தமிழ் வேட்பாளர்கள் ஒன்றுபடுவதன் மூலமே இரத்தினபுரியில் பிரதிநிதித்துவத்தை பெற முடியும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் வேட்பாளர்கள் ஒன்றுபடுவதன் மூலமே இரத்தினபுரியில் பிரதிநிதித்துவத்தை பெற முடியும்

எம்.சந்திரகுமார்,

இறக்குவானை

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான அரசியல் கட்சிகளிலுள்ள தமிழ் அமைப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் புத்தி ஜீவிகளின் கலந்துரையாடல் அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.இவர்களிடம் கருத்துக்கள் பறிமாறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர்களின் நிலைப்பாடுகள் என்ன?என்பது ஒருபுறமிருக்க இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை இந்தக் கலந்துரையாடலில் காணக்கூடியதாகவிருந்தது.

மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது சம்பந்தமான கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் தலைமையேற்று கருத்தாடலைத் தொடக்கி வைத்தார்.

செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபை கலைக்கப்படலாம். எனவே இத்தேர்தலில் போட்டியிட கட்சி மற்றும் தொழிற்சங்க பேதங்களை மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்று பட்டு பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் நிக் ஷன் சூரியகுமார், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரொஹான் குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் பாபு கண்ணன் ஆகியோர் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியாக கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட இரத்தினபுரி மாவட்ட அரசியல் ரீதியான நலன் விரும்பிகள், நகர வர்த்தகர்கள், தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள் உட்பட சமய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்தால் தமிழ் மக்களுக்குப் பல சேவைகளை ஆற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும், தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்கான முயற்சி இன்னனும் கைகூடவில்லை என்று கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் பிரவேசங்களின் முன்மொழிவுகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாகாண சபை தேர்தலில் மக்கள் சிந்தித்து ஒற்றுமையுடன் வாக்களித்தால் சப்ரகமுவ மாகாண திற்கு இரு தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகினர்.

எனவே, எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்யலாம் .இதனால் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றிக் கொடுக்க முடியும்.

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேஉள்ளது. நிரந்தர தீர்வுகள் கிடையாது. சிறுவர் அபிவிருத்தி நிலையம், முன்பள்ளி, காணி மற்றும் காணி உறுதிப் பாத்திரம், வீதி அபிவிருத்தி, மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகளை திறத்தல், தனி வீட்டுத்திட்டம் கல்வி பிரச்சினைகள் எனப் பல்வேறு பிரச்சினைகளைத் தோட்டத் தொழிலாளர்கள் முன் வைக்கின்றனர்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி வழங்குதல் வீடமைப்பு திட்டம் நடைமுறைப் படுதுதுவதிலும் தாமதமாகவே உள்ளது.

அரசியலுக்கு போட்டி போட்டுக் கொண்டு வருதலும் அமைச்சர் பதவிக்கு போட்டி போட்டுக் கொண்டு பதவிகளை பெற்றுக் கொண்டு பாரபட்சம் காட்டுவது தொழிற்சங்கத்தில் இணைந்தால் மாத்திரமே வீடமைப்புத் திட்டம் என கூறுவது தவிர்க்க பட வேண்டும். சகலரையும் ஓரே விதத்தில் பார்க்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அரசியல் தலைமைத்துவம் இவர்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சம்பந்தமாக தமிழ் கட்சிகள் சார்பில் தெரிவிக்கும்போது

1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு 20 ஆயிரம் விருப்பு வாக்குகளைப்பெற்றேன். 2001 இல் நடை பெற்ற பாராளுமன்ற பொது தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு 16 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றேன் 2015 ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு 5 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றேன், ஆனால் வெற்றி பெறவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சப்ரகமுவ மாகாண சபைக்கு மயில் சின்னத்தில் 1998இல் போட்டியிட்டு மக்களின் விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று சப்ரகமுவ மாகாண சபைக்கு தெரிவாகினேன்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்று சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகினேன் என்பதை பெருமையுடன் கூற விரும்புகின்றேன்.

எனவே, தனிக் கட்சியில் சிறுபான்மையினர் போட்டியிடுவதன் மூலமே வெற்றி பெற முடியும் .

பொதுவாக எல்லா கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள், முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்கு வார்கள். அதே போல் சிங்கள மக்கள் சார்பில் சிங்கள வேட்பாளர்களும் களம் இறங்குவார்கள்.

நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கு ம் உள்ளூராட்சி மன்ற தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் எமது மக்களின் தேவைகளை நிறை வேற்ற முடியும்

இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

பிரதியமைச்சர்கள், அமைச்சர்கள் இருந்த போதும் தமிழ் மக்கள் நகரத்திலும் கிராமத்திலும் தோட்ட த்திலும் வாழ்கின்றனர். இவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. ஆனால், சப்ரகமுவ மாகாண சபையினூடாக தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளைச் செய்து கொடுத்துள்ளேன். எனக்குக் கிடைத்த நிதியில் பல்வேறு அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். ஆனால், வெளிவருவதில்லை

சிலர் அரசியல் ரீதியாக என்ன செய்துள்ளார்கள்? அரசியல் இலாபம் தேடுவதற்காக பொய் கூறுவதோடு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

இன்று தோட்ட தொழிலாளர்கள் மிக கஷ்டத்தின் மத்தியிலே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி. வரட்சி நிவாரணம் இல்லை. மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளவர்களுக்கு முறையான வேலைத்திட்டம் இல்லை. சலுகைகள் கிடைப்பதில்லை.

இவர்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. தோட்ட நிர்வாகம் அல்லது கம்பனியரிடம் அனுமதி பெற வேண்டும்.

எனவே நாம் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Comments