ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 2019 வரை அமெரிக்கா ஒத்துழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 2019 வரை அமெரிக்கா ஒத்துழைப்பு

இலங்கையின் 2020 வரையான முன்னேற்றச் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் அதேநேரம் 3.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கத் தயாரென்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் பதில் உதவிச் செயலாளர் எலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது நாட்டில் நேரில் கண்ட முன்னேற்றகரமான செயற்பாடுகளின் அடிப்படையில் இந்நிதியுதவியை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு- FY 2018 வரவு செலவுத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதா வது-,

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்காக நடத்தப்பட்ட தேர்தலைத் தொடர்ந்து

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இலங்கையின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பக்கபலமாக இருக்கிறது. இந்த ஒத்துழைப்பு பொருளாதார அபிவிருத்தி, ஆட்சி,வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து நீடிக்கப்படும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பிரேணையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்காக நாம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். இப்பிரேரணையானது இலங்கையில் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்று வந்த வன்முறைகள், சீர்கேடுகள் என்பவற்றை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசியலமைப்பு, சட்டம்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மறுசீரமைப்புக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

மத்திய அரசாங்கத்திலிருந்து இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுக்கு கூடுதல் நிர்வாக பலத்தை வழங்கும் வகையிலான அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரம் மற்றும் செயற்பாடுகள் கொண்டதாக மாற்றியமைத்தல்.யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்குதல், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகமொன்றை ஸ்தாபித்தல், உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான பொறிமுறை ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கு இப்பிரேரணை அழுத்தம் கொடுத்துள்ளது.இவை 2019 மார்ச் வரை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்.

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கூட்டு நல்லிக்க அரசாங்கம் அமெரிக்காவுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை தனது இலக்ைக நோக்கி மேலும் உறுதியான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதனை நாம் கண்டறிந்துள்ளோம்.

இதனடிப்படையில் FY 2018 வரவு செலவுத் திட்டத்துக்கமைய 2020 வரை இலங்கையில் எவ்வித பாதிப்புக்களுமின்றிய முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கென 3.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.

தூதுவர் எலிஸ் வெல்ஸ் இலங்கையைப் பற்றி உரை நிகழ்த்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். அவர் தெற்காசியாவின் இந்தியா, பங்களாதேஷ் , நேபாளம்,மாலைத்தீவு

ஆகிய நாடுகள் பற்றி உரை நிகழ்த்தியிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.