பொன்சேக்காவின் கருத்து தொடர்பில் உடன் கவனம் தேவை | தினகரன் வாரமஞ்சரி

பொன்சேக்காவின் கருத்து தொடர்பில் உடன் கவனம் தேவை

ஜனாதிபதி,  பிரதமரிடம்  ராம் கோரிக்கை

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா யுத்தக்குற்றம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதியாகவிருந்த, ஜகத் ஜயசூரிய தொடர்பில் கருத்து வெளியிடும் போது யுத்தத்தில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்திலே மனித உரிமைகளை மீறும் வகையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. சர்வதேச ரீதியாகவும் அழுத்தங்கள் தொடர்ந்தும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் பொறுப்புக்கூறுவதனை வலியுறுத்தும் வகையிலான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் தமக்கான நியாயம் கிடைக்கும் என இன்றும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் தேசிய இனமான தமிழினத்திற்கு நியாயம் வழங்கவேண்டியதிலிருந்து பொறுப்புள்ள அரசாங்கம் விலகி நிற்கமுடியாது.

ஆகவே அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக முதலில் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அது குறித்து உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும். உண்மைகள் கண்டறியப்பட்டு அதற்குரிய வகையில் சட்ட ரீதியாக நீதி நிலைநாட்டப்படவேண்டும்.

இந்த செயற்பாட்டினை முன்னெடுப்பதாயின் உரிய சாட்சியங்கள் அவசியமாகின்றன.

ஏற்கனவே சர்வதேச விசாரணையொன்றின் மூலம் தான் இராணுவத்தினரின் புனிதத்தினை வெளிப்படுத்த முடியும் எனக் கூறிவந்த சரத் பொன்சேகா தற்போது பிரேசிலுக்கான முன்னாள் தூதுவராக செயற்ட்ட ஜெனரல் ஜெகத் சூரியவுக்கு எதிரான நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட்டால் அதில் சாட்சியமளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகாவுக்கு எதிராக பிரேசிலில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆகவே உண்மையில் ஜெகத் ஜயசூரிய விடயத்தில் பொன்சேகா குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் உடன் கவனம் செலுத்தி என்ன நடந்துள்ளது என்பதை அறிய வேண்டும். தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து உரிய விசாரணைஊடாக பாராபட்சமின்றி நீதி நிலைநாட்பட வேண்டியது அவசியமாகும்.

இதுவே தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு தோ​ேளாடு தோளாக நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆட்சியில் உள்ள அரசாங்கம் செய்யும் பரிகாரமாக அமையும். ஆகவே தொடர்ந்தும் காலதாமதத்தினை செய்யாது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. 

 

Comments