பாதுகாப்பு இல்லாத பாதுகாப்பு ஊழியர்கள்! | தினகரன் வாரமஞ்சரி

பாதுகாப்பு இல்லாத பாதுகாப்பு ஊழியர்கள்!

பாதுகாப்பு ஊழியம் பல ரகம். அரச துறையில் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதென்றது வேற. முப்படை, பொலிஸ், மெய்ப்பாதுகாப்பு, கடலோரக் காவல், எல்லைக் காவல் எண்டு எத்தனையோ வகை இருக்கு. இங்கே நான் சொல்ல வாறது வேற.

கம்பனிகள்லயும் கூட்டுத்தாபனங்கள்லயும் பொலிஸுக்கு மேலதிகமாக் கடமையில நிற்கிறாங்களே அவங்களையும் இதிலை சேர்த்துக்கலாம். சேர்த்துக்கலாம்! ஆனால், இவங்களைவிடவும் தங்கடத் தொழில தெய்வமா மதிச்சு வேலை பார்த்துக்ெகாண்டிருக்கிற பல பேர் இருக்கிறாங்க. கடைகள்ல, தொடர் மாடிக் குடியிருப்புகள்ல, வீடுகள்ல எனப் பல இடங்கள்ல இந்தப் பாதுகாப்பு ஊழியர்கள் இருக்கிறாங்க. தனிப்பட்ட ரீதியிலை வீடுகள்ல பாதுகாப்பு ஊழியராகக் கடடையாற்றுறவங்களுக்கு ஓரளவிற்கு நிம்மதி என்றுகூடச் சொல்லலாம். ஆனால், பல நிறுவனங்கள்ல பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றுறவங்கள் பாடு பெரும்பாடு!

பெரும்பாலும் முப்படையிலையும் பொலிஸிலையும் வேலை செஞ்சு ஓய்வு பெற்றவங்கதான் இந்த உத்தியோகத்திற்கு வாறாங்க. சில நிறுவனங்கள்ல அவங்க பார்த்த உத்தியோகத்திற்கு; பதவிக்கு ஏற்ற மாதிரி பொறுப்பு குடுப்பாங்க; மரியாதையா நடத்துவாங்க. என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள்ல இந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் நிலைமை மிக மிகக் கொடுமையானது.

அரசாங்கத்திலை பெரிய பாதுகாப்பு பதவியிலை இருந்தவங்களும் இல்லாதவங்களும் பாதுகாப்புச் சேவை எண்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்குவாங்க. தொடங்கி, ஓய்வு பெற்ற பலரை அதிலை சேர்த்துக்ெகாள்வாங்க. பிறகு பாதுகாப்பு தேவையான நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் ஆட்களை அனுப்புவாங்க. நிறுவனங்களிடமிருந்து நாளாந்தம் ஓர் ஊழியருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பெற்றுக்ெகாள்ளுவாங்க. அதனால, பாதுகாப்புக் கடமையைச் செய்றவங்களுக்கு நேரடியாகச் சம்பளத்தைப் பெற்றுக்ெகாள்ள முடியாது. பாதுகாப்பு நிறுவனத்தை நடத்துறவர்தான் சம்பளம் குடுப்பார். எவ்வளவு தெரியுமா?

தலைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பெற்றுக்ெகாண்டாலும் இவங்களுக்குக் குடுக்கிறது ஐநூறு ரூபாய் முதல் எழுநூறு ரூபாய் வரைதான். தினமும் பன்னிரண்டு முதல் பதினைஞ்சு மணித்தியாலம் வரை வேலை பார்க்கணும். ஓவர் ரைம் கிடையாது. விடுமுறை கிடையாது! வீட்டுக்காரங்களும் கடைக்காரங்களும் நிம்மதியாக உறங்குறதுக்காக இந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்மார் கண் விழிச்சு இருக்க வேணும். இத்தனைக்கும் அவங்களுக்குத் ​தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து குடுக்க மாட்டாங்க. இப்படி பாதுகாப்பு இல்லாமல் பாதுகாப்பு உத்தியோகம் பார்க்கிறவர் யாருடையதோ கணவர், அப்பா, அண்ணா, தம்பியாகத்தானே இருப்பார். இவங்களுக்கு இத்தனை பந்தங்கள் இருந்தும் அநாதரவாக இரவில் கண் விழிச்சுக் கடமையாற்றுவது யாருக்காக?

எனக்குத் தெரிந்த ஒருவர், அரசாங்கத்திலை பெரிய உத்தியோகம் பார்த்தவர். வயசு வாறத்துக்கு முந்தியே பென்சன் எடுத்திட்டார். உடனே தொடங்கினது ஒரு பாதுகாப்பு நிறுவனம். ஆட்களைத் திரட்டிக்ெகாண்டு செம்மையாக உழைச்சார். கடைகளுக்கு இரவிலை போய் றிப்போட் பண்ணிக் கையெழுத்துப்போட்டிட்டு வர வேணும். இவர் இல்லை, இவரோட பாதுகாப்பு ஊழியர்கள். இவர் அவங்களைச் சரியாகக் கவனிக்கவில்லைபோலும். நகரத்திலை சில கடைகள்ல இரவிலை களவு போனதாக முறைப்பாடு வந்திருக்குது. விசயம் பிடிபடவில்லை. கடைசியிலை பார்த்தால், இவரோட செக்யூரிட்டி ஆட்கள் சிலர் இந்தக் களவிலை சம்பந்தப்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கு. மனிசன் பிறகு நிறுவனத்தையே பூட்டிப்போட்டார். நமக்கு ஏன் வேண்டாத வேலை என்று.

இன்னொரு சந்தர்ப்பத்திலை நகரிலை உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு 'வீடு செல்லும்போது' போனேன். நிறுவனத்தின் நுழைவாயிலில் ஓர் உத்தியோகத்தர். ஹலோ! நீங்கள் இன்னார்தானே? என்றார். ஆம், என்றேன். அப்ப, உங்களுக்கு இன்னாரைத் தெரியுமா? என்றார். ஓம் தெரியுமே என்றேன். அவரின் கணித வாத்தியார் நான் தான்! என்றார். அப்படியா! ஏன் சேர், என்ன நடந்தது, நீங்கள் எப்படி இங்கே? என்றேன். என்ன செய்ய, எல்லாம் தலையெழுத்துத்தான். ஓய்வு பெற்றிட்டன். வேலையொன்றும் கிடைக்கல்ல. ரியூசன் குடுத்தன்; அதுவும் சரிப்பட்டு வரல்ல. இங்கே ஆள் தேவை எண்டு சொன்னாங்கள், வந்திட்டன். எனக்கு என்னவோ போல் இருந்தது. பாதுகாப்பு உத்தியோகம் ஒன்றும் குறைவானது அல்ல. என்றாலும் அவரை ஓர் ஆசிரியராகப் பார்த்தவர்களுக்குச் சற்றுக் கடினமாகத்தானே இருக்கும். வரும் வாடிக்கையாளர்கள் எத்தனை ரகத்திலை இருப்பாங்க. அவங்களுக்கு இவர் ஆசிரியர் என்று தெரியுமா என்ன. கால் கடுக்க நிற்க வேண்டும். கடமையே கண்ணாக இருக்க வேண்டும். எப்படி தம்மை வருத்தி உழைத்தாலும் அவங்களுக்குக் கொடுப்பது மிகச் சொற்ப சம்பளம் என்பது கவலைக்குரிய விசயம் இல்லையா?

இப்படி எந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தரிட்ட நீங்கள் கதைச்சுப் பார்த்தாலும் அவங்கடை நிலைமை வேதனையும் வலியும் நிறைந்ததாகவே இருக்கும். ஆகவே, பாதுகாப்பு ஊழியர்கள் எங்குக் கடமையில் இருந்தாலும் அவங்கள மனிதாபிமானத்தோட நடத்துங்க. சில நிறுவனங்கள்ல பைகளக் குடுத்திட்டுட் டோக்கன் வாங்கிறவங்களும் சண்டை பிடிப்பாங்க; திட்டுவாங்க. அவங்க வாங்கிற சம்பளத்திற்கு எங்களிட்ட ஏச்சும் வாங்க வேணுமா? யோசிச்சுப் பாருங்க! 

Comments