்புகள் இருப்பதால் அந்த காணியயும் வீட்டையும் வாப்பாவுக்கு நன்மைகள் போய் சேரவேணும என்ற நல்நோக்கத்தோடு அல்லாஹ்வின் பெயரால தோட்டத்து பள்ளிக்கு ‘வக்பு’ செய்யப் போவதாக முடிவு செய்திருக்காரு.”

“அது மட்டுமல்ல ஏற்கனவே, புனித ஹஜ் கடமைய நெறவேத்த வேணும்டு நெனச்சிக்கிட்டிருந்த ஸப்வான், ஒன்ன முடிச்சதுக்குப் புறம் ரெண்டு பேருமா சேர்ந்து போவதற்கு முடிவு செய்திருக்காரு.”

“நல்லது! நாநா, ஜஸகல்லாஹு ஹைர்” என்று கூறிக்கொண்டு ரிஸீவரை வைத்த நஸ்ரினா மனம் பூரிப்படைந்த நிலையில் இரு கைகளையம் ஏந்தி,

“யா அல்லாஹ் நம்ம வாப்பாவுக்கு எப்படியொரு நற்பாக்கியம் கெடைக்குமுன்னு கனவுல கூட நான் நெனக்கல்ல தர்ம சிந்தையோடு வாழ்ந்துவிட்டு மறைந்து போன நம்ம வாப்பாவுக்கு நிலையான நன்மை தரக்கூடிய ஸதகதுல் ஜாரியாவாக மனமுவந்து தயாகம் செய்யத் துணிவு கொண்டு எனக்கு வரப்போகும் கணவர் ஸப்வானுக்கும் மறுமை வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது தகப்பனாருக்கும் எனது நல்வாழ்க்கு வழிசமைத்த குடும்பத்தாருககும், எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக ஆமீன்!” என்று பிரார்த்தனை புரிந்துவிட்டு, திரும்ப இதனை பக்கத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த தாயார் ருக்கியா பீவி ஆனந்தக் கண்ணீர் சிந்தியவாறு மகளை நெருங்கி வந்து வாரியணைத்துவிட்டு “அல்லாஹ் ஒனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணைவரை தந்துட்டான் கவலைப்படாதே மகளே” என்று ஆறுதல் வார்த்தை கூறவே, நஸ்ரினா புன்னகைபூத்த முகத்தோடு தன் வழமையான பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். 

Comments